நான் எனப்படும் நான் : 003
” இந்த உலகம் ஒரு வேகமான பாதுகாப்பற்ற உணர்விலேயே இயங்குகிறதோ என எனக்கு ஒரு குழப்பம் இருக்கிறது ” – என் நண்பரின் குரல்.
” ஏன் அப்படி ” நான் மென்சிரிப்புடன் கேட்டேன்.
” பள்ளியில் படிக்கும்போது மருத்துவப் படிப்பு முதன்மையாக காண்பிக்கபடுகிறது. கல்லூரியில் படிக்கும்போது ஐந்து இலக்க ஆரம்ப சம்பளம் சொல்லப்படுகிறது. வேலைக்கு செல்லும்போது, சொல்வதை கேட்கும் மனைவி தேவை என அறிவுறுத்துகிறது. திருமணத்திற்கு பின் குழத்தை உடனே வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வன்முறையாக நுழைக்கப்படுகிறது. குழந்தை வந்தவுடன், வீடு, கார், இடம், வங்கி இருப்பு எல்லாம் திருமண இயல்புகளாக போதிக்கப்படுகிறது. மகன் மகளின் பள்ளி வாழ்க்கை … மீண்டும் எனக்கு நடந்தவைகளை நான் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது. எனக்கே விருப்பம் அற்றவைகளை செய்து நான் வாழும் வாழ்க்கையில் என் குழந்தைகளுக்கு இதை ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு பதில் சொல்ல இங்கு யாருமில்லை. நான், எனது … என்று நினைப்பதற்குள் நாம் நமது நம் குழந்தைகள் உற்றார் உறவினர் என்று ஆகிவிடுகிறது வாழ்க்கை. என்னை தேடுவதையே ஒரு கட்டத்தில் நிறுத்தி விடுகிறேன்.
எனக்கு விருப்பமில்லா ஒரு வாழ்க்கையில், மற்றவர்களின் விருப்பமாய் வாழ தொடங்கும் எனக்கு, நோய் வருவதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும். சர்க்கரை, இரத்தக்கொதிப்பு எல்லாம் என் உடல் சார் நோய்கள் அல்ல. நான் நானாக வாழ முடியாததால் வரும் நோய்கள். ” அவன் பேசிவிட்டு மௌனமாய் நின்றான்.
ஒன்றும் பேசாமல் நானும் அவன் எதிரில் நின்று கொண்டிருந்தேன். உணர்வுகள் வெளிப்படும்போது தேவை நண்பன் என்கிற கண்ணாடியே தவிர அறிவுரை சொல்லும் ஞானி அல்ல… என்று எங்கோ படித்து ஞாபகம் வருகிறது.
” எனக்கு படிப்பு வந்தால் வராவிட்டால் இப்போது என்ன. ஏன் நான் இப்படித் தான் படிக்க வேண்டும் என உலகம் கேட்கிறது?. ஒருவேளை நான் சரியாக படிக்கவில்லை எனில் … என்ன நடக்கும் ? பொருளாதார வாழ்க்கை கீழ் இறங்குமா ? படித்து முடித்து விட்டு அலுவலக வேலைக்கு செல்லும்போது நடக்கும் பயிற்சியில் ‘நீ விரும்பியதை செய்.. வளர்வாய்’ என்று எவனோ சொல்லும்போது எனக்கு கோபம் வருகிறது. நான் விரும்பியது பாடகர் ஆவது. அப்பா அம்மா உட்பட யாரும் கேட்கவில்லை அப்போது. என்னுடைய குரல் வளம் மேல் எனக்கு அசாத்திய நம்பிக்கை. நான் ஏன் கை கட்டிக்கொண்டு யாரோ ஒருவனின் அலுவலகத்தில் வேலை பார்க்க வேண்டும் ? என் மனைவி என்பவள் தானாக என்னை நோக்கி வரவேண்டும் என்ற சிந்தனை எனக்கு உண்டு. ஆனால் திருமணமே தேடி தேடி செய்தனர். குழந்தை என்பது இயற்கையாக அதன் போக்கில் வரட்டும் என்கிற பார்வை எனக்கு. ஆனால் ஒரே வருடத்தில் குழந்தை. வீடு சொந்தமாய் வாங்கும் எண்ணமே இல்லை. ஐந்து வருடத்தில் சொந்த வீடு. கடன். மாத தவணை. இப்போது என் மகன் மகளாவது அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழட்டும் என்றால் … அங்கும் ‘இப்படி இரு அப்படி இரு’ என்கிற பார்வைகள். அறிவுரைகள். நான் இந்த வாழ்க்கையில் எங்கு வாழ்கிறேன் ? இதில் ‘ சிறப்பா இருக்காங்க’ என்கிற பட்டம் வேறு – சொந்த பந்தங்களிடம் இருந்து. ” சலிப்போடு பேசினான்.
