அவனும் அவளும்: 010
அவன் சத்தமாய் பேசிவிட்டு செல்வான். அவள் அமைதியாய் இருப்பாள். அவனின் சத்தம் பக்கத்து வீடுகளுக்கு கேட்கும். அவள் அப்போதும் அமைதியாக இருப்பாள். முகத்தை காட்டிவிட்டு, சத்தமாய் பேசிவிட்டு வெளியேறுவான் அவன். அவள் இன்னமும் மௌனமாக இருப்பாள். கதவை மூடிவிட்டு யாருமற்ற அந்த வீட்டில் மௌனமாக அழுவாள். ஆம் .. அங்கும் அவளுக்கு சத்தம் வந்துவிட கூடாது !
அது என்ன design என்று தெரியவில்லை. அவன் சத்தம் போடும்போது அவள் அமைதியாய் இருப்பது. முதலில் சத்தம் ஏன் வருகிறது ?இது சரியில்லை, சரி செய்துகொள் என்று அவனால் மென்மையாக சொல்ல முடியாதா ? அதை அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்ல முடியாதா ? ஏன் சத்தம் போடுகிறான் ? கோபம் வேறு. கோபத்தை ஏன் அவன் சத்தமாக வெளிப்படுத்த வேண்டும்? அவனிடம் கேட்டால், அது ஒரு stress என்று தப்பிப்பான். அவனுக்கு மட்டும்தான் stress ஆ ? அவளுக்கு ? சொல்லும் அவனுக்கு stress எனில் அதையும் கேட்டுக்கொள்ளும் அவளுக்கு .. ? இந்த கேள்விக்கு பதில் சொல்ல ஒரு அவன் அங்கு இருக்க மாட்டான். அவனுக்கு சத்தம் போட வேண்டும். அவ்வளவுதான்.
சரி. அவள் ஏன் அமைதியாகிறாள்?. ஆரம்பம் முதலே அப்படித்தான் வளர்க்கப்படுகிறாள் அவள். அப்படி இல்லையே … அவள் நல்லா பேசுவாளே என்று சொல்லும் அவன்களுக்கு .. அவள் பேசுவது அவள் நினைத்ததை பேச அல்ல. அவன் பேசிவிடாமல் இருக்க. அவளுக்கு தெரிந்த ஒரே ஒரு strategy அது தான். சத்தமாய் பதில் பேசிவிடும் அவள்களுக்கு அது ஒரு நிமிட சந்தோஷமே. அவள் சத்தமாய் பேசியதில் கிடைக்கும் அந்த நிமிடத்திற்கு பின் அவன் தொல்லை ஆரம்பிக்கும். பேச மாட்டான். பணம் கொடுக்க delay செய்வான். சாப்பிட வரமாட்டான். அல்லது மௌனமாக சாப்பிடுவான். வீட்டிற்குள் தனியாக அமர்வான். அவளுக்கு இருப்பு கொள்ளாது. தான் தவறு செய்துவிட்டோமோ என்று தடுமாறுவாள். Sorry கேட்பாள். அங்குதான் அவன் நிமிர்ந்து அமர்வான். அவனின் strategy அவனுக்கு திரும்ப கிடைத்த தருணம் அது. இனி அவள் குரலை உயர்த்த மாட்டாள் என்பது அவனுக்கு கிடைத்த வெற்றி. இதெல்லாம் எதுவும் புரியாமல், அவன் தன்னை மஜ்னு level ல் நேசிக்கிறான் என்று நினைத்துக்கொண்டு தன்னை மீண்டும் அவனிடம் இழப்பாள் அவள். புலி ஒன்று மானை துரத்தாமல் சிறை பிடிக்கும் தருணம் அது. நரிப்புலிகளும் உண்டு காடுகளில்.
