நான் எனப்படும் நான் : 001
மனிதர்களை நான் மன்னிக்கிறேன். தினம் தினம். அப்படி மன்னித்த ஒருவரை சில வருடங்களுக்கு பிறகு பார்க்க நேர்ந்தது. அவர் பேச ஆரம்பித்தார் …
” பேசுவாயோ மாட்டாயோ என்று நினைத்து இருந்தேன். பரவாயில்லை பேசுகிறாய். நான் அப்போது செய்தது தவறுதான். அதை இப்போது உணர்கிறேன். ” என்று
பேச்சு நகர்ந்தது.
நான் சிரித்துவிட்டு தொடர்ந்தேன் …
” எப்படி இருக்கிறாய் ? “.
” நன்றாக இல்லை. அதற்க்கு பல காரணம் இருந்தாலும் நீ சொன்னதை நான் கேட்காதது முக்கிய காரணம். உன்னிடம் நான் செய்த வாதம் இன்று வீணாய் நிற்பதை உணர்கிறேன். உன்னிடத்தில் என்னை வைத்து யோசித்தால் நான் மீண்டும் பேசவே மாட்டேன் “
நான் புன்னகைத்தேன்.
” அப்போது வெற்றி அடைந்த மாதிரி எனக்கு ஒரு உணர்வு. ஒரு சில பொய்களில் உன்னை பற்றிய வேறு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி …. இப்போது நினைத்தாலும் மனதிற்கு வருத்தமாய் இருக்கிறது. அப்படி நான் சொல்லி இருக்க கூடாது. நிஜமாய் உணர்கிறேன். ” அவரின் கண்களில் நெகிழ் நீர் தெரிய நான் துடித்துப்போனேன்.
” அது நடந்து பல வருடங்களுக்கு மேல் ஆயிற்று. அது என் மனதிலேயே இல்லை. இப்போது உன்னை பார்த்த பின், நீ பேசிய பின்தான் அதெல்லாம் ஞாபகத்திற்கே வருகிறது. என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? ” நான் அவரை நிகழ் காலத்திற்கு கொண்டு வர முயற்சித்தேன்.
” ஏதோ இருக்கிறேன். நான் செய்த தவறுகள் என்னை வாட்டுகின்றன. அப்பா அம்மாவிற்கு நான் உண்மையாய் இல்லை. மனைவிக்கு உண்மையாய் இல்லை. வேலைக்கு உண்மையாய் இல்லை. நட்பு வட்டத்திலும் சுயநலம் பார்த்து பலரை இழந்தேன். அநாதையை போல் இருக்கிறது என் வாழ்வு ” என்றார்.
நான் அமைதியாக இருந்தேன். தவறுகள் செய்யும்போது கிடைக்கும் தைரியம் ஏன் நமக்கு செய்தது தவறு என வருந்தும்போது கிடைப்பதில்லை. முறைப்படி தவறு செய்யும்போது தைரியம் இல்லாமலும், திருந்தும்போது தைரியமாகவும்தானே நாம் இருக்க வேண்டும் ?
” உன்னை பார்த்து பேசியதில் எனக்கு மனசுக்கு கொஞ்சம் ஆறுதல். பேசாமல் சென்றிருந்தால் மிகவும் வருத்தம் அடைந்திருப்பேன் ” அவரின் பேச்சு தொடர்ந்தது.
” உன்னை பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. கடந்த காலங்களை நான் சுமப்பதில்லை. நீயும் சுமக்க வேண்டியதில்லை. தவறு என நீ உணர்ந்த கணமே அது உன்னிடமிருந்து வெளியேறிவிடும். நிம்மதியாக இரு. என் தொலைபேசி எண்ணை அனுப்புகிறேன். தொடர்பில் இரு ” என்று சொல்லிவிட்டு சிரித்தேன்.
அவரின் முகம் கொஞ்சம் மலர்ந்ததை பார்க்க முடிந்தது. அவர் நடக்க ஆரம்பித்து என்னில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தார். பழைய நினைவுகள் கண் முன் வந்தது எனக்கு. ‘எவ்வளவோ சொன்னேன்.
அப்போது கேட்கவில்லை இவர்’ என தோன்றியது. இப்போது கேட்க தயாராய் இருக்கிறார். ஆனால் நான் அதைப்பற்றி பேசவே விரும்பவில்லை. சூழ்நிலைகள் மனிதர்களை ‘சரி’ ‘தவறு’ களுக்குள் அடைத்து, மனக் கைதிகளாக்கி விடுகின்றன. எது சரி என்று தெரிந்தவன் பேசாமல் அமைதியாகும்போது, சரியானவன் கைதியாகிறான். தவறானவன் சரியானவனாய் மாறி, உலகமெங்கும் உலா போகிறான். காலம் எலாவற்றையும் கவனிக்கிறது. இவர்கள் இருவரையும் திரும்ப சந்திக்க வைக்கிறது. வாழ்க்கையின் பல பக்கங்களை காண்பித்த பின் பேச வைக்கிறது. அனுபவமும் முதிர்ச்சியும் அவர்களின் பேச்சையே திருப்பி போடுகின்றன.
செய்த தவறை நினைத்து, வருத்தமாய் அலைபவர்கள் இந்த உலகில் பலர். அதில் சிலருக்கு சம்பந்தப்பட்டவர்களை காணும் பாக்கியத்தை இயற்க்கை கொடுக்கிறது. பார்த்தவுடன் பழைய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, மனதை இலேசாக்கி செல்பவன் மனிதம் புரிந்தவன். சந்தித்த பின்னும் விறைப்பாய் திரிபவன் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
வாழ்க்கை மிகவும் இலகுவாக பாடங்களை சொல்கிறது. மனசாட்சியை துணைக்கு அழைத்து வாழ சொல்கிறது. நாம் பாடங்களை இலகுவாக கற்பதை விரும்புவதில்லை. மனசாட்சியையும் துணைக்கு அழைப்பதில்லை. நமக்கென்று ஒரு இராஜ்ஜியம் அமைக்க முயல்கிறோம். அது எவ்வளவு பெரிய இராஜ்ஜியமாக இருந்தாலும் இயற்கையே அதன் வயதை, எல்லையை தீர்மானிக்கிறது என்று உணர்ந்தவுடன் … நாம் உருவாக்கியதை நாமே ‘ஒன்றுமில்லை’ என்று சொல்லும் பாக்கியம் பெறுகிறோம். காலம் தான் மிகப்பெரிய சக்தி. எப்படிப்பட்ட மனிதர்களையும் இன்னொரு பக்கம் இழுத்து சென்று விடும். காலம் என்னிடம் பேச ஆரம்பிக்கும் என உணர்பவன் மிகப்பெரிய ஞானி. காலத்தை வெல்வேன் என்று சொல்பவன் சிறு குழந்தை.
நான் எனப்படும் நான், இதுவரை உருவாக்கியது ‘ஒன்றுமில்லை’ – என் மனசாட்சியுடன் வாழ்ந்ததை தவிர. அந்த நிறைவில் வாழ்க்கை எனக்கு ஆரம்ப புள்ளியாகவும், அஸ்தமன புள்ளியாகவும் … அமைந்து கொண்டே இருக்கிறது. இருக்கும்.
– பகிர்தல் தொடரும்.