நான் எனப்படும் நான் : 002
நீண்ட நாட்களுக்கு பின் அவளை சந்தித்த போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசலாமா வேண்டாமா என்கிற சிறு குழப்பமும் நுரையாய் எழுந்தது. அவளும் என்னை கவனித்து விட்டாள். அநேகமாய் அவளுக்குள்ளும் அதே குழப்பங்கள் இருக்க கூடும்.
கல்லூரி நாட்களில் அவள் பலரின் கதாநாயகி. படிப்பு, திறமை, அழகு, அமைதி, கொஞ்சம் நகைச்சுவை என எல்லாம் கலந்த கலவை அவள். அவள் கடக்கும்போது நண்பர்களுக்கு மத்தியில் எழும் ஒரு திடீர் அமைதி – ‘நான் வந்திருக்கிறேன்’ என்பதற்கான அத்தாட்சி. சில நண்பர்கள் அவளின் புகைப்படத்தினை அவர்களின் புத்தகத்திற்குள் வைத்திருப்பதுண்டு.
அவளின் முதிர்ச்சி தான் நண்பர்களுக்கு பெரிய பிரச்சினை. ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லும் பல நண்பர்களிடம், வெறும் சிரிப்பும், சில கேள்விகளுமாய் அவளின் பதில் விழும். பேசிய நண்பர்கள் அனைவரும் திரும்ப வந்து சொல்லும் ஒரே பதில் … ‘ அவளுக்கு விருப்பமில்லை. அப்படி சொல்வதால் அவளின் மேல் கோபம் வரவில்லை. அவளை இன்னும் பிடிக்கிறது. “.
ஒருமுறை இந்த எண்ணத்துடன் சென்ற ஒருவனிடம் அவள் சொன்ன பதில் … ” இந்த ஈர்ப்புகள் எல்லாம் சில காலமே. இது அறிவியல். ஈர்ப்புகள் முடிந்த பின், இருக்கும் யதார்த்தமே நாம். அப்போது சந்திப்போம் “. அவனுக்கு அது புரியவில்லை. ” கொஞ்ச நாள் கழித்து சொல்வாளோ ? ” என்று என்னிடம் கேட்டான். ‘எனக்கும் புரியவில்லை’ என்று அவனிடம் சொன்னேன். ஆனால் எனக்கு புரிந்திருந்தது.
ஒரு முறை நூலகத்தில் அவளை பார்க்க நேர்ந்தது. ஜே.கே வை கையில் வைத்திருந்தாள். நானும் ஜே.கே.வை கையில் வைத்திருந்தேன். ஆனால் இரண்டும் வேறு தலைப்புகள் கொண்ட புத்தகங்கள். ‘ஜே. கே. பிடிக்குமா ?’. ‘மிகவும்’ என்றேன் நான். அப்படி தொடங்கிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்தது. நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் பொறாமை கலந்த பார்வை. ஒரு நண்பன் அவனின் காதல் கடிதத்தை என்னிடம் கொடுத்து கொடுக்க முடியுமா என கேட்டான். ‘முதுகெலும்புடன் இருப்பவர்களை தான் அநேகமாய் அவள் விரும்பக்கூடும். நீயே கொடு ‘ என்று நான் சொல்லியது ஞாபகம் இருக்கிறது.
புத்தகங்கள் எங்களின் சந்திப்பினை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. அவளின் புத்தக ஆழம் எனக்கு பிடித்திருந்தது. பல தலைப்புகளில் விவாதிப்போம். புத்தகம் தவிர்த்து அவள் பேசியதில்லை. நானும் பேச விரும்பியதில்லை. ஈர்ப்பு வேறு அறிவு வேறு என புரிந்த கால கட்டம் அது.
” எப்படி இருக்கிறீர்கள் ” அவளின் கேள்வி என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. புன்னகைத்தேன். இரு பக்க விசாரிப்புகளுக்கு பின் ஒரு தேநீர் நிலையம் நோக்கி நடந்தோம்.
” மனைவி குழந்தைகள் ? ” என்று கேட்டாள். சொன்னேன்.
” கணவர் குழந்தைகள் ” என்று நான் கேட்கவில்லை. ஆனால் சொன்னாள். அதிர்ச்சியாக இருந்தது.
அமைதியாய் இருந்தேன். மனது கனமாய் இருந்தது. மென் மௌனங்கள் கொடுமையானவை. அதுவும் நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கும் போது வரும் மென் மௌனங்கள் வன் ஊசிகள்.
‘ஏன் அமைதியாகி விட்டாய் ‘ அவள் கேட்டாள்.
‘ ஒன்றுமில்லை. வாழ்க்கை ஒரு புதிரை கொடுத்து விடை கண்டுபிடிக்க சொல்கிறது. கண்டுபிடிப்பதற்குள் அந்த விடைக்கென்று ஒரு புதிரை உருவாக்கிவிடுகிறது. ” காய்ந்துபோன குரலில் தொனியில் சொன்னேன். உதடுகள் பிரியாமல் அவள் சிரித்து சொன்னள் … ” நன்றி. பொதுவாக கேள்வியால் எல்லோரும் என்னை அங்கம் அங்கமாய் வெட்டுவார்கள். அல்லது அறிவுரையால் கீருவார்கள். உன்னிடம் ஆரம்பத்தில் இருந்தே ஒரு அலைவரிசையை காணமுடிகிறது என்னால். இப்போதும் அதை நீ வைத்திருப்பது ஆச்சர்யம்தான் ” என்றாள். தேநீர் வந்தது. மௌனத்தையும் அது உடன் கொண்டு வந்தது. இரண்டு கோப்பை தேநீரும் ஒரு நீள் மௌனமும் என்று அங்கேயே கவிதை எழுத தோன்றியது.
