அவனும் அவளும் – 002
“ஒரு முன்னூறு ரூபாய் வேண்டும் “
என்று கேட்கும்போது தன்மானம் துடிக்கும். வீட்டிற்கு தான் என்றாலும் ஏன் கேட்டு வாங்க வேண்டும் என்று உள்ளே கோபம் கொப்புளிக்கும். அதே நேரத்தில் அவன் ஒரு கேள்வி கேட்பான் ‘ எதற்கு ? ‘. தன்மானம் இன்னும் நொறுங்கும். கோபம் இப்போது வெளியே வரும். ‘ ஏன் என் மேல் நம்பிக்கை இல்லையா ? வீட்டிற்கு தான் கேட்கிறேன். எனக்கல்ல … ‘ என்று சொல்லும்போது அழுகையாக வரும். அவன் முறைத்து விட்டு கொடுப்பான். கை கீழே வைத்து வாங்கும்போது ‘ உனக்கெல்லாம் நேரம்டா ‘ என்று தோன்றும். அதே நேரம் ‘ நான் ஏன் இப்படி ஆனேன் ‘ என்றும் தோன்றும். ஆனால் … கொஞ்சம் கொஞ்சமாய் இது பழகி விடும். அல்லது அவன் பழக்கி விடுவான். ‘காசுக்கு‘ கை நீட்டுதல் எவ்வளவு அவமானம் என்பது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் வரும்போது தோன்றும். ஒரு நாள் இரண்டு நாள் கோபம் வரும். அப்புறம் ‘ என்ன செய்வது ‘ என்று அமைதியாகிவிடும்.
இந்த உலகின் கொடுமையான தருணம் ‘காசுக்கு‘ நிற்பது. ( அப்படி எல்லாம் இல்லை. குடும்பம்னா நாலும் இருக்கும். அனுசரிக்கணும் … என்று சொல்பவர்கள் இதோடு படிப்பதை நிறுத்தி கொள்ளலாம் ). உழைத்து விட்டு வரும் ஒரு தொழிலாளி ‘ காசுக்கு ‘ நிற்கும்போது …. தோன்றும் வலியை இன்னொரு தொழிலாளி மட்டுமே உணர்வான். அதுபோல் நாள் முழுக்க வீட்டு வேலை பார்த்த பின், (அவ எந்த வேலையும் பார்க்கவில்லை என்று சொல்லும் அவன்கள் அவளை மூன்று மாதம் அவள் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும். அப்போது புரியும் .. அவள் செய்த வேலைகள் என்னவென்று ! ) ‘காசுக்கு‘ நிற்கும்போது வரும் எரிச்சல் சாதாரணமானதல்ல. பல குடும்பங்களில் வெளியில் சொல்ல முடியா பிரச்சினைகளுக்கு .. ‘ காசுக்கு ‘ நிற்பதும் ஒரு காரணம். அவன் அதை யோசிப்பதே இல்லை. நூறு ரூபாய் கொடுக்க முறைக்கும் அவன், நண்பர்களுடன் ஒரு full இரண்டு quarter என்று வாழ்வான். ஒரு star hotel ல் நண்பர்களை அழைத்து treat தருவான். கேட்டால் வியாபாரம் பற்றி அவளுக்கு என்ன தெரியும் என்று சமாளிப்பான். அவன் அணியும் முகமூடிகளில் மிக easy யான, கேவலமான முகமூடி இது.
அவள் இல்லை எனில் … வீடு கூட்ட ஒரு பெண், துணி துவைக்க ஒரு பெண் ( washing machine என்றாலும் ), குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஒரு பெண், அவன் உடல் தேவைகளுக்கு ஒரு பெண்… இப்படி அவனுக்கு தேவைப்படும். இது அவனுக்கு நன்றாகவே தெரியும். அவ்வளவு பெண்களின் பொறுப்புகளையும் அவள் ஒருத்தி செய்கிறாள் என்பதை அவன் உணர்வான். ஆனால் அவளுக்கு ‘காசு‘ கொடுப்பது என்று வரும்போது அவனுக்கு பிரச்சினை. ஏன் ?. அவனுக்கு ஒரே ஒரு காரணம்தான். அவள் கையில் பணம் சேர்ந்து விடக் கூடாது. சேர்ந்தால் ..? அவனை மதிக்காது போய்விட்டால் ? அதுவே அவன் அவளை வெளியே அனுப்ப மறுக்க காரணம். அவள் வெளியே சென்று வேலை பார்க்க ஆரம்பித்து, பணம் சேர்ந்துவிட்டால், அவள் நம்மை மதிக்க மாட்டாள் என்பது அவனின் பயம். அவன் அதை வெளிக்காட்ட முடியாமல், முறைத்து சமாளிக்கிறான். ஆக … ‘ காசுக்கு ‘நிற்க வைப்பது, என்பது … எந்த சூழ்நிலையிலும், அவள் மனதில் ‘பொருளாதார நம்பிக்கை‘ வந்துவிடவே கூடாது.’ என்பதற்காகவே. அவன் நோக்கம் அவ்வளவே. ஆகவே அவள், அவன்கள் உலகில் ‘பொருளாதார அடிமை‘ என்றழைக்கப்படுவாள்.
