அவனும் அவளும்: 003
உன் கோபங்கள் நியாயமானவை. பிறந்து வளர்ந்து படித்து … உன் ஆசையை கையில் எடுக்கும் சரியான வேளையில், உன்னை திருமணம், குழந்தை, அம்மா, பொறுப்பு, தியாகம், நான்கு சுவர், வீடு, கணவனே கண் கண்ட தெய்வம், அடங்கு … என்ற வார்த்தைகளில் உன் வாழ்க்கை முடிந்து …. கடைசியில் மகனும், மகளும் … கவனிக்காமல் போன பின்பு, கணவனுக்கு பணிவிடை செய்து நல்ல பெயரெடுத்து … அவனின் இறப்புக்கு பின் – தனிமையாய் ஒரு மூலையில் அமர்ந்து … ” நான் எனக்காக வாழ்ந்திருக்க வேண்டுமோ ? ” என்ற ஒரு கீற்றில் சோகப்பட்டு அழுவதை விட ….
‘ நீயும் கடவுள் ‘ என்று வாழ்ந்து மடிந்து போ !
மூடநம்பிக்கைகள் வேப்ப மரங்களில் இருக்கிறதென பாரதி சொன்னதெல்லாம் இருக்கட்டும். இப்பொது அவை வேப்ப மரங்களை விட்டு குடும்பங்களுக்குள் வந்து விட்டன. கணவன் வேலைக்கு செல்ல வேண்டும், மனைவி வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எப்போதோ யாரோ ஒருவருக்கு சாதகமாக எழுதப்பட்ட விதியை வசதிக்காக ‘இதுதான் இப்படிதான்’ என்று நீ ஆம் சொல்லும்வரை சொல்லும் உலகம் இது. ‘ஆம்’ சொல்லாதே. [ ஆம் விரும்பி சொல்கிறாய் என்பது உன் விருப்பம் – அதில் நான் தலையிடவில்லை ]. ‘எனக்கு இது தேவை’ என்று பேசு. உலகம் முதலில் உன்னை மறுக்கும். நீ சரியில்லை என்று சொல்லும். அவ்வார்த்தைகளை காற்றில் எரித்து கட. உன் மனசாட்சிக்கு உண்மையாய் இரு. உன் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியதை செய். வாழ்க்கையின் ஒரு பக்கம் குடும்பம். ஒரு பக்கத்தையே வாழ்நாள் முழுக்க படித்து அதை ‘வாழ்க்கை’ என்று சொல்பவர்கள் பக்கம் நின்றுவிட்டு, ‘இதுவா வாழ்க்கை’ என்று பத்து /இருபது /முப்பது வருடங்களுக்கு பின் கேட்காதே ! உன் கையில் இருந்தால் சுதந்திரம். இன்னொருவன் கையில் இருந்தால் அது அவன் சுதந்திரம். அப்போது உன் நிலையின் பெயர் ? அதை நான் சொல்ல விரும்பவில்லை. எழு. நட. உட்கார்ந்திருந்த போது பிரம்மாண்டமாய் தெரிந்தது எல்லாம் நீ எழும்போது … சாதாரணமாக தெரியும். நீ வளரும்போது … negligible status அடையும். கொஞ்ச காலத்திற்கு பின் … இங்கேயா இருந்தோம் என்று சிரிக்க தோன்றும். ஆம். நீயும் கடவுளே !
காலங்கள் போய்விட்டது … இப்போது என்ன செய்ய முடியும் ? என்று தோன்றுகிறதா ?. மார்பையும், வயிற்றையும், முதுகையும்… தாங்கி ஒன்று பிடித்துக்கொண்டிருக்கிறதே … ஆம் … முதுகெலும்பு … அது உனக்கு கொடுக்கப்பட்டது நீ உன் axis ல் நிற்பதற்காக ! உன் axis யை கடன் கொடுத்துவிட்டு, அவ்வப்போது கெஞ்சி வாங்கி, ஓட்டவைத்துக்கொண்டு, நீயும் அடிமை இல்லை என்று நிரூபிக்க நீ விரும்புவதை பார்த்தால் … அதாவது நீயே பார்த்தால் … நீ சரியாகிவிடுவாய். உன்னை ஒரு hypnotism stage லேயே இந்த உலகம் வைத்திருக்கிறது. உனக்கு ஏதோ ஒரு சிந்தனை வரும்போதெல்லாம் … குழந்தை hypnotism நன்கு work ஆகும். நீ அதில் விழுவாய். விழுவாய் என நினைத்தவர்களுக்கு அது முதல் வெற்றி. ஒருவேளை நீ அதில் எழுந்து விட்டால் இருக்கவே இருக்கிறது ‘மனைவி என்றால்’ என்ற இன்னொரு hypnotism. அதில் நீ கண்டிப்பாக விழுவாய். தாலி அதனால்தானே உன் கழுத்தில் இடப்படுகிறது. உலகையே ஆள்பவனுக்கு தாலி கட்ட தெரியாதா என்ன ? அதற்க்கு உதவி செய்ய ஒரு கூட்டம் உனக்கு பின் நிற்கும். அங்கே ஆரம்பிக்கிறது குடும்ப hypnotism. ஆக மொத்தம் நீ எழவே கூடாது. நீ உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். யாருக்காகவோ. எதற்காகவோ. ஆங்காங்கே