அவனும் அவளும் – 011
அவளுக்கு ஒரு சந்தேகம். ஒரு கேள்வி. ஒரு குழப்பம். ஒரு தெளிவற்ற நிலை. அவனிடம் கேட்பாள். அவன் உலக business க்கும் அரசியலுக்கும் அறிவுரை சொல்பவன். ஆனால் அவளின் நியாயமான குழப்பங்கள் அவனுக்கு எரிச்சல் வரும். அவனால் அவளின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. தடுமாறுவான். அவனுக்கு உலகம் பேச வேண்டும். ஏன் தெரியுமா ? என்ன வேண்டுமானாலும் பேசலாம். கேள்வி கேட்க அங்கு யாரும் இல்லை. அவளின் கேள்விகள் அவனுக்கு சிறுப்பிள்ளைத்தனம்.
அவள் அவன் பேச விரும்பவில்லை என்று புரிவாள். யாரிடம் இதை கேட்பது என்று யோசிப்பாள். நட்பிடம் கேட்டால் என்ன என்று தோன்றும். நம்பிக்கையான நட்பை தேடுவாள். தன்னை தன் குடும்பத்தை எந்த விதத்திலும் disturb செய்யாத நட்பு வேண்டும் என்று யோசிப்பாள். இயற்க்கை அவளை அணைக்கும். யாரோ ஒரு நட்பு கைகொடுக்கும். அவளின் சந்தேகங்களை தீர்க்கும். கேள்விக்கு பதில் தரும். குழப்பங்களுக்கு விடை சொல்லும். ஒரு தெளிவை உண்டாக்கும். அவளுக்கு அந்த நட்பை பிடித்து போகும். அவள் அங்கு அவளாக இருக்க முடிவதே காரணம். வேறு ஒரு dash ம் அந்த நட்பில் இருக்காது. வாழ்க்கையை அழகாக புரியவைக்கும் நட்பு அது. அவனுக்கு ஒரு ‘அவள் நட்பும்‘, அவளுக்கு ஒரு ‘அவன் நட்பும்‘ அமைந்து விடும். எல்லையை சரியாக புரிந்து பயணிக்கும். குடும்ப உணர்வுகளை மதிக்கும். மெல்லிய இடைவெளியில் மரியாதையை வைக்கும். உடல் கடந்து ஆழ்நிலையை உணரும்.
( ‘லட்சுமி‘ நட்பு இது என்று குழப்பி கொள்பவர்களுக்கு இதற்கு மேல் படிக்க தகுதியில்லை ! )
இப்போது அவனுக்கு ஒரு சந்தேகம் வரும். எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் எதுவும் கேட்பதில்லையே ? அங்கு ஆரம்பிக்கும் அவனின் zoom lens dash புத்தி. அவள் chat பார்த்து சிரித்தால், அவனுக்கு கோபம் வரும். ‘அப்படி யாரிடம் பேசுகிறாள் ‘ என்று யோசிக்கும் அந்த ‘தும்பை விட்டு வாலை பிடிக்கும்‘ ஆண்மை. அவன் பேசியிருந்தால், அவன் அவளுக்கு சிறப்பான நட்பாக மாறி இருந்தால், ( அதற்கு தானே ஒரு வீட்டில் இறக்கும் வரை ஒரே ஒருவனுடன் வாழ்க்கை ! ) அவள் சொல்லாமலே அவளின் சந்தேகங்கள் தெளிவாக்கப்பட்டு இருந்தால் …அவள் ஏன் இன்னொரு நட்பை தேடுவதை பற்றி யோசிக்கிறாள் ? அவளுக்கு சந்தேகம் வரும். அவனை bypass செய்து நட்பை கேட்பாள். எப்படியும் அவன் தன் கேள்வியை ஏளனமாக பார்ப்பான் என்கிற preset அவளுக்குள் படர்ந்து இருக்கும். அவனும் அதை மெய்ப்பிப்பான். ‘ உனக்கென்ன தெரியும் ‘ மனநிலையில் … அவன் பார்வைகள், அவளை நிச்சயமாக அவனை bypass செய்ய வைக்கும். அவனே bypass க்கு சென்றுவிட்டு தன்னை அவள் ஒதுக்குவதாக புலம்புவான். மூடத்தனம்.
