அவனும் அவளும்: 009
“உங்களின் திறமையை பாராட்டுகிறோம் ” கேட்கும் அவனுக்கு இருப்பு கொள்ளாது. அவளை அல்லவா பாராட்டுகிறார்கள் !? அவள் வாங்கும் கோப்பைகளுக்குள் அவன் எப்போதுமே விழுந்துவிடுவான். எழ சிரமப்படுவான். அவளை அடையும் பாராட்டுக்களை பொதுவாய் ‘ கடு கடு ‘ முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பான். போதாதற்கு … கொஞ்சம் Plastic smile வேறு அந்த எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்தில். அவனின் அசிங்கமான முகம் அது !
அவள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்பது ஏன் அவனுக்கு இடிக்கிறது ?அவளை ஏன் அவனால் அறிவாளினி என்று ஒத்துக்கொள்ள முடியவில்லை ? அவனின் பார்வையில் அவள் ஏன் ஒரு படி குறைவான அவளாக தெரிய வேண்டும் ? அவன் புத்திசாலி என்று யார் அவனுக்கு certificate கொடுத்தது ? தனது companyயின் மேல் மட்டத்திடம் தனது தவறுக்கு கை கட்டி நிற்கும் அவன் …ஏன் மனைவியிடம் தனக்கு எல்லாம் தெரியும் என்று prove செய்ய முயல்கிறான் ? Precise ஆக ஏன் அவளுக்கு எதுவும் தெரியாது என போதிக்க நினைக்கிறான் ? உண்மையிலேயே அவளுக்கு எதுவும் தெரியாதோ ? அப்படி எனில் வெறும் உடல் தேவைக்காக மட்டுமே அவள் select செய்யப்பட்டாளா ? எனில் … அவளுக்கும் xxxxx க்கும் வித்தியாசம் தான் என்ன ? வீட்டிற்குள் இருப்பது மட்டுமேவா ? அல்லது ஒரு அவனுடன் இருப்பது மட்டுமேவா ? கொஞ்சம் சூடாகத்தான் இருக்கும் – அப்படி வைத்திருக்கும் அவன்களுக்கு. ( மற்றவர்கள் இளைப்பாரலாம் )
திறமை என்று வந்துவிடின் அவன் அவள் எல்லாம் ஒன்றே. இதில் என்ன A grade அவன், B Grade அவள் ?. ‘ office விஷயம் இது. உனக்கெல்லாம் ஒரு மண்ணும் புரியாது. ‘ .. எப்படி அவனால் இப்படி சொல்ல முடிகிறது ?’வீட்டு விஷயம் இது … உனக்கு ஒரு மண்ணும் புரியாது ‘ என்று சொன்னால் அமைதியாக இருக்க முடியுமா அவனால் ? உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி கேட்டு அவளை அடைக்க வைப்பான். Business management decision ஒன்றை சிறப்பாக எடுத்ததை பற்றி சொல்லி பெருமைப்படுவான். இடம் முதலில் வாங்கிப்போட்டதை பெருமையாய் சொல்வான். வீடு காட்டியதை, loan வாங்கியதை, tax கட்டியதை … பெருமையாய் சொல்லிக்கொள்வான் – ஒரே தையிரியத்தில் .. இதில் எங்கும் அவள் இல்லை. அல்லது அவன் இருக்க விடவில்லை. பொதுவாகவே ஒரு அளவுகோல் இருக்கிறது. அவன் செய்தால் அவள் செய்யவில்லை என்ற பொருள். இதை யார் கண்டுபிடித்தது ? அவளால் செய்ய முடியாதென்று யார் சொன்னது ? மைதானத்தை தராமல் தான் விளையாடிவிட்டு, தானே கைதட்டிக்கொள்ளும், தன்னை பாராட்டிக்கொள்ளும் நிலை.. மனநிலை வியாதியின் உச்சம். ஒரே ஒரு கேள்வி அவனுக்கு .. ‘ உன் குழந்தைக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று தெரியுமா? ‘. ஓ…கொஞ்சம் கடினமான கேள்வியோ ? அப்படியானால் இந்த கேள்வி … ‘ உன் குழந்தையின் பிறந்த நாள் ? முதல் முதலில் தவழ்ந்த நாள் ? முதலில் பேசிய நாள் ? ‘ அப்பா என்று கூப்பிட்ட நாளை மட்டும் நினைவில் வைத்திருக்கும் சில அவன்களிடம் ஒரு கேள்வி .. அம்மா என்று அழைத்த நாள் ஞாபகம் இருக்கிறதா ? அவள் சொல்வாள். அப்பா என்று அழைத்த நாளையும் சேர்த்து. அப்படி சொல்வதால் அவள் வீட்டுக்குள் இருக்க வேண்டியவள் அல்ல. உன்னால் முடியாததை அவளும் செய்கிறாள். திறமை அவன் அவளுக்கு ஒன்றே. அவனால் முடியாததை …. அவள் சொல்லிவிட்டு வாய் பிரியாமல், நேர்க்கோட்டில், அவனை பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரிப்பாளே… அங்கு அவனின் புத்திசாலி certificate validity முடிவுக்கு வருகிறது.
