நான் எனப்படும் நான் : 008
என்னிடம் பொதுவாக கேட்கப்படும் கேள்வி … ” எப்படி இந்த பயிற்சியாளர் துறையை தேர்ந்து எடுத்தீர்கள் ? “
அப்பாவிற்கு முதல் கைதட்டல். கல்கண்டு, அம்புலிமாமா… வாங்கி கொடுத்து படிக்க சொல்லியபின், மெதுவாக என்னை நூலகத்திற்கு இழுத்து சென்ற மனிதர். அங்கிருந்து நான் புத்தக வில்லைகளால் உலகம் படிக்க ஆரம்பித்தேன். கள்ளக்குறிச்சியின் நூலகத்திற்கு, அத்துணை நன்றிகளும். மீண்டும் ஒரு முறை அந்த நூலகத்திற்கு சமீபத்தில் சென்று வந்தேன். அரசாங்கம் இன்னும்
நூலகங்களுக்கு நிறைய செய்ய வேண்டும். என் உயிர் பிரிவதற்குள், ஒரு நூலகத்தை இந்த உலகத்திற்கு கொடுத்து விட்டு செல்ல நான் விரும்புகிறேன். அதற்க்கான பணி கூடிய விரைவில் ஆரம்பிக்கிறேன்.
பள்ளி காலகட்டம் முடிந்து, கல்லூரியில் இந்த நூலக வாசிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. கல்லூரி முடித்த பின் கிடைத்த காலங்கள் அருமையானவை. நான் புத்தகங்களை ரசித்து ருசித்து படிக்க தொடங்கிய நாட்கள் அவை. கிட்டத்தட்ட புத்தகங்கள் என்னுடன் என் படுக்கை அறையை பங்கு போட தொடங்கியிருந்த நாட்கள் அந்த நாட்கள். எல்லோரும் அப்போது உள்ளே வந்தனர். விவேகானந்தர் முதல், ஓஷோ முதல், உலகத் தலைவர்கள் முதல், சுஜாதா முதல், அசோகமித்திரன் முதல், டேல் கார்னகி முதல், பெரும் தொழில்சாலைகள் வெற்றி பெற்றது முதல், ஆனந்த விகடன் முதல் …. அனைத்தும் என் அறைக்குள் வரத் தொடங்கி இருந்தன. பின் புத்தா வந்தார். புத்தா வந்த பிறகு எல்லாவற்றிக்கும் ஒரு புது வடிவம் கொடுத்தார். எல்லாவற்றில் இருந்து விலகி, ஆனால் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய சொன்ன புத்தா எனக்குள் மெதுவாக நுழைய ஆரம்பித்தார். இமயமலை என்னை அழைக்க ஆரம்பித்தது இங்கே தான். ஒரு யோகியாக மாறிவிடக்கூடிய மனநிலை அப்போது. ஏனோ தெரியவில்லை .. புத்தா இன்றும் எனக்குள் ஏதோ செய்வது நிஜம். நான் என்ற பிரமைக்குள் என்னை கூட்டி சென்று, நான் அற்ற என்னை கண்டறியச் செய்யும் அவர், என்னுடைய சிறந்த நண்பராக இருப்பதில் ஐயமில்லை. போதி மரம் சென்று, அங்கே கீழே அமர்ந்த போது இருந்த நான் தான், நான் விரும்பும் நான்.
பயிற்சியாளர் என்பது ஒரு புள்ளியில் சடேரென்று நிகழ்ந்து விடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் அதில் கவரப் பட்டேன். எனக்குள் இருக்கும் ஏதோ ஒன்று பயிற்சியாளருடன் சிறப்பாக இணையத் தொடங்கியதை நான் உணர்ந்தேன். என் உடல், உயிர், ஆன்மா எல்லாம்……. பயிற்சியாளராக நான் இருந்த போது, வேறு ஒரு தளத்தில் செயல்பட்டதை நான் உணர ஆரம்பித்தேன். பனிரெண்டு மணி நேரம்
பயிற்சி கொடுத்தாலும் நான் அதே ஆற்றலுடன் பயணிக்க முடிந்தது எனக்கே ஆச்சர்யமே. என்னை பொறுத்தவரை, நான் கற்றுக்கொடுத்ததாக எல்லோரும் சொன்னாலும், ஒவ்வொரு பயிற்சியிலும் நான் கற்றுக்கொண்டதே உண்மை. என்னை நான் செதுக்க ஆரம்பித்து, சரியாக செதுக்கி விட்டதாக நினைத்து, இல்லை என உணர்ந்து, மீண்டும் செதுக்க ஆரம்பித்து …. இன்று வரை செதுக்கிக்கொண்டே இருக்கிறேன். இறப்பு வரை என்னை செதுக்கி கொண்டே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். யாராவது என்னை பயிற்சியாளர் என்று சொன்னால் எனக்கு சிரிப்பு வருகிறது உள்ளுக்குள். செதுக்கி கொண்டிருக்கும் பயிற்சியாளர் என்று சொல்வது கூட எனக்கு பொருந்த வாய்ப்பில்லை. கற்றுக்கொண்டிருக்கிறவர் என்று சொல்வதை என்னால் ஒத்துக் கொள்ள முடியும்.