அவளுக்கு நட்பின் மூலம் உலகம் தெரிய வரும். அவன் அடைத்து வைத்த தாழ்ப்பாள்கள் ஒவ்வொன்றாக விலகும். திரை விலக உலக இயல்பும் அழகும் நடப்பும் புரியும். இதற்குள் அவன் சராசரி அவனாகும் முயற்சியில் இருப்பான். ‘ யாருடன் தினசரி பேசுகிறாய் ‘ என்று ஆரம்பிப்பான். முட்டாள். அவளிடம் ….. ‘ நான் எங்கே உன்னை miss செய்தேன் என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் ? ‘. சந்தேகம் வலுக்கும். அவள் உண்மையாய் ‘ நீங்கள் பேசவில்லை எனில் நான் யாரிடம் பேசுவது ‘ என்று சொல்வாள். அவன் ‘ என்ன special’ அந்த நட்பிடம் என்று இன்னொரு அர்த்தத்திற்கு தாவுவான். அவள் உள்ளதை சொல்வாள். அவன் உள்ளதை தவிர எல்லாவற்றையும் கற்பனை செய்வான். அப்படி ஒரு திறமை அவனிடம் ! தன் அவள் நட்பிடம் அவளை இழந்து விட்டதாய் முதலில் நினைப்பான். பின் பேச ஆரம்பிப்பான். பின் செய்தித்தாளாக மாறுவான். பின் நியாயவானாகி விடுவான். அவள் இப்போது ‘சரியற்ற அவள்‘ என்ற கூண்டிற்குள் அழகாக அடைக்கப்படுவாள். கூண்டுகளின் பக்கங்கள் கேவல மனித முகங்களாய் காட்சி அளிக்கும். அவ்வப்போது அவளின் சதையை கொத்தி கொண்டே இருக்கும். இரத்த அகதி நிலை அவளுடையது.
ஆக மொத்தமாய் அவன் அவளை ஒரு சந்தேக வலைக்குள் செலுத்தி வாழ முடியாமல் செய்ய முயற்சிப்பான். இப்போதும் நட்பே உடன் இருக்கும். அனைத்து மன திடத்தையும் கொடுக்கும். ஆனாலும் எல்லை வகுத்து அழகாக பயணிக்கும். அவனுக்கு இது புரியாது. அவள் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்பதை அவன் கடைசி வரை உணர மாட்டான். அவள் முகம் சேற்றில் மூழ்க வேண்டும் அவனுக்கு. அவள் மூச்சு விட முடியாது திணற வேண்டும். சேற்றில் நனைத்து நனைத்து அவளை தடுமாற செய்ய வேண்டும். சந்தேகம் தானே .. bye சொல்லி விலக வேண்டியதுதானே ? என்றால் .. ஊர் நியாயம் பேசுவான். அவன் வாழ்க்கையே போய்விட்டது என்பான். ‘ அவன் முகம் கொடுத்து பொறுமையாக பேசி இருந்தால், நல்ல நட்பாக மாறி இருந்தால் ‘ இப்படி ஒரு நிலை அவனுக்கு வந்திருக்காது. அவனுக்கு கடைசி வரை அது புரியாது. ஒரு வலைக்குள் சிக்கிய மீன், மீன் பிடித்தவனிடம் அன்பாக பேச முயற்சிக்கிறது. முடியாது என்று தெரிந்ததும், நீருக்குள் விழ முயற்சிக்கிறது – அதுவும் வலைக்குள்ளேயே !. அவன் இதெல்லாம் புரியாதவன். வலைக்குள் மீன் இருக்க வேண்டும். அவனும் பேச மாட்டான். வேறு யாரும் பேசக்கூடாது. ஒவ்வொரு இரவிலும் மீனின் ஒவ்வொரு பகுதியாய் அவன் சுவைக்க வேண்டும். மீண்டும் வலை. மீண்டும் பேச மாட்டான். மீண்டும் யாருடனும் பேசக்கூடாது. மீனை கொல்லவே மாட்டான். வாழ்நாள் மீன் அது அவனுக்கு. மீனை கொல்லவும் தெரியாது, கொள்ளவும் தெரியாது. என்ன ஒரு திறமையான மீன் பிடிப்பாளன் அவன் ?
நட்பை அவனால் புரிந்து கொள்ள முடியாது. அவளுக்கு dash வேண்டும் என்று ஒடுவதாக நினைப்பான். அவனிடம் ஒரு கேள்வி. அந்த dash கொடுக்கத்தான் அவன் இருக்கிறானே ? அப்படி எனில் அவள் வெளிநோக்குவது வேறு எதற்க்கோ என்று மட்டும் அவன் உணரவே மாட்டான். நிறைய அவள்கள் குழந்தை என்று ஒன்று இருப்பதால் அமைதியாக வாழ்வது அவனுக்கு புரியாது. ‘குழந்தை மட்டும் இல்லை எனில்‘ ……. என்ற வரியை சொல்லாத அவள்களை இன்னும் இந்த பூமி பார்க்கவில்லை !
Invisible எல்லை என்று ஒன்று வைத்து, சுக துக்கங்களை, முடியும் முடியாததை, குழந்தைத்தன்மை முதிர்ச்சியை … வெளிக்கொணரும் நட்பை அவன் உணர வேண்டும். மதிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அவன் உணர வேண்டும். உணர்ந்து அவன் அவளுக்கு மிகச்சிறந்த நட்பாக மாறுவதே உறவின் அழகிய நிலை. அந்த நிலையை அவன் அடையாத போது அவள் நட்பை நோக்கியும், அவளை நோக்கி நட்புக்களும் நகர்வது வாழ்வின் தவிர்க்க முடியா இயல்பு !
( இதை படித்த பின் அவளை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கும் அவன்களுக்கு இந்த எழுத்துக்கள் சமர்ப்பணம் ! )