” புதையல் தேடி புறப்பட்ட பயணிக்கு எதுவும் கிடைப்பதில்லை. பயணம் செய்ய புறப்பட்டவனுக்கு எல்லாம் கிடைக்கிறது என்று வாழ்வதால் என் இயல்பில் இருந்து மாறுவதில்லை.” .. நான் சொல்லியபோது அவளின் பார்வை என் கண்களில் நேருக்கு நேர் விழுந்திருந்தது. முதல் முறையாக அவள் என்னை இப்படி பார்ப்பதை நான் உணர்ந்தேன். அப்படி என்றால் நானும் முதல் முறையாக பார்க்கிறேன் என்றுதானே அர்த்தம் ! மீண்டும் மௌனம் ஆட்கொண்டது. இந்த மௌனம் எங்கிருந்து வருகிறது ? பேசா உலகின் சாபமா வரமா மௌனம் ?
” சரி. நான் கிளம்புகிறேன் ” அவள் தயாரானாள். நானும். அப்போதுதான் கவனித்தேன். அவளின் கைப்பைக்குள் ஜே.கே. அமர்ந்து இருந்தார்.
‘மீண்டும் சந்திப்போம் ” இருவரும்.
நான் நடக்க ஆரம்பித்த பின் எனக்குள் இருந்த கடினம் இன்னும் குறையாததை உணர்ந்தேன். ‘ஏன் இப்படி நடந்தது’ என்கிற கேள்வி மரம் துளைக்க முயலும் பூச்சியாய் என்னை துளைத்தது. அவளுக்கென்று ஒரு உலகம் இருந்தது அப்போது. அதில் இருந்து அவள் விலகி இருந்தாள். இப்போது அவளுக்கென்று ஒரு உலகம் இல்லை. இப்போதும் விலகி நிறைவாக இருக்கிறாள். அவளின் நிறைவு யாராலும் புரிந்து கொள்ள முடியா ஒன்று. இந்த உலகம் அவளுக்கு கவலை இருக்கும் என யூகித்து கொள்கிறது. அறிவுரை சொல்கிறது. கேள்வி கேட்கிறது. ஆனால் இந்த உலகப் புரிதலில் அவள் இல்லவே இல்லை. அவள் தெளிவாக இருக்கிறாள். ஆரம்ப உடல் கவர்ச்சி என்பதிலும், இறுதி உடல் சாபம் என்பதும் அவளுக்கு தெரிந்திருக்கிறது. அது புரியா உலகம் வேறு எதையோ பேசுகிறது. அவளின் திரைப்படங்கள் ஆரம்பமும் முடிவுமற்று இருக்கிறது. உலகம் ஒரு ஆரம்பத்தையும் முடிவையும் அவளுக்கு கொடுக்க நினைக்கிறது.
எனக்கு திரும்பி பார்க்க தோன்றியது. திரும்பினேன். அவளும் அதே நேரத்தில் திரும்பி பார்த்தாள். ஒரு புன்னகையில்
இருவரும் இருவரையும் பகிர்ந்து கொண்டோம். இந்த உலகப் பார்வைக்கு அந்த புன்னகை வேறு மாதிரியாக தெரியக்கூடும். நாங்கள் உடலால் விலகுவது எனக்கு புரிகிறது.
ஏதோ ஒரு புள்ளியில் நெருங்குவதும் எனக்கு புரிகிறது. அந்த நெருக்கத்திற்கு விளக்கம் எழுத தேவையில்லை என்பதில் மனது உறுதியாய் இருக்கிறது. சில மனிதர்கள் உடல் கடந்து கலந்து ஒரு அலைவரிசையில் பயணிக்கிறார்கள். அவர்களுடனான பயணம், நினைவுகள், உரையாடல்கள், இருப்புகள் நாம் அவர்களுடன் வாழ்ந்ததிற்க்கான சான்றுகள். அந்த சான்றுகள் இறக்கும் வரை நம்முடன் வாழும். அவைகள் சிற்றின்பம் சார்ந்தவை அல்ல. அவை பேரின்ப வகையின.
என் வாகனத்திற்குள் அமர்ந்த பின் கவனித்தேன். ஜே. கே. என் இருக்கையின் பக்கத்தில் கம்பீரமாய் அமர்ந்து இருந்தார். இந்த மனிதரின் எழுத்து முதிர்ச்சி வாழ்க்கையை வேறு நிலைக்கு எடுத்து செல்வது உண்மையே.
ஜே. கே. வை நீங்கள் படித்தது உண்டா ? அவரின் புரிதல் உங்களுக்கு புரிந்தால் இந்த பகிர்தல் ஏன் எதற்கு என்கிற கேள்விகள் அற்று உங்களுக்குள் அமரும். இந்த பகிர்தலின் ஆழம் உங்களின் மூழ்கும் திறனை பொருத்தது.
[ பகிர்தல் தொடரும் ]





