நான் எனப்படும் நான் : 010
என் நட்பு வட்டாரம் என்னுடன் பயணித்து கொண்டே இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அந்த நட்பு வட்டாரங்களின் எதிர்பார்ப்பு தேடல் என் பயணங்களில் இருந்து அவர்களுக்கு கிடைப்பதை நான் உணருகிறேன்.
நிறைய நட்புக்களின் முதல் கேள்வி
” என்று உங்களுடன் நான் பயணிப்பது “என்பதே. என் முதல் பதில் ‘எப்போது வேண்டுமானாலும்’. பயணங்களை போல் ஒரு உருவமற்ற ஆசிரியர் இந்த உலகில் யாருமில்லை. ஒரு பயணம் நிறைய தீர்வுகளையும் ஒரு சில புது சிந்தனைகளையும் கொடுக்கும் என்பது என் கணிப்பு. நட்பு வட்டாரத்தில் பலர் என்னுடன் பயணம் செய்திருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான அவர்களின் பயணங்கள் ‘சுற்றிப் பார்க்க’ என்று மட்டுமே இருந்து, பார்த்து முடித்தவுடன் விலகி செல்வதை என்னால் உணர முடியும். அது ஒரு ‘உபயோகப்படுத்தப்பட்ட’ நிலை. அவர்களை நினைத்து சிரித்து சென்று விடுவது என் வழக்கம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதால் அவர்களால் நீண்ட நேரம் நடிக்க முடிவதில்லை. நட்பு வட்டாரங்களில் இன்னும் சிலர் உண்டு. என்னுடன் பயணித்து, பயணத்தினை முழுவதுமாக அனுபவிப்பவர்கள். அவர்களின் அடுத்த கேள்வி எப்போதுமே … ‘திரும்ப எப்போது செல்லலாம் ‘ என்பதே. இன்னும் வெகு சிலர் உண்டு. அவர்கள் மட்டுமே என் பயணங்களில் நான் என்ன கவனிக்கிறேன், உணருகிறேன் என்பதை நுண்ணிப்பாக கவனிப்பவர்கள். இவர்களின் சில கேள்விகள் என்னை வெகுவாக நேர்மறையாக பாதித்தது உண்டு.
அப்படி ஒருமுறை என்னுடன் பயணம் மேற்கொண்ட ஒருவர் என்னை கேட்டார்.
” களைப்பு என்பதே உங்களிடம் இல்லை. நீண்ட தூர பயணங்களில் பொதுவாக களைப்பும் ஒரு பகுதி. என் பார்வையில் நீங்கள் இயற்கையை ரசிப்பதால் களைப்பு அடைவதில்லையோ ?” என்று கேட்டார். ஆம் என்ற சிரித்த பதில் என்னுடயது அவருக்கு. அவரின் அடுத்த கேள்வி எனக்கு ஆச்சர்யமானது …
” அது எப்படி இந்த வேகத்தில் செல்லும்போது திடீரென ஒரு இடத்தில் நிறுத்தி புகைப்படம் எடுக்க முடிகிறது உங்களால் ? நானும் அருகில் இருக்கிறேன். ஆனால் எனக்கு அந்த காட்சி நீங்கள் புகைப்படம் எடுத்த பின்பே தெரிகிறது ” …
நான் கொஞ்சம் யோசித்த கேள்வி இது. எப்படி என்று எனக்கும் தெரியவில்லை. வாகனம் ஓட்டும்போது கண்ணாடி வழி தெரியும் காட்சிகளை மனம் நொடி நேரத்தில் அசைபோட்டு ‘
‘இது சிறப்பாக வரும்’ எனும்போது நிறுத்தி புகைப்படம் எடுக்கிறேன் என எனக்கு தோன்றியது. நிறைய காட்சிகளை புகைப்படமாக எடுக்க முடியாமல் நான் செல்லும்போது மனது நமக்கு பிடித்த குழந்தையை விட்டு பிரிவது போல் வருத்தப்படும். ஏன் நிறுத்த முடியாமல் போனது என்று வருத்தப்படுவதும் உண்டு.
ஒருமுறை என்னுடன் பயணித்த பெண் நட்பு கேட்டது.
” ஏன் பயணங்கள் ? ஏன் ஒரே இடத்தில் இருந்து மனிதர்களை பார்த்து கற்க முடியாதா ? ” நான் கொஞ்ச நேரம் யோசித்து சொன்னேன்.