நான் இன்னுமே பேசவில்லை.
” நான் என் வாழ்க்கையை வாழ முடியவில்லை எனில் ஏன் இந்த வாழ்க்கையை நான் வாழ வேண்டும் ? ஏன் உலகம் ஒரு ‘அடுத்தது’ என்கிற பார்வையிலேயே சுழல்கிறது. திருமணம் ஆகவில்லை எனில் என்ன ? குழந்தைகள் இல்லை எனில் என்ன ? குழந்தைகள் சரியாக படிக்கவில்லை எனில் என்ன ? வீடு கார் சொத்து வங்கி இருப்பு இல்லாவிட்டால் என்ன ? இருக்கும் எதுவுமே வங்கியின் துணை கொண்டு வாங்கியது. முறைப்படி வீடு க்ரஹப்ரவேசம் வங்கியில் கடன் அடைத்து தானே செய்ய வேண்டும் ? ஏன் அப்படி ஒரு அவசரம் ? நான் வீடு வாங்கி விட்டேன் என்று காட்டி கொள்ள ஏன் உலகம் விரும்புகிறது ? ஏன் நான் முப்பது நாளும் வேலை பார்க்க வேண்டும் ? இருபத்து ஆறு நாட்கள் வேலை ஏன் ? ஏன் நான் நினைக்கும்போது ஓய்வெடுக்க கூடாது ? அப்படி என்ன ஒரு தியாக வாழ்க்கை ? மனைவி பிடிக்கவில்லை எனினும் ஏன் வாழ வேண்டும் ? கணவன் சரியில்லை என்று தெரிந்தும் ஏன் அவள் தொடர வேண்டும் ? நினைத்தபடி வாழ முடியா வாழ்க்கையில் எங்கிருந்து திறமை வருகிறது ? நாம் திறமை என்று சொல்வதெல்லாம் செக்கில் மாட்டிகொண்ட தேங்காய் போல் பிழிந்தெடுக்கப்பட்டதால் வருவது. உண்மையான திறமை வெளிவரும்வரை உலகிற்கு பொறுமை இல்லை. என்னமோ ஆகிவிடும் என்ற ஒரு கவலையை இந்த உலகம் என் தலைமேல் நெருப்பாய் எரித்துக்கொண்டே ஏன் இருக்க வேண்டும் ? ” கொஞ்சம் மூச்சு வாங்கினான் அவன்.
நான் மௌன நிலையை தொடர்ந்தேன்.
” நிறைய நாட்கள் நினைத்தது உண்டு எங்காவது சென்று விடுவோம் என்று. குழந்தைகளை பார்க்கும்போது மனம் அமைதியாவதால் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன். அவளும் பாவம். என்னை நம்பி வந்தவள். அவள் மனதிலும் இதுபோன்று எவ்வளவோ இருக்கலாம். அவள் ஒருமுறை சொன்னாள்.. ” நான் ஓவியம் நன்கு வரைவேன் “. இந்த உலகம் ஒரு பாடகனையும் , ஓவியம் வரையும் பெண்ணையும் கணவன் மனைவியாக்கி இதுவே வாழ்க்கை என்கிறது. என் மகள் பாடும்போது நான் என்னை உணர்கிறேன். ஆனால் அவளை பாடச் சொல்லி இதுவரை கேட்கவில்லை. அவள் விரும்பினால் பாடட்டும். மகன் வரைவதை என் மனைவி ஆர்வமுடன் பார்ப்பதை நான் கவனிக்கிறேன். ச்ச்சே .. என்ன வாழ்க்கை இது ? ” சலிப்புடன் பேச்சை நிறுத்தினான். காற்று கொஞ்சம் வேகமாய் இருவர் முகத்தையும் அப்பியது.
நான் மௌனமாய் கவனித்தேன்.
அவனின் தொலைபேசி அழைத்தது. காதில் வைத்தவன் ‘வர்றேன் ” என்று சொல்லிவிட்டு என்னிடம் விடைபெற்று கிளம்பினான். இப்போது வீடு சென்றவுடன் இவன் வாழும் ஒரு வாழ்க்கைக்கு பெயர் என்ன ? தியாகமா ? கடமையா ? வேறு வழியில்லை என்பதா ? அவன் விருப்பமா ? அவனின் தவறா ? அவனின் யதார்த்தம் புரியா மனநிலையா ? அல்லது புரிந்த மனநிலையா ? … கேள்விகள் குடுவைக்குள் விழும் பனிக்கட்டிகளாய் என்னுள் விழுந்தன. பதில்களை காணோம்.
பதில்கள் உங்களிடம் இருக்கிறதா ?