அவள் வேலைக்கு apply செய்கிறாள். அவன் குடும்ப சூழ்நிலைகளை கை காட்டுகிறான். ( தன்னால் குடும்பத்தை பார்க்க முடியாது என்று சொல்லாமல் கேவலமாக சொல்கிறான். அவனின் ஆண்மை விளக்கம், அவனை அவள் வேலைக்கு செல்வதை ஒத்துக்கொள்ள வைக்காது. ). அவள் வெளியே செல்வேன் என்கிறாள். அவன் ‘ அப்படியானால் அப்படியே உன் வீட்டிற்கு சென்று விடு ‘ என்கிறான். ஏன் எனில் – அவள் அப்படி செல்ல முடியாது என்று அவனுக்கு தெரியும். அதையும் மீறி சென்றால், அவளின் character assasinate செய்வதை கையில் எடுப்பான். அதுவும் work ஆகவில்லை எனில் divorce பயங்கள் காட்டுவான். ஆக மொத்தம் .. அவள் எழுந்து விடக்கூடாது என்பதில் அவன் தெளிவாக இருப்பான். அவள் அமர்ந்தே இருக்க வேண்டும். எழுந்தால் emotional blackmail வரும். அவளும் அழுது பின் விழுவாள் – குழந்தைகள் இருப்பின். இது எல்லாம் எதற்கு ? ‘ காசு வேண்டும்‘ என்ற ஒற்றை வார்த்தைக்கு. “இல்லையே நிறைய அவன்கள் கொடுக்கிறார்களே ” … என்று வரும் குரலுக்கு … . ” ஆம். கொடுக்கிறார்கள். சமூக மரியாதைக்காக மற்றும் சொல்ல முடியா சில காரணங்களுக்காக கொடுக்கிறார்கள். ” என்பது அவன் பதில். தனக்கு ‘காசு ‘ வேறு ஒரு சில காரணங்களுக்காக கிடைக்கிறது என்று தெரிய வரும்போது அவள் துடித்து போவாள். அம்மாவிடம் சொன்னால், அம்மா ‘ நானும் அப்படித்தான் காசு வாங்குகிறேன் ‘ என்று அதிர்ச்சியூட்டுவாள். தலைமுறை தலைமுறையாக அவள் ‘காசு ‘ வாங்குவதை நினைத்து வெளியே சொல்ல முடியாமல் அழுவாள்.
குடும்ப உறவில் ‘காசு‘ போடும் ஆட்டங்கள் பச்சை அசிங்கங்கள். ‘காசு‘ வாங்க வேண்டுமே என்பதற்காகவே, எத்தனையோ அவள்கள் அமைதியாகி, சிரிக்கும் முகமூடி அணிவதுண்டு. அந்த அவனும் இரவானால் சிரித்து கொண்டே நெருங்குவான். குடும்ப வாழ்வின் வேறு பக்கங்கள் அந்த இரவுகள். சில அவள்கள் அந்த இரவுகளில் கோபத்தை காட்டுவதுண்டு. ஆனால் எல்லாம் சில நொடிகளில் இருட்டில் காணாமல் போகும். அவளின் கண்ணீர் இருளில் அவனுக்கு தெரியாது போகும். அவன் அதைப்பற்றியெல்லாம் யோசிக்க, கவனிக்க, நேரமில்லாது உறங்கி இருப்பான். தூக்கத்தில் வேறு ஒரு பெயரை உளறும் அவன்களும் உண்டு. அவன் உலகில் தேவைகள் முடியும்வரை அவள் தேவை. பின் அவன் உலகம் தனி உலகமாக மாறிவிடும்.
‘காசு‘ இங்கு காசல்ல. அவனின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தும் காகித sadism. ஒவ்வொரு முறை ‘காசு‘ கொடுக்கும் முன்பும் அவன் நின்று முறைக்கும் ஒரு கணம் போதும் அவள் நொறுங்கிப்போக. ஏன் அப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி – அவளுக்குள் எழாமல் இல்லை. குடும்பம், குழந்தை, உறவு, எதிர்காலம் எல்லாவற்றையும் யோசித்து அவள் அமைதியாகிறாள். அவள் அப்படி அமைதியாவாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். ‘காசுக்கு‘ நிற்க வைப்பதே அதற்கு தானே !
( ஒரு விஷயத்தை deep ஆக, சொல்ல நினைத்ததை, எழுதுவதாக பாராட்டுபவர்களுக்கு நன்றி. அதே நேரம் ஒரு பக்கமாகவே எழுதுவதாக குறைப்படும் சிலருக்கு என் பதில் – ‘ ஆம். கண்டிப்பாக. ஒரு பக்கமாகவே எழுதுகிறேன். இரண்டு பக்கம் எழுதும் அளவிற்கு அவன் அவ்வளவு நியாயவான் அல்ல. ‘ என்பதே ! )