அவனுக்கு ஒரு திறமை நிச்சயமாய் இருக்கிறது. அது அவளை ‘மனரீதியாக முடக்க நினைக்கும்‘ திறமை! அது அவனிடம் இருப்பதுபோல், நிறைய அவன்களிடம் நிறைய இருக்கிறது. ‘ ஒரு பெண்ணால் ‘ என்ற ஒரு வார்த்தை போதும் – அவனை ரத்தம் ருசிக்க தயாராகும் புலியாய் மாற்ற ! ‘ஒரு ஆணால் ‘ என்று சொல்லிவிட்டால் .. புலி பாய்ந்துவிடும். ‘ஒரு பெண் ‘ செய்தால் என்ன அவனுக்கு ? ஏன் அந்த பெண்ணை அவனால் பாராட்ட முடிவதில்லை ? ‘என்னால் முடியவில்லை, நீ சிறப்பாக செய்தாய்‘ என்று பாராட்டுவதில் அவனுக்கு என்ன வலி ?. ‘ ‘இது தான் என் அவள். என்னை விட சிறப்பானவள்‘ என்று சொல்வதில் அவனுடைய dash க்கு எங்கே இழுக்கு வருகிறது ?
எத்தனையோ அவள்கள் திறமைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, அவன் எதிரே கைகட்டி நிற்கிறார்கள். அப்படி நிற்பவர்கள் முன் ‘ தனக்கு எல்லாம் தெரியும் ‘ என்று சொல்பவன் ‘என்ன ரகமடா நீ‘ என்பதை தவிர வேறு என்ன பெயருக்கு சொந்தக்காரனாக இருக்க முடியும் ?. எல்லாம் தெரிந்தவன் ஏன் அவளை ஒரு ‘கட்டுக்குள்‘ வைத்துவிட்டு வெளிவர வேண்டும் ? அவள் வெளிவந்தால் அவனின் ‘எல்லாம்‘ தெரிந்து விடும் என்பதாலோ ? காளை ஒன்றை எப்பக்கமும் அசைய முடியாதபடி கட்டி வைத்துவிட்டு, அதற்கு எதிரே நின்று மார்தட்டும் அவனை அநேகமாய் circus joker list ல் சேர்க்கலாம். அப்படி அவன் மார்தட்டும்போது அவள்கள் சிரிப்பது அந்த circus joker நினைவுக்கு வருவதால்தான் !
அவளின் திறமை அவனின் dash க்கு ஒன்றும் குறைந்ததல்ல. தன் திறமையை நிரூபிக்க முயலும்போது .. அவள் எதிர்க்க வேண்டியதாய் அவன் நிற்பதே அவளின் திறமையின் மௌனதிற்கு காரணம். ஒரு திறமையை நிரூபிக்க வாழ்க்கையை இழப்பதா ? என்ற கேள்வியை கேட்டுக்கொள்வதால் அவன் advantage game ஆடுகிறான். அவள் வாழ்க்கையை இழக்க விரும்ப மாட்டாள் என்பதும் அவனின் இன்னொரு advantage game. என்ன ஒரு game plan !
அவள் செய்யவேண்டியதெல்லாம் ..’திறமைக்கு நான் dependent. அவனுக்கு அல்ல ‘ என்று திருப்பி அடிப்பதே. ஏன் என்று கேட்கும் சில அவன்களுக்கு இந்த பதில் அநேகமாய் பொருத்தமாய் இருக்கும் …
” அவன் மாறுதலுக்குடப்பட்டவன். திறமை அப்படி அல்ல. அது சிறப்பாகுமே தவிர மாறுதலுக்குட்படாது “.
எங்கோ ஒரு அவள் தன் திறமையால் வெற்றி பெற்ற பின் பேசிய ஒரு வரி அநேகமாய் அவள்களின் மூச்சில் கலக்கக்கூடும் …
” திறமைக்காக எதையும் இழக்கலாம். எதற்காகவும் திறமையை இழக்க கூடாது “