சத்தம் ஒரு குறியீடு. மௌனம் ஒரு குறியீடு. சத்தம் எப்போதுமே மௌனத்தை வெல்வதாக நினைக்கிறது. சத்தமாக பேசிவிட்டால் சரியானது என்று ஒரு புண்ணாக்கு பார்வை வேறு. சத்தம் ஒரு வியாதி. அவன்களுக்கு அது அதிகம். அதுவும் பொது இடங்களில் கேட்கவே வேண்டாம். அவன் வேறு ஒரு sphere ல் இருந்து பேசுவான். அவன் ஏன் இப்படி கத்துகிறான் – பக்கத்தில் தானே நிற்கிறோம் என்பது புரியாமல் அவள் நிற்பாள் – மௌனம் என்கிற குறியீடுடன். அவன் சத்தமாக பேசுவது அவளுக்கல்ல என்று அவளுக்கு புரியாது. அவன் அங்கே இருக்கும் எல்லோரிடமும் ‘தானே இங்கு முடிவெடுப்பவன்‘ என்று சொல்ல விரும்புகிறான். அதற்கு அவள் ஒரு tool. பெரிய பெரிய பொருளாதார வீழ்ச்சியெல்லாம் சந்திக்கும் அவனுக்கு, அவள் சம்பந்தப்பட்ட சிறு தவறில் ஏன் அப்படி ஒரு சத்தம் வருகிறது ? அங்கே தான் இருக்கிறது அவன் design. முதலில் அறைபவன், முதலில் பேசுபவன், முதலில் செய்தி சொல்பவன் … என்று இந்த முதலில் வியாதி அவனை இம்சிக்கிறது. முதலில் சத்தம் போட்டு விட வேண்டும் அவனுக்கு. அப்புறம் fault என்றால் பார்த்துக்கொள்ளலாம் என்கிற தைரியம் அவனுக்கு. அவளுக்கு தான் மன்னிக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறதே … அதை touch செய்து சரி செய்து கொள்ளலாம். ஊர் மத்தியில் சத்தம் போட்டு அங்கே பெரியவன் என்று prove செய்தாயிற்று. வீட்டிற்குள் அவள் மன்னித்துவிட்டாள். ஆக இரு பக்கமும் வெற்றி அவனுக்கு. ஒரே அவன். இரு பரிசுகள் – அவனின்அந்த dash igo விற்கு !
மௌனம் எப்போதும் தோல்வியின் குறியீடு. ஒருவன் சத்தம் போட்டு, இன்னொருவன் சத்தம் போடாவிடில் சத்தம் போட்டவன் வெற்றி பெற்றுவிட்டான் என்று ஒரு மனநிலை இருக்கும்வரை அவனுக்கு சத்தம் போட வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். அவள் மௌனத்தை கட்டிக்கொண்டு புழுங்குவாள். அழுவாள். கோபத்தை அம்மா அப்பாவிடம் காட்டுவாள். ‘ ஏன் என்னை இங்கே … ‘ என்றெல்லாம் பேசுவாள். அவளின் அப்பாவின் முகம் இதையெல்லாம் கேட்டும் பார்த்தும் அமைதியாக இருக்கும். அதே ஆண் தானே?. இவன் ஏன் அமைதியாய் நிற்கிறான் என்று புரியாது விழிப்பாள். பின் ….அன்பு இருக்கும் இடம் சத்தம் தேவை இல்லை போலிருக்கிறது என்று உணர்வாள். அப்படி எனில் தான் அன்புடன் இருப்பதாய் அவளுக்குள் அவளே சமாதானம் செய்து கொள்ளுவாள். மௌனம் மீண்டும் அவளுக்குள் குடிபுகும். அவன் சத்தம் போட்டுக்கொண்டே அந்த மௌனத்தை கொல்ல முயற்சிப்பான். ஏதோ ஒரு நாளில் அவளும் சத்தம் போட எழுவாள். குடும்பம், குழந்தை, வாழ்க்கை என்றெல்லாம் அவளின் கண் முன் காட்டப்பட்டு மௌனமே சரி என்று புரிய வைக்கப்படும். அவள் மீண்டும் மௌனமாவாள். அவன் சத்தம் எதிரொலிக்கும். காட்டில் சிங்கம் கர்ஜிக்கும்போது, அந்த கர்ஜனை கேட்க, காட்டு மௌனம் ஒன்று தேவைப்படும் என்பது சிங்கத்திற்கு கடைசி வரை தெரியாமலே கர்ஜிக்கும். சிங்கம் கர்ஜனை என்ற போலி தோற்றத்தில் வாழும். கொடுமை.
அவளுக்கு என்று special ஆக இந்த மௌனத்தை அளித்த அந்த ஒரு ஆரம்ப கால அவனை பார்க்க வேண்டும். என்ன ஒரு Master plan ! ஒரு character ஐ ஏற்படுத்தும் வரைதான் சிரமம். ஏற்படுத்திவிட்டால் அவள் இப்படித்தான் என்று நம்ப வைத்துவிடலாம். அதுவே நடக்கிறது அங்கு. அவள் என்பது மௌனக் குறியீடு. அவன் என்பது சத்தத்தின் குறியீடு. சத்தங்கள் உயிர்வாழ மௌனங்கள் தேவை என்பது எழுத்தப்படா விதி. அதைத்தான் அவனும் அவளும் follow செய்கிறார்கள். Master plan க்கு கிடைத்த வெற்றி. சந்ததி சந்ததியாய்.
அந்த மௌனமும் ஓர் நாள் கலையும். அந்த மௌனம் கலையும்போது சத்தம் தானாகவே தன் decibel ஐ குறைத்து அடங்கிவிடும். அடங்கும். அடங்க வேண்டும். அடக்க வேண்டும். மௌனத்திற்கும் சத்தம் உண்டு என்று இயல்பு விதி மாற்றி எழுதப்படும்போது … சிங்கம் கர்ஜனையை தானாகவே மாற்றிக்கொள்வதை பற்றி யோசிக்கும்.





