அவனும் அவளும்: 006
” ஏன் இதை என்னிடம் இருந்து மறைச்சீங்க ? ” – அவளின் இந்த வீடு, குழந்தைகள் அதிரும் கேள்விக்கு அவன் எங்கோ பார்த்துக்கொண்டிருப்பான். பதில் சொல்ல மாட்டான். பதில் சொல்ல முடியாமல் அல்ல. ஏன் உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்கிற வெளி தெரியும் ஆணவத்தில் !
அது ஏன் என்று தெரியவில்லை. வெளியில் ஏதோ ஒரு பெண்ணை அவனுக்கு பிடித்து போகும். அங்கிருந்து பொய் சொல்ல ஆரம்பிப்பான். முதலில் வீட்டிற்கு தாமதமாய் வருவான். சாதாரண கேள்விக்கெல்லாம் திருட்டு முழி முழிப்பான். ஒன்றுமே நடந்திருக்காது, ஆனால் அவளை கொஞ்சுவான். அவள் இரண்டு வருடத்திற்கு முன் கேட்ட ஏதோ ஒன்றை அவளுக்காகவே காத்திருந்து வாங்கியதாக சொல்வான். அமேசான் ல் இருந்து திடீர் gift எல்லாம் வரும். Phone ல் தேவை இல்லாமல் கரிசனம் காட்டுவான். Office இல்லா நாட்களிலும் அலுவல் காரணம் என்று ஓடுவான். தனியாக அறைக்குள் அமர்ந்து யாருடனோ பேசுவான், சிரிப்பான். அவள் கூப்பிட்டால் office ல பயங்கர வேலை என்பான். ஆனால் அதே timing ல் அந்த வெளிப்பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பான். ஒட்டவே ஒட்டாத, கேவலமான, வழிந்து கொண்டிருக்கும் romance செய்வான். அங்கேதான் அவள் சந்தேகிப்பாள்.
ஏன் அவன் வெளியில் பெண்ணை தேடுகிறான் என்பதற்கு உலகம் அவளையே குறை சொல்லும். வித்தியாசமான உலகம் இது. ‘ பொம்பள சரியா இருந்தா ஆம்பள ஏன் வெளியே போறான் ” என்று ஒரு நியாயமற்ற, கணவன் மனைவி உறவின் நுணுக்கங்கள் புரியாத, அவளை மீண்டும் கூட்டமாக ஒன்று சேர்ந்து அடித்து கீழே தள்ளும் திறன் படைத்த வரிகளை உலகம் கையில் எடுக்கும். அவள் திடீரென்ற இந்த படையெடுப்பில் இடிந்து போவாள். தன் படுக்கை அறை public மைதானமாக மாறுவதை பார்த்து விக்கித்து நிற்பாள். வந்தவன் போனவெனெல்லாம் அறிவுரை என்ற பெயரில் அந்த மைதானத்தை பார்க்க முயற்சி செய்வான். அவனின் வெளி தொடர்புக்கு அவளின் அந்தரங்கங்க வாழ்க்கையே காரணம் என்ற பொய் ஒரு சமூகத்தால் பேசப்படும். அவள் மேற்படி சரியாக இல்லையோ என்ற மறைந்து நிற்கும் தொனி வேறு. அவன் வெளியே செல்ல அவள் காரணம் !
உண்மை தெரிந்தவுடன் அவன் வேறு மாதிரி ஆவான். ‘ஆம். இன்னொரு தொடர்பு இருக்கு ‘ என்று வீர வசனம் பேசுவான். ‘ நீ சரியா இருந்தா நான் ஏன் வெளியில போறேன் ‘ என்று உலக நியாயம் பேசுவான். ‘வீட்டிற்கு வந்தால் எப்ப பார்த்தாலும் எதையாவது பேசிக்கொண்டே இருந்தால் எப்படி – எனக்கு ஒரு ஆறுதல் தேவை ‘என்று stress management theory எல்லாம் பேசுவான். அவனின் extra marital affairs க்கு நிச்சயமாய் அவள் சரியா இல்லாததே காரணம் என்று எல்லா விதத்திலும் முயற்சிப்பான். எப்பவோ எங்கேயோ அவள் பேசிய, வரம்பை கொஞ்சம் மீறிய, ஒற்றை வரியை, தன் வெளியுலக பயணத்தின் ஆரம்ப புள்ளி என்பான். அது ஒரு இரண்டு வருடத்திற்கு முன்பானதாக இருக்கும். இரண்டு வருடமாக அவன் அவளிடம் நடித்துக்கொண்டிருந்தான் என்பதே அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கும். இதற்குள் உலகம் அவளுக்கு advice செய்ய ஆரம்பிக்கும். இருப்பதிலேயே கேவலமான advice ‘ அனுசரித்து போ ‘. அதன் உண்மையான பின்புறம் … ‘ அணு அணுவாக சரிந்து போ – ஆணை பகைத்து கொள்ளாதே ‘ என்பதே.
அவள் கொஞ்சம் யோசிப்பாள். ஒருவேளை நாம் தான் கொஞ்சம் over ஓ என்று தனக்குள் கேள்வி எழுப்புவாள். அந்த ஒரு புள்ளியில் அவன் capitalize செய்வான். Mark score செய்ய முயற்சிப்பான். கணவன் மனைவி உறவில் ஒரு பிரச்சினை எனில் வெளியில் போகாமல் என்ன செய்வது என்று அவளை சுற்றி எல்லோரையும் பேச வைப்பான். அவளின் குழப்பம் அவனின் வெளியுலக படையெடுப்பின் நியாய முதலீடு.
சில அவள்கள் ஒரே நொடியில் bye சொல்வார்கள். அவள்கள் சரியாக இருப்பதால், அவன் சரியில்லாத எந்த காரணத்தையும் வாங்க மாட்டார்கள். குழந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கிளம்புவார்கள். ‘நான் அப்படி இருந்தால் நீ இதையே சொல்வியா ? ‘ என்று உலகத்திடம் அவள்கள் கேட்டுவிட்டு நடையை காட்டுவார்கள். இந்த தையிரியம் இல்லாத அவள்கள் அவனை ‘வெளியுலக அவனுடன்‘ ஒத்துக்கொள்வது கண்ணெதிரே நடக்கும். எந்த ஊர் முன் அவன் ஒருவனுக்கு ஒருத்தி என்று தாலி கட்டினானோ அந்த ஊர் முன்னே இது நடப்பதை, அதே ஊர் கண்டும் காணாமல் இருக்கும். கேட்டால் ‘ அவள் சரியில்லை ‘ என்று வாதிடும். சாட்சிகள் தீர்ப்புகள் சொல்லும் காலம் இது.
அவன் நல்லவன், அவன் அப்படி எல்லாம் இருக்க மாட்டான், தப்பு செய்ய வாய்ப்பில்லை என்கிற நம்பிக்கை தான் அவனுக்கு advantage. வீட்டிற்குள் அவள் இருப்பது அவனின் இன்னொரு advantage. ஆனால் இவ்வளவும் கடந்து இயற்கை அவளுக்கு தகவல் சொல்லிக்கொண்டே இருக்கும். அவள் அந்த தகவல்களை கவனிப்பதின் தாமதம் அவனின் வெளிவிளையாட்டின் மூலதனம்.
‘இல்லையே.. என் அவன் சரியாக இருக்கிறானே … அப்படி எல்லாம் இல்லையே ‘என்று சொல்லும் அவள்களுக்கு, கடைசி நாள் வரை அப்படியே நினைக்கும் வாழ்க்கை கிடைக்க முழு வாழ்த்துக்கள்.