பயிற்சியாளர் என்பது ஒரு இறை நிலை – என்னைப் பொருத்தவரை. அந்த நிலையில் இருந்து பேசும்போது, நிறைய உணர்தல் எனக்குள்ளும், பங்கேற்ப்பாளர்களிடமும் ஏற்பட்டது. நிறைய சமயங்களில் ஏதோ ஒன்று உள்வந்து, வெளிவருவதை என்னால் உணர முடிந்தது. NLP பயிற்சியின் அறிவியல் புரிதலும், புத்தாவின் சிந்தனைகளும், இமாலய யோகிகளின் பார்வைகளும், அத்துணை புத்தகங்களின் பாட வீச்சும், யதார்த்த மனிதர்கள் எனக்கு கொடுத்த கன்ன அறை பாடங்களும் கலந்த கலவையாய் நான் இருப்பதால், என்னை புரிந்து கொள்ளல் கொஞ்சம் சிரமமே. புரிந்து கொள்ள முயற்சிக்காமல் பழக ஆரம்பித்தால், புரிவது எளிது. [ மீண்டும் சொல்கிறேன் … புரிந்து கொள்ள முயற்சிக்காமல் பழக ஆரம்பித்தால், புரிவது எளிது ! ]
இறப்பை பற்றிய ஒரு புரிதல் எனக்குள் வந்திருப்பதை முதிர்ச்சியின் அடையாளமாக பார்க்கிறேன். எவ்வளவு நாட்கள் இன்னும் இங்கே இருக்க போகிறேன் என்பது அவ்வப்போது எனக்குள் வந்து செல்லும் கேள்வி. அதற்குள் நான் நினைத்தவற்றை செய்துவிட வேண்டும் என்கிற அவாவும், செய்யாது போனாலும் … முடிந்ததை செய்தேன் என்கிற எண்ண மீதமுமே எனக்கான சொத்து. சமீபமாக வாழ்க்கை பற்றிய என் பார்வை இன்னும் கொஞ்சம் மாறத் தொடங்கி இருக்கிறது, அநேகமாய் புத்தகம் எழுதி, வெளிவந்து, படித்தவர்கள் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்த பின்… நான் உலகின் குழந்தையாக மாறுகிறேன் என்கிற சிந்தனை எனக்குள் வந்திருக்கிறது. நான் இனி ஒரு குடும்ப குழந்தை அல்ல. என் உடல் என் இறப்பிற்கு பின் இருக்காது. என் எழுத்து என் இறப்பிற்கு பின் இருப்பாக இருக்கும் என நான் உணருகிறேன். தமிழ் புத்தகம் ஒன்று எழுத ஆரம்பித்து இருக்கிறேன். கூடிய விரைவில் வெளிவரும். நான் உபயோகப்படுத்தும் இரு மொழிகளிலும் புத்தகம் வருவது போதும் என படுகிறது எனக்கு. அதை அந்த மொழிக்கு நான் செலுத்தும் நன்றி நவில்தலாய் நினைக்கிறேன்.
அடுத்த சில மாதங்கள் என் வாழ்க்கையில் மிக மிக முக்கியமானவை என்று நான் உணர்கிறேன்.இந்த சில மாத நிகழ்வுகள் என்னை வாழ்க்கையின் இன்னொரு நிலைக்கு எடுத்து செல்லும் என எனக்கு தோன்றுகிறது . எனக்குள் அந்த நிலை என்னை நெருங்குவதை உணரவும் முடிகிறது.
சமீபத்தில் எழுதிய கவிதை ஒன்றினை உங்களிடம் சமர்ப்பிக்க நினைக்கிறேன்..
மழை பெய்யும் புள்ளியில்
இணையும் மண்
பெரும் மனதுடன்
தன்னை கொடுக்கும் மழை …
மழை சிறியது
மண் பெரியது
என்கிற பேதம் எல்லாம் இல்லை
இரண்டும் ஒன்றுக்கொன்று
எப்போதும் தேவை
அது போலவே நீயும் நானும் …
விலகி சென்று வேறு இடத்தில்
அல்லது
என்னுடன் பயணித்து
பெய்தாலும் நீ மழையே …
அங்கும் இங்கும் எங்கும்
உன் மண் நானே !
நான் எனப்படும் நான் …