அவனும் அவளும்: 007
” நீ உள்ளே போ. நாங்க பேசும்போது உனக்கு இங்க என்ன வேலை ” என்று அவன் சொன்னவுடன் அவளுக்கு கோபம் உச்சிக்கு மேல் எகிறும். அங்கேயே அவனை அறைய தோன்றும். ‘என்னை ஏன் உள்ளே போகச் சொல்கிறாய்‘ என்று இரண்டாவது அறையையும் விடத்தோன்றும். அவனேதான் சில மாதங்களுக்கு முன் ‘இது உன் குடும்பம்‘ என்று சொன்னான். ஆனால் ஒரு பிரச்சினை வரும்போது, அவள் பக்க நியாயத்தை சொல்ல வரும்போது, ‘உள்ளே போ‘ என்று சொல்லும் அவன் என்ன ரகம் என்று அவளுக்குள் ஆயிரம் ஆணி ஒன்று சேர்ந்து அடித்தது போல் வலிக்கும். ஒரு பிரச்சினை வரும்போது ‘இங்க உனக்கு என்ன வேலை‘ என்று கேட்டு, ஒரு Professional Operation – ரொம்ப cleverஆக, அழகாக அவனால் நடத்தப்படும். அவள் அறைக்குள் புழுங்குவாள். நடந்ததை சொல்ல முடியாமல், கண்களில் நீருடன், அவள் உள்ளே அமர்ந்து இருப்பாள். அவளிடம் நடந்ததை கேட்காமல், அப்படி அவர்கள் வெளியில் என்ன பேசிவிடமுடியும் என்பது அவளால் புரிந்து கொள்ள முடியாது போகும். அவள் படித்த பள்ளியில், கல்லூரியில் இந்த பாடத்தை மட்டும் யாரும் அவளுக்கு எடுத்திருக்கவில்லை. முதல் வகுப்பில் தேர்ந்த அவள், இந்த பாடத்தின் தலையும் வாலும் புரியாமல் தடுமாறுவாள்.
ஒரு சம்பவம் நடக்கிறது. அவள் மற்றும் அவனின் குடும்ப உறுப்பினர்கள் அந்த சம்பவத்தில் பங்கு பெற்றிருப்பார்கள். அவன் வெளியே இருந்திருப்பான். அவனுக்கு நடந்ததே தெரியாது. வீட்டிற்கு அவன் வரும்முன், முதல் தகவலை பதிய, [முதல் தகவல் அறிக்கை காவல் நிலையத்தில் மட்டுமே பதியப்படுகிறது என்று ஊர் நினைத்துக்கொண்டிருக்கும்] அவனுக்கு கொடுக்க, அத்தனை பேரும் வேறு வேறு strategies செய்வார்கள். அவன் நம்ப வேண்டும் என்பதற்கு செய்யப்படும் strategies எந்த levelக்கும் செல்லும். ஒரே நாளில் அவள் ‘கொடுமைக்காரி‘ ஆக்கப்படுவாள். ‘வீட்டை பிரிப்பவள்‘ என்ற இலவச பட்டம் வழங்கப்படும். அவள் அவனை தொடர்புகொள்ளும் முன் இதெல்லாம் நடந்து முடிந்திருக்கும். அவள் தொடர்புகொள்ளும்போது, அவன் அவள் சொல்வதை ‘formal’ ஆக கேட்டுவிட்டு, அவளிடம் ஒரு கேள்வி கேட்பான். அந்த கேள்வி தான் அவளுக்கு ‘தகவல் முதலிலேயே போய்விட்டது‘ என்பதை புரிய வைக்கும். பெரும்பாலும் அந்த கேள்வி ‘அவளுக்கு திமிர் அதிகமாயிற்று‘ என்ற பதத்தை தாங்கியே வரும். இரவில் கொஞ்சிவிட்டு, காலையில் சிரித்து சென்றவனுக்கு எப்படி திடீரென்று அவள் ‘திமிர் அதிகமானவள்‘ ஆகிப்போனாள் என்பது புரியாத புதிர்.
