நான் எனப்படும் நான் : 009
முதல் முதலாக புகைப்படம் எடுத்த போது, என் நண்பன் சொன்னான் … ” சரியா எடுக்கலைடா நீ ? பாதி முகம்தான் இருக்கு. மீதியை காணோம் ? ” … அப்போதுதான் புகைப்படம் என்று ஒன்றை பார்த்தேன். அதற்க்கு முன் வரை புகைப்பட கருவியை உபயோகிப்பதே பெரிய சாதனையாக நான் நினைத்திருந்தேன். புகைப்படங்களை கவனிக்க ஆரம்பித்தேன். புகைப்படங்கள் பொதுவாக சுவற்றில் தான் தொங்க வைக்கப்படுகின்றன. சுவற்றில் தொங்கும் புகைப்படங்கள் கிட்டத்தட்ட நம்மை கேள்வி கேட்கும் உயரத்தில்தான் இருக்கின்றன. தொங்கும் நினைவுகள் அவை. எங்களை மறந்து விடாதே என்பதே அந்த தொங்கும் நினைவுகளின் நிலையான கோரிக்கை. கருப்பு வெள்ளை புகைப்படங்கள் தான் என்னை முதன் முதலாக ஈர்க்க ஆரம்பித்தன. கருப்பு வெள்ளையில் கவனம் சிதறாமல் இருக்கும் வாய்ப்பு அதிகம். புகைப்படத்தில் இருக்கும் கண்கள் அவ்வளவு அழகாக பார்வையாளருடன் இணையும்.
வண்ண புகைப்படங்கள் வர ஆரம்பித்த பின், வண்ணங்களின் கலவை என்னை கவர ஆரம்பித்தது. பிலிம் கேமராவில் படம் எடுக்க தொடங்கிய நான், பின்பு சோனி கேமராவில் படம் எடுக்க ஆரம்பித்தேன். பின் கேனான் காமெராவின் வரவு.
புகைப்படம் போல் ஒரு அருமையான நிகழ்வு இந்த உலகத்தில் இல்லை. அந்த ஒரு வினாடியில் நடக்கும் நிகழ்வு பதிவாவதை விட, இந்த உலகத்தில் வேறு என்ன சிறப்பாக இருக்க முடியும் ? ஒரு புகைப்படம் எடுக்கப்பட்ட பின் மீண்டும் அதே இடத்தில் எவ்வளவு வருடங்கள் காத்திருந்தாலும் இன்னொரு புகைப்படத்தை ஏற்கெனெவே எடுத்து போல் எடுக்கவே முடியாது. உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அதற்க்கான தடயம் தான் புகைப்படங்கள். ஒரு மனிதரின் அறுபது வருட வாழ்க்கை புகைப்படங்களாக மாறும்போது மனிதனிடம் ஏற்படும் மாற்றங்களை எளிதாக பார்க்க முடியும். சுருள் முடியுடன் இருக்கும் என் அப்பா, இப்போதைய புகைப்படங்களில் சுருள் முடியுடன் இருக்கும் என் அப்பா, இப்போதைய புகைப்படங்களில் சுருள் முடியினை இழந்து சிரிக்கிறார். அறுபது வருட வாழ்வினை சில புகைப்படங்களில் விளக்கி விட முடியும் என்பதே புகைப்படங்களின் பலம்.
புகைப்படங்கள் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ் அதிர்வுகளை இன்னும் இந்த உலகில் வேறு யாரும், வேறு எதுவும் ஏற்படுத்தவில்லை. என்னுடைய சில புகைப்படங்களை நான் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேன். என் புகைப்படங்களுக்கு நானே முதல் ரசிகன். நானே முதல் எதிரி.
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இருக்கும் புகைப்படங்களே என் சொத்துக்கள். அவை நான் இறந்த பின்னும், இங்கு வாழும். உங்களின் முகம் அதில் தெரியும்.





