நான் எனப்படும் நான் : 004
எனக்கு என்னை மிகவும் பிடித்த தருணமாக இருக்கும் தருணங்களில் ஒன்று நான் எவ்வித ஒப்பனையும் இன்றி நானாக இருப்பது. கன்னங்களில் வளர்ந்த தாடி எனப்படும் கேசம், வண்ணம் தீட்டப்படாமல் இருப்பதில் என் இயல்புத் தன்மை தொடங்குவதை நான் உணர்கிறேன். வண்ணம் தீட்டிய காலகட்டங்களில் கிடைக்கும் ஒரு செயற்கை ‘அட’ அழகை இந்த உலகம் விரும்புவதை கண்டு ஆச்சர்யம் அடைந்திருக்கிறேன். ‘இளமையா எப்படி இருக்கீங்க ? ” என்ற கேள்வியின் மனவியல் பிரச்சினை நிறைய மனிதர்களுக்கு புரிவதில்லை. இருப்பதை தவிர்க்கும் மனநிலை அது. இருப்பதை சிறப்பாக காட்டுவது என்று சொன்னாலும், இருப்பது என்னவோ அதுவே நிஜம். அந்த நிஜ உலகத்தில் பயணப்படவே எனக்குள் விரும்புகிறேன்.
நான் நானாக இருக்கும்போது தெளிக்கப்படும் கேள்விகளில் ஒன்று … ” வயதாகி விட்டதோ ? ” … இந்த கேள்விக்கு நான் அளிக்கும் பதில் கொஞ்சம் யோசித்து பார்த்தால் புரியும். ‘ஆம். வயதாவது உண்மை. அதில் மறைத்தல் பொருள் வெட்கம் என்ன நமக்கு ? “. நான் இளமையாயிருக்கிறேன் என்று தெரிவிக்க விரும்புவதும் ஒரு வித உயர் மனநிலை பிரச்சினையோ என தோன்றுகிறது. இதுதான் நான் என ஏன் நம்மை காட்ட நாம் முயல்வதில்லை ? முயலாததை நானும் செய்திருப்பதால் என் பார்வையை இங்கு பகிர்கிறேன். பொதுவாகவே நாம் இக்கரைக்கு அக்கரை பச்சை மனிதர்கள். நம்மை விட ‘யாரோ’ நன்றாக தெரிவதுதான் நம் பிரச்சினை. அங்குதான் ‘அவரை விட, அவளை விட’ போன்றவை நம் எண்ணங்களில் கலக்கின்றன. ஒத்துப் பார்த்தல் மனநிலை அது. இதற்க்கு எல்லையே இல்லை. இதையே அழகு சாதனப் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. கொல்கின்றன.
எழுபது வயதில் சுறுசுறுப்பாய் இருக்கும் யாரோ ஒருவர் நம்மை ஈர்க்கிறார். ஏன் ? நாம் சுறுசுறுப்பாக இல்லாததால். எது என்னிடம் இல்லையோ அதுவே ஈர்ப்பாகிறது. என்னிடம் இளமையான தோற்றம் இல்லை எனில் அது வைத்திருக்கும் மனிதர்கள் என்னை ஈர்க்கிறார்கள். முதலில் அழகு என்பது ‘இப்படித்தான்’ என்று யார் வரையறை செய்தது?. இயற்க்கை ஒவ்வொன்றிலும் ‘அழகை’ படைத்து அனுப்புகிறது. நாம் அழகு என்று ஒரு உயரத்தை வைத்துகொண்டு ஒத்துப் பார்க்கிறோம். அங்குதான் மனிதம் தொலைகிறது.
ஒரு ஆரம்ப பள்ளிக்குள் சென்றால் அனைத்து குழந்தைகளும் அழகாக தெரியும் நமக்கு, ஒரு உயர்நிலை பள்ளிக்கு செல்லும்போது … இவன் இவள் அழகு என தேர்ந்து எடுக்கிறோம். என்ன ஒரு மனநிலை வளர்ச்சி ! இளமை ஒரு உயரமாய் வைக்கப்படும்போது முதுமை ஒரு துயரமாய் பார்க்கப்படுவது எதார்த்தம் தான். ஏன் முதியவர்கள் கைவிடப்படுகிறார்கள் என்பதும் இங்கு புரியும். ஒரு இளம்பெண் தனியாக இருக்கிறாள். உதவிக்கு ஆள் தேவைப்படுகிறது. வேகமாக செயல்படும் நாம் … அதே தெருவில் இருக்கும் ஒரு வயதான பாட்டிக்கு உதவி தேவைப்படும்போது இந்த வேகத்தில் செயல்படுகிறோமா ? ஏதோ ஒன்று ஈர்க்கும்போது, ஏதோ ஒன்று வெறுக்கப்படுவது இயல்புதானே. ஆரோக்கியம் வேறு. அதில் நான் தெளிவாக இருக்கிறேன். தோற்றம் வேறு. அதிலும் நான் தெளிவாக இருக்கிறேன்.
நம்மில் புதைந்து மூச்சுடன் வாழும் மனிதமே அழகு. அதுவே நிரந்தரம். வயதான நண்பர்கள் பலரின் நட்பினை பெற்ற புண்ணியம் எனக்கு உண்டு. அப்படி ஒருவர் … ” இதை உங்கள் நண்பரிடம் கொடுங்கள். அவரின் மூச்சு பிரச்சினைக்கு இது உதவும் ” என்று சொன்னபோது … அவர் எனக்கு அழகாக தெரிந்தார். இதையே ஒரு இளம்பெண் சொன்னாலும் அழகாகவே தெரிவார். ஏன் எனில் நான் கவனிப்பது மனிதம் எனும் யதார்த்த அழகை. தோற்றங்கள் தாண்டிய அழகு வர்ணிக்க முடியா ஒன்று.
நான் அழகாக இருக்கிறேன் என்ற முக பாவத்தைவிட .. வரவேற்கும் சிரித்த மூதாட்டி, கண்டவுடன் சிரித்து ஒளியும் சிறு குழந்தை, யதார்த்தமாய் பேசும் என் நண்பன், இதுதான் நான் என்று உரையாடும் நண்பி … மனதிற்கு பிடிக்கிறது. தோற்றம் தாண்டி ஒரு உலகம் நமக்குள் இருக்கிறது. அங்கு என் கை பிடித்தவர்கள், என்னை விட்டு அகல்வதில்லை.
தோற்ற பிரமையில் இருந்து மீள்வதும் முதிர்ச்சியே. மீள தயாரா ?. அல்லது இல்லாத ஒன்றை பெறும் போராட்டத்தில் வாழ்க்கையை பணயம் வைப்பதில் கவனமா ? முடிவு செய்வோம்.