அவள் வீட்டிற்கு அவள் செல்லும்போது, அவளின் பைகள் மட்டும் மீண்டும் மீண்டும் கவனிக்கப்படும். பார்வை scan என்ற ஒன்று அவளை குலைய வைக்கும். ‘இரண்டு வீடும் ஒன்றே‘ என்று வெளியில் சொல்லிவிட்டு, இங்கிருந்து எதுவும் ‘அங்கு‘ போய்விடக்கூடாது என்கிற அளவில் நடத்தப்படும் நுண்ணிய அரசியல் அது. வெளியில் இரண்டு குடும்பமும் ஒன்றே. ஆனால் உள்ளே…. உங்கள் குடும்பம் வேறு எங்கள் குடும்பம் வேறு என்கிற நிலை. கட்சி நடத்தும் அரசியல்வாதிகள் தோற்றுப்போவார்கள் இந்த strategiesகளுக்கு முன். அவள் எடுத்து வைத்த ஒரு பழைய துணி கிட்டத்தட்ட அவளுக்கு ஒரு ‘திருடி‘ பட்டத்தை பெற்றுத்தரும். அவள் பிறந்த வீட்டில் தன் கையால் பலருக்கு உதவிய அவளுக்கு, புகுந்த வீட்டில் கிடைக்கும் திருட்டு பட்டம், வீட்டிற்குள் மட்டும் முள்கிரீடமாய் வலம் வரும். வெளியுலகில் அவள்தான் அந்த வீட்டின் ராணி என்ற அறிவுப்பு நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கும். அதை சொல்பவனும் அவனே. உள்ளே ‘கொடுமைக்காரி‘ ‘வீட்டை பிரிப்பவள்‘ ‘திருடி‘ ஆனால் வெளியே ‘வீட்டின் ராணி‘ … இந்த முகமூடிகள் வலுக்காட்டாயமாக அவள் முகத்தின் மேல் அணிவிக்கப்படும். இந்த இரு முகமூடிகளுக்குள் அவள் வாழமுடியாது தவிப்பாள். இதை காதுகொடுத்து கேட்க வேண்டிய அவன் சூழ்நிலையை கவனிப்பான். அவளை ‘கட்டுக்குள்‘ கொண்டுவர இதுவே சரியான வழி என்று திடீர் உலக நியாயம் பேசுவான். திடீரென்று மாறிப்போன அந்த முகங்களை கண்முன் பார்த்துக்கொண்டு வாழ்வதே பெரிய தண்டனை. குற்றமே தண்டனை. ஆம். அவர்களின் குற்றமே அவளின் தண்டனை. இவ்வளவையும் மீறி அவள் அவர்களை சரியாக கவனித்துகொள்ள வேண்டும் … இல்லை எனில் ‘நான் சொல்லல … அவள் அப்படிதான்‘ என்று ஏற்கெனெவே பின்னப்பட்ட வலைக்குள் அவளை பொருத்தும் முயற்சிகள் அழகாக நடக்கும். புத்திசாலி அவள் ‘போங்கடா‘ என்று சொல்லிவிட்டு நடையை கட்டுவாள். சில ‘மிக புத்திசாலி‘ அவள்கள் எல்லாவற்றையும் பொறுத்துப்போகும். ” ‘பார்த்து பார்த்து‘ செய்யணும், இல்லைன்னா பேர் கேட்டுபோய்விடும்‘ என்று சமாளிப்புகள் வேறு. அத்தனைக்கும் பின் ‘குற்றமே தண்டனை‘ லாஜிக் வாழும். ஆம். அவர்களின் குற்றம். அவளுக்கு தண்டனை. அந்த ‘மிக புத்திசாலி‘ அவள்கள் மிகச் சரியாக ஒரு வலைக்குள் பின்னப்படுவார்கள். அந்த வலையில் இருந்து அவளால் வெளியே வரவே முடியாதபடி அழகாக பின்னப்பட்டிருக்கும். ‘நீ சரியில்லை‘ என்பது உள் வீட்டின் branding அவளுக்கு, ‘பரவாயில்லைங்க ஓரளவுக்கு நல்ல பெண்‘ என்பது வீட்டிற்கு வெளியே branding. இந்த இரு brandingகிலும் அவள் சரியாக marketing செய்யப்படுவாள். அவள் விரும்பாமலேயே இந்த உலகமும் அவள்கள் மீது பொருத்தப்பட்ட brnadingஐ நம்ப ஆரம்பிக்கும்.