நீ நல்ல பெயர் எடுக்க வேண்டும். அது நீ அடிபணியும் நிலைக்கேற்ப உனக்கு certificate ஆக வழங்கப்படும். நீ கல்லூரியில் வாங்கியதெல்லாம் ஒன்றுமில்லை என்று உனக்கு உலகம் போதிக்கும். அதேபோல் படித்தோ படிக்காமலோ வாங்கிய அவன் சிரித்துகொண்டே அலுவலகம் போவதாக சொல்லி வெளிஉலகம் அலைவான். [ ஏதோ ஒரு கம்பெனி வளர்வதில் அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம் ! ]. நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று ஒரு வலைக்குள் சொல்வான். சொல்லும். சிங்கத்திடம் எப்படி வேண்டுமானாலும் இரு என்று அடைத்தபின் சொல்வதற்கு சமம். அவன் சொல்வதை அது சொல்வதை நீ நம்பினால்…. பார்வைக்கு நீ சிங்கம். ஆனால் அடிப்படையில் தன் காலைக்கூட எங்கு எடுத்து வைக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கும் சிங்கம். முதலில் நீ செய்ய வேண்டியது கூண்டை உடைத்து வெளியே வருவது அல்ல. நீ சிங்கம் என உணர்வது. உணர்ந்தவுடன் உன் பார்வையில், இருப்பினில், நடையினில், உலகம் அதுவாகவே கூண்டை திறந்துவிடும். வழியனுப்பி வைக்கும். வைக்க வேண்டும். ஏன் எனில் நீயும் கடவுளே !
ஒன்றே ஒன்றில் மட்டும் சரியாக இரு. அது உன் மனசாட்சிக்கு நேர்மையாக இருப்பது. அதை தவிர நீ பயப்பட வேண்டியது இங்கு எவனுக்கும் இல்லை. எதற்கும் இல்லை. எந்த அமைப்பிற்கும் இல்லை. அம்மா அப்பா மாமனார் மாமியார் குழந்தை அண்ணன் தம்பி சித்தப்பா பெரியப்பா … எல்லோருமே நீ சரியெனில் முதலில் எதிர்ப்பையும் பின் வாழ்த்தையும் வழங்குவர். கடைசி வரை எதிர்ப்பை மட்டுமே காட்டிகொண்டிருந்தால் .. அவன் அவள் மேற்சொன்ன எதிலும் சேர மாட்டான். சேர மாட்டாள். அவன் அவள் உனக்கு எதிரி அவ்வளவே. கடைசி வரை எதிர்த்துக்கொண்டே இருப்பவன் [ நல்லது என்று தெரிந்தும் .. ] எதிரியாக மட்டுமே இருக்க முடியும். இதற்க்கு பயந்து உன் வாழ்வை அடகு வைத்துவிட்டு, பாச வட்டிகளில் மீட்டு விடலாம் என்று மட்டும் எண்ணிவிடாதே … வாய்ப்பே இல்லை. நல்லது செய்தவர்கள் எல்லாம் முதலில் ‘worst’ என்றே சொல்லப்பட்டார்கள். அதனால் தான் இன்றும் ‘நல்லது’ என்று தெரிந்தும் … நிறைய பேர் அதை செய்ய வருவதில்லை. நீ அந்த listல் சேரவேண்டிய ஆள் இல்லை.
வண்டியை ஒருவன் தான் ஓட்ட வேண்டும் என்று ஒரு logic பேசுவார்கள். சிரித்து கட.. ஏன் எனில் ‘யார்’ வண்டியை ஓட்ட வேண்டும் என்பதில், முடிவெடுப்பதில், தேர்ந்தவர்கள் அதை வண்டி என்று சொல்கிறார்கள். முதலில் ஏன் வண்டி என்று ஒன்று வேண்டும் ? invisible வண்டி ஏன் இருக்க கூடாது ? அவனுக்கு பயம். அவள் இல்லாவிட்டால் குடும்பம் என்னாவது ? என்ன ஆகும் ? இல்லை கேட்கிறேன் என்ன ஆகிவிடும் ? … மகன் மகள் தானாக வளர்வார்கள். individuality வளரும். உடனே ‘குடும்ப அமைப்பு’ என்னாவது என்று காது காற்று கிழிய சத்தம் போடுபவர்களுக்கு … dependent தான் குடும்ப அமைப்பு என்று எவன் கற்றுக்கொடுத்தது ? சார்ந்து இருத்தல் ஏன் இருபக்கம் ஏற்படுத்தப்படவில்லை ? எத்தனை கணவன்களால் … தன் மனைவியின் செருப்பை துடைத்து கொடுக்க முடியும் ? ஏதோ ஒன்று இடிக்குமே ? என்ன அது ? அது அவளுக்கும் இல்லையா ? எத்தனை கணவன்களால் குழந்தையை எழுப்பி, தயார் செய்து, பள்ளி அனுப்பி … ??? உடனே ஒரு காரணம். ஒரு காரணத்தால் அவனால் இன்னொன்று செய்ய முடியாது எனில் … அதே அவளுக்கும் பொருந்தாதா ? யோசிப்போம். ஏன் எனில் … அவளும் கடவுளே !
