நான் எனப்படும் நான் : 005
நீண்ட நாளைக்கு பின் திடீரென்று தோன்றிய ஒரு வினாடி சிந்தனை என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ” சர்ச்சுக்கு செல்ல வேண்டும் “.
ஐந்தாம் வகுப்பு வரை Danish Mission பள்ளியில் படித்தபோது தான் சர்ச் எனக்கு முதலில் அறிமுகமானது. சர்ச்சின் உயரம் தான் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. அந்த உயரத்தின் மேல்புறம் தெரியும் சிலுவை என்னை இன்னும் பிரமிக்க வைக்கிறது. மழை காலங்களில் சர்ச்சிற்கு கீழ் நிற்கும்போது, அதன் வெளிப்பக்க உயர சுவற்றில் இருந்து கீழே விழும் நீரே, தனியாக மழை பொழிவதுபோல் தோன்றும். சர்ச்சிற்கு உள்புறம் இருக்கும் உயரம் எனக்கு புதிது.
அப்போது எங்களின் வீடு கூரை வீடு. அதன் உயரம் தலைக்கு அருகில் இருக்கும். தொட்டுவிடும் தூரத்தில் என் வீடு பார்த்துவிட்டு, திடீரென்று
பார்த்த உயரமான சர்ச் என்னை வியப்பிற்குள் ஆழ்த்தியது ஒன்றும் ஆச்சர்யமில்லை. நிறைய நேரங்களில் சர்ச்சின் உயரத்தை நான் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன். நம்மிடம் இல்லாதவை நம்மை ஈர்ப்பது இயற்க்கை தானே !
முள் கிரீடம் சுமத்தப்பட்ட, இரத்தம் வழியும், உடல் முழுக்க சங்கிலியால் அடிக்கப்பட்ட … கீறப்பட்ட இயேசு எனக்கு ஏனோ பிடிப்பதில்லை. ஒருவரை வலியோடு பார்த்துக்கொண்டே அவரை தெய்வமாக கும்பிடுவது எனக்குள் நிறைய வலியை ஏற்படுத்தி இருக்கிறது. திடீரென்று ஒரு நாள், இரு கைகளையும், விரித்து எதிரில் இருப்பவரை அழைப்பதுபோல் நிற்கும் இயேசு எனக்கு மிகவும் பிடித்தது. நான் கும்பிடும் தெய்வம் மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற நினைவு எனக்கு அப்போதைய பள்ளி நாட்களில். இப்போதும்கூட இரத்தம் வழியும் இயேசுவை காணும்போது ஏனோ எனக்குள் ஒரு வலி இருக்கிறது. Rio de Genero வின் இரு கை விரித்த இயேசுவை ஒருமுறை பார்க்க எனக்குள் ஒரு சின்ன ஆசை உண்டு.
சர்ச்சின் அமைதியான சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அமர்ந்த நிலையில், கண்கள் மூடியவுடன் எனக்குள் ஓடும் ஒரு மௌன ஆறு என்னை முழுவதுமாய் நனைப்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். என் மூச்சுக்காற்று எனக்குள் மேலும் கீழும் மிதந்து நகர்வதை நான் கவனித்து இருக்கிறேன். சில நிமிட அந்த மௌனம் எனக்குள் ஒரு புது அலையாய் மலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முட்டிக்கால் போட்டு, ‘பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பேராலே … ஆமென் ‘ .. என்று சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறது. தலை, மார்பு, இடது தோள், வலது தோள்… என்ற ஒரு வரைமுறை என்னுள்ளே இன்றும் இருப்பது தொட்டில் பழக்கம் வகை. ஒரு முறை காய்ச்சல் வந்த என் நண்பனுக்காக இருபது நிமிடம் முட்டிக்கால் போட்டு நான் வேண்டியது இப்போது சிரிப்பாகவும், இனிமையாகவும் இருக்கிறது.
ஆக … மீண்டும் சர்ச்சிற்கு சென்றேன். உயரம் மீண்டும் என்னை ஈர்த்தது. சிறுவயது நினைவுகள் உடன் தொடர, உள்ளே நுழைந்தேன். சர்ச்சின் அமைதி, ஆட்கள் அற்ற உட்காருமிடம், இரு கை விரித்த இயேசு, ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் … சர்ச் என்னைப்பொருத்தவரை பிரமிப்பு தான். இருந்த பைபிள் ஒன்றின் பக்கங்கள் காற்றில் பறந்து ஒரு பக்கத்தில் நின்றது. அங்கே இருந்ததை படிக்க ஆரம்பித்தேன்.
” ஆண்டவரே … நான் குற்றமற்றவன் என்பதை அறிவியும். ஏனெனில், என் நடத்தை நேர்மையானது … ” என்று அந்த பக்கம் பேசியது. மனது அந்த வரிகளில் ஒன்றியதை கவனித்தேன்.
” என்னை சோதித்து ஆராய்ந்து பாரும் “
வரிகள் எனக்காக எழுதப்பட்டதாய் உள்மனம் பேசியது.
” பொய்யரின் நடுவில் நான் அமர்வதில்லை “
” வஞ்சகரோடு நான் சேர்வதில்லை ” …
என் மனசாட்சி பேசியது போல் உணர ஆரம்பித்தேன். அந்த பக்கம் படித்து முடித்து, கண் மூடி அமர்ந்து இருந்தேன். என்னமோ தெரியவில்லை … மகிழ்வாய், நிம்மதியாய், உணர்ந்தேன். எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.
வெளியே வந்து என் வாகனத்தில் அமர்ந்தவுடன் … மனது நிறைவாக இருந்தது. சில நேரங்களில் திடீரென்று தோன்றுவதை நிறைவேற்றி முடிக்கும்போது … மனதிற்குள் எதையோ சாதித்த, ஆரம்பித்த, முடித்த … அல்லது அணைத்துக்கொண்ட ஒரு உணர்வு. நகர ஆரம்பித்த வாகனம் சர்ச்சை விட்டு விலகியது. நான்
அந்த சர்ச் அனுபவத்தில் இருந்து இன்னும் விலகவில்லை.