ஒரு சில சென்ட் நிலப்பரப்பில், வீடு என்கிற மூடப்பட்ட சிறைக்குள், நான்கு அல்லது ஐந்து மனிதர்களின் முகமூடிகளுடன், அவள் செய்யும் மனப்போர் இந்த உலகின் அடுத்த உலகப்போர். அதே நேரத்தில் அவளை பெற்றெடுத்த குடும்பத்தின் நான்கு அல்லது ஐந்து மனிதர்களுக்கு அவள் உள்ளதை சொல்ல முடியாத நிலையும் அவளுக்கு ஏற்படுத்தப்படும். வாள் வீச தயாராகும்போது, இரண்டு காலிலும் இரும்பு சங்கிலி கட்டப்படும். மீறி வாள் வீச தயாரானால், அவள் முதலில் எதிர்க்க வேண்டியது அவனைத்தான். அவனை பொறுத்தவரை போர் என்று வந்தால், வெற்றிபெற, அவனுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் தேவை. [ தனியாக அவனால் அவளை ஜெயிக்கவே முடியாது ]. அவனுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் தேவைப்படுவது போல், அவளும் தனியாக நிற்க வேண்டும். அப்படி ஒரு போராட்ட களத்தை அவன் ஏற்படுத்துவான். நான்கு அல்லது ஐந்துக்கு ஒன்று. அதுவும் காலில் கட்டப்பட்ட சங்கிலியுடன். அவள் எல்லாவற்றையும் calculate செய்துபார்த்துவிட்டு, வாளை வீசுவாள். அவன் மேல் அல்ல–கீழே, தரையில். கோபத்தையும் வேகத்தையும் தொண்டைக்கு உள்ளே தள்ளிவிட்டு, காலில் விழுவது போல நடிப்பாள். அந்த அரசியலுக்குள் அவளின் முதல் entry அது. உள்ளே ‘காத்திருப்பும்‘ வெளியே சிரிப்புமாக தன் வாழ்க்கையை தொடர்வாள். அவன் பேசும் நியாயங்களுக்கு பல அவள்கள் தரை பார்த்து, மௌனமாய் தலை ஆட்டுவதன் பின்னால் இருக்கும் அரசியல் இதுவே. அந்த வீடு ஒரு மௌனமான அரசியல் விளையாட்டை காணத் தயாராகும். ஆனால் இவ்வளவிற்கும் மத்தியில், அவனுடன் சேர்த்து, அந்த நான்கு பேர் மட்டும் இன்னும் வாள் வைத்துக்கொண்டு நிற்பார்கள். அப்படி ஒரு நியாயமான போர் அது !
அரசியல்வாதியாவதா, தனித்தன்மையை இழக்காமல் இருப்பதா என்ற ஒரு கேள்விக்கு அவள் குடும்ப தலைவியாவதும், தனிப் பெண்ணாய் வாழ்க்கையை எதிர்கொள்வதும் பதிலாக இருக்கிறது. என் வீடு இப்படி இல்லை, என் அவன் இப்படி இல்லை என்று சொல்லும் அவள்களுக்கு ஒரு கேள்வி … ‘எத்தனை நாள்களுக்கு இப்படி நடிக்கப்போகிறீர்கள் ?’