அவளை அவளாக இருக்க விடுவோம். அவன் அவனாக இருக்கட்டும். ஒரு definition dashம் வேண்டாம். வாழ்க்கை அதுவாக அமையும். இயற்கைக்கு தெரியும் யாரை எங்கு எப்படி வைக்க வேண்டும் என்று. அது இன்னாரை இன்னாருக்கு இப்படி என்று வைத்து காலம் கடக்கும்.
மனிதன் முடிவு செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றை மட்டுமே. மனிதத்துடன் சக ஆணை பெண்ணை அணுகுவது மட்டுமே அவன் அவள் வேலை. மீதேமேல்லாம் … யாரோ ஒரு கூட்ட தலைவன், எங்கோ எதற்க்காகவோ ஏற்படுத்திய காலம் கடந்த அணுகுமுறைகளை …. இன்னும் ஒரு பெருங்கூட்டம் அழகாக follow செய்கிறது. அதாவது அதில் advantage இருக்கும் ஒரு Group அதை sincere ஆக follow செய்கிறது. Disadvantage இருக்கும் ஒரு Group
மெளனமாக வேறு வழியில்லாமல் advantage group சொல்வதை follow செய்கிறது. என்ன ஒரு அருமையான logic – ஒரு சாரார்க்கு.
மனிதம் கொள். மனித குப்பை எண்ணங்களை கொல். உனக்குள் இருக்கும் கடவுளை எழுப்பிவிட்டு நேர் நில். All are Equal என்பது வாழ்க்கையிலும் வரட்டும். வறட்டு வார்த்தைகளில் எவ்வளவு நாளைக்கு தான் அது வாழும் ? கொஞ்சம் நஞ்சும் கொஞ்சம் மகிழ்ச்சியும் கொஞ்சம் குள்ள நரித்தனமுமா வாழ்க்கை ? அநேகமாக நீ ஒரு நல்ல பாடகியாக இருக்க கூடும். நல்ல விளையாட்டு வீராங்கனையாக இருக்க கூடும். நிர்வாகியாக இருக்க கூடும். வியாபாரியாக இருக்க கூடும். நல்ல கவிஞராக இருக்க கூடும். அந்த திறமை வெளிவரட்டும். இங்கிருக்கும் பணம் சம்பாதிக்கும் அத்தனையும் ஆணுக்காக எழுதப்பட்டதல்ல. ஆணுக்காக ஆக்கப்பட்டது. Simple TWIST. அந்த twistல் ஒரு பக்கம் காணாமல் போய்விட்டது. அவ்வளவே.
மீண்டும் சொல்கிறேன்… நீயும் கடவுளே…
உன் கோபம் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில் …. ! அடக்கி வைக்கப்படும் கோபம் குடும்ப அழகு அல்ல. சாபம்.
அந்த சாபம் உன் குழந்தைகளையும் பாதிக்கும். மனரீதியாக. அது புரியாமல் நன்றாக வளர்ப்பதாக காட்டி கொல்லாதே. உன் மகன் ‘பெண்ணை’ இப்படிதான் வைக்க வேண்டும் என கண் முன்னே பார்த்துக்கொண்டே இருக்கிறான். உன் மகள் ‘பெண் இப்படிதான்’ இருக்க வேண்டும் என நினைத்துகொள்கிறாள். உன் கோழைத்தனம் அடுத்த தலைமுறைக்கு அழகாக பாய்ச்சப்படுகிறது – குடும்பம் என்கிற ஒரு அமைப்பை காரணம் காட்டி. இதற்காகவா இத்தனை பொறுமையும் அமைதியும் ! ?
நானும் நீயும் கடவுள் எனில் இருவரும் இருவரையும் கும்பிட வேண்டியதில்லை ! அவன் மெகா கடவுளாகி, அவள் அவனை கும்பிட ஆரம்பித்ததில் இருக்கு பழங்கால அவலங்களின் வெற்றி. புரிகிறதா உனக்கு ? ஏதோ ஒரு நாளில் நாம் இருவருமே கடவுள் என உணர்ந்து … இருவரையும் கும்பிடாமல் சிநேகமாய் சிரித்து செல்வோம். அது நடக்கும் என்கிற நம்பிக்கையில், இப்போதைக்கு உன்னிடம் இருந்து விடைபெறுகிறேன். என் நதி ரிஷி மூலங்களை தேடாதே. என்னை கல்லெறிந்து கொல்ல நினைக்காதே. நீ செய்ய வேண்டியது புது நதியை ஏற்படுத்துவது அல்ல. இருக்கும் நதியை release செய்வது. நதி அதன் வழியை தானாக கண்டுபிடிக்கும். இயற்கை அதற்கு துணை நிற்கும். அவ்வளவே!