” கற்கலாம். ஆனால் சூழ்நிலை ஒரே நிலையில் இருப்பதால், அதில் சவால்கள் இருப்பதில்லை. சூழ்நிலைகள் மாறும்போது சவால்களின் தன்மை வித்தியாசமாக இருக்கும். அது கொடுக்கும் பாடங்கள் வேறு “. “
ஏன் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதில்லை ? ” …என்ற அடுத்த கேள்வி அந்த நட்பிடம் இருந்து வந்தது. ” ஆரம்ப காலத்தில் இரு சக்கர வாகன பயணம் மட்டுமே. பின் நான்கு சக்கர வாகனம் வந்ததும் இதிலேயே பயணிப்பது என்பது பிடித்து போய்விட்டது என நினைக்கிறேன். இப்போது மீண்டும் இரு சக்கர வாகன பயணம் தொடங்க தோன்றுகிறது ” … “
ஏன் வாகனம் முழுக்க புத்தகங்கள் ? ” …
” தாமதமாகும் தருணங்கள் அனைத்தும் எனக்கு புத்தகம் படிக்கும் தருணங்கள். போக்குவரத்தில் நெரிசல் என்றால் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு படிக்க ஆரம்பித்து விடுவேன். சிறிது நேரம் கழித்து போக்குவரத்து சரியான பின் எப்போதும்போல் வாகனம் நகரும் “
” தனியாக பயணிப்பது ? “
” அது எனக்கான உலகம். நான் நானாக
முழுமையாக இருக்கும் நேரம் அது மட்டுமே. விரும்பும் பாடல்கள் என்னுடன் பயணிக்கும் நேரங்கள் அவை. என் நினைவுகள் எப்போதும் கடந்த காலத்தில் வாழ்வதில்லை. பெரும்பாலும் ‘அப்போதைக்கு நடந்த, நடக்கும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை அசை போட்டவாறு நான் பயணிக்கும் காட்சி அது . அந்த உலகத்தை புரிந்து கொள்வது மற்றவருக்கு கொஞ்சம் சிரமம். எனக்கான நேரங்களில் தோன்றும் நிறைய யோசனைகள் பின்பு நிறைய நேர்மறை முடிவுகளை வாழ்க்கைக்கு கொடுத்திருக்கின்றன. என்னை பொறுத்தவரை, ஒரு மனிதன் தனியாக பயணிக்க வேண்டும். பிரச்சினைகளையும், மகிழ்வுகளையும் தனியாக சந்தித்து அதன் வீர்யத்தை உணர வேண்டும். அதுவே அவனுக்கு அவளுக்கு மன பலத்தை கொடுக்கும். இமய மலை பயணங்களில், நான் தனியாக நடந்து சென்ற நாட்கள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. “
நான் பயணிக்கும்போது எந்த திட்டமும் வைத்துக்கொள்வதில்லை. ‘எப்போது’ என்ற கேள்விதான் எனக்கு மிகவும் சவாலான கேள்வி. திட்டமற்ற பயணங்கள் என் வாழ்வின் அஸ்திவாரம். அவையே எனக்குள் செங்கல் பாடமாய் நிற்கின்றன. அவைகளின் தாக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அவைகளின் அறிவுரைகள் எனக்குள் நிஜ வாழ்க்கையை கைகாட்டி கொண்டே இருக்கின்றன. அந்த பயணங்கள் எனக்கு கண்ணாடியாய் உள்ளே பதிந்து இருப்பதால், என் முன்னே நடிக்கும் மனிதர்களை ‘எளிதாக’ கண்டறிய முடிகிறது. அந்த மனிதர்கள் என்னுடன் நீண்ட காலம் பயணிக்க முடிவதில்லை என்பது எதார்த்த உண்மை. ‘நடிப்பு’ என்பது ஏன் என கேட்க தோன்றுகிறது எனக்கு. இதுதான் நான் என ஏன் சொல்ல முடிவதில்லை ? சில தகுந்த காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வெறும் நடிப்பு ? வன் எரிச்சல்.
என் பயணங்களில் பங்கு கொள்ள விரும்புபவர்களை வரவேற்கிறேன். [ சரஹாவில் அதிக கேள்விகள், நான் உங்களுடன் பயணிக்க வரலாமா என்பதே ! ] அப்படி வருபவர்களிடம் ஒரே ஒரு பார்வையை பதிய வைக்க விரும்புகிறேன். ‘சுற்றிப் பார்க்க’ என்னுடன் வர வேண்டாம். அப்படி வந்த கூட்டங்கள் எல்லாம் என்னில் இருந்து சில நாட்களில் தொலைந்து விடும். ‘உங்களை பற்றி’ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் என்னுடன் பயணிக்கலாம். அந்த பயணம் உங்களின் முகமூடிகளை கிழித்து எரிந்து, நிஜ உங்களை உங்களுக்கு
காட்டும். அதற்க்கு தயாரா ? உங்களுக்குள் நிறைய புது பரிமாணங்களை ஏற்படுத்தும். பயணம் தொடங்குபோது இருந்த நீங்கள் முடிவடையும்போது தொலைந்து இருப்பீர்கள். ஒரு புதிய நீங்கள் உங்களுக்குள் வலம் வரும். உங்களின் பேச்சு சிந்தனை யோசிக்கும் விதம் வேறு விதமாய் மாறி இருக்கும். இதற்க்கு நீங்கள் தயார் எனில் நீங்கள் என்னுடன் பயணிக்கலாம். என் இடப்பக்க இருக்கை உங்களுக்காக காத்திருக்கும். ஒரு நாள் பயணமோ அல்லது ஒரு மாத பயணமோ அல்லது ஒரு சில மணி நேர பயணமோ … உங்களின் முகமூடியை கிழித்து எரியும் அந்த கணங்களுக்கு நீங்கள் தயாரா ?
ஆம் எனில் வரவேற்கிறேன்.





