நான் எனப்படும் நான் : 006
உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும் என்கிற என் எண்ணத்திற்கு மாற்று இல்லை. ஆனால் …
பயணங்களின் போது உணவும் உடற்பயிற்சியும் கடை பிடிக்க முடியாமல் போவது எனக்கு மிகவும் வருத்தமான விஷயம். கடைசி ஏழு நாட்களில் ஆறு விருந்து அழைப்புகள். தவிர்க்க முடியவில்லை. உடலா, அன்பா, மறுப்பா, ஆரோக்கியமா, நழுவலா . என்ற கேள்களுக்கு இடையில் வாழ்க்கை பயணிக்கிறது.
சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் அதிகாலையில் எடுத்த திடீர் முடிவில், அறுபது நாட்கள் எல்லாவற்றில் இருந்தும் ஒதுங்கி இருந்தேன். உடற்பயிற்சி, சீரான உணவு முறை என்று பயணப்பட்ட போது ஆரோக்கியமான உடல் கிடைத்தது. எடை கரைந்து, தோற்றப் பொலிவுடன் எங்கும் நகர முடிந்தது. கிட்டத்தட்ட நாற்பது சதவிகத தேவையற்ற எடை காணாமல் போனது. என் தோற்றத்தில் வயது அறியமுடியாமல் மனிதர்கள் தடுமாறுவதை நான் ரசித்து இருக்கிறேன். அப்போதைய புகைப்படங்கள் எனக்கு மிகவும் அருகில் பயணிப்பவை. என் ஆரோக்கிய தரத்தின் தர அளவீடு அது. அணியும் ஆடை வயிற்று பகுதியில் காற்றில் அசைவதை நான் உணர்ந்து இருக்கிறேன். என்னை நான் மிகவும் ரசித்த காலம் அது. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில் slim fit and simple.
மீண்டும் பயணங்கள் ஆரம்பிக்க, உடற்பயிற்சி இல்லா நாட்களும் உணவு கட்டுப்பாடு இல்லாமலும் நேரம் கடந்து உண்பதும் தொடர்ந்தது. சரியாக ஐந்து வருடங்களில் என்னை எனக்கு அடையாளம் தெரியாத அளவிற்கு எடை சேர்த்திருக்கிறேன். படிக்கட்டு ஏறும்போது மூச்சு வாங்க ஆரம்பிக்கிறது. ஆடை காற்றில் பறப்பதில்லை. மாறாக காற்று ஆடையை அறையும்போது என் எடையை இன்னும் துல்லியமாக அறிவிக்கிறது.
சிலர் என்னிடம் உரிமையாக ‘எடையை குறையுங்கள் ‘ என்று சொல்வதும், பலர் என்னிடம் சொல்ல முடியாமல் செல்வதும் நடக்கிறது. கண்முன்னே. எவ்வளவு சமாதானங்கள் நான் சொன்னாலும், கண்டுபிடித்தாலும் … ஆரோக்கியம் மற்றும் தோற்றப் பொலிவு அவசியம் என உணர்கிறேன். [ பொய் தோற்றப் பொலிவில் எனக்கு உடன்பாடில்லை ]. மீண்டும் உள்ளுணர்வு என்னை கடுமையாக கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கிறது. ‘ எல்லாம் சரி … எப்போது மீண்டும்? என்பதே அதன் இப்போதைய கேள்வி “.
காக்கி சட்டை கமல் பார்த்து, உடற்பயிற்சி கூடம் சென்று, அப்போதே உணவு, உடல் மற்றும் எண்ணங்களின் சீரமைப்பில் கவனம் செலுத்திய நான், பின் Arnoldன் பாதிப்பில் அடுத்த கட்ட உடற் பயிற்சிகளுக்கு தயாரானேன். பள்ளி கல்லூரி காலங்களில் slim fit தொடர்ந்தது. கல்லூரி முடித்து, வீட்டில் வந்து தங்கிய சில காலங்களில் தான் முதன் முதலாக எடை அதிகமானது. அங்கிருந்து எடை குறைப்பு சேர்ப்பு என ஏற்றமும் மாற்றமுமாய் நிகழ்வுகளை கவனிக்கிறேன். இதில் நான் என்னை முழுவதுமாக ரசித்த தருணங்கள் நான் ஆரோக்கியமாக, தோற்றப் பொலிவுடன் இருந்த தருணங்கள். ஆக … தர அளவீடு என்பது சிறப்பாகவும், சிறப்பற்றும் இருக்க நானே காரணம்.
September மாதம் என் வாழ்வில் எப்போதுமே மாற்றங்களை ஏற்படுத்திய மாதம். September மற்றும் October மாதங்களை கையில் எடுக்க முடிவு செய்திருக்கிறேன். இந்த இரு மாதங்களுக்கு பின், ஒரு விதமான தர அளவீட்டை உணவு மற்றும் ஆரோக்கியத்தில் பின்பற்ற முடிவு செய்திருக்கிறேன். இங்கே நான் குறிப்பிடுவதில் இதை படிப்பவர்களுக்கு ‘தெளிவு’ வேண்டும் என நினைக்கிறேன். Impress எனப்படும் மற்றவர்களை கவர அல்ல இது. Impressing others ஒரு வித நோய். நான் நானாக இருப்பதையே கையில் எடுக்கிறேன். நான் நானாக இருப்பதில் கிடைக்கும் மகிழ்வு அளவறிய முடியாதது. பயணங்கள் இருந்த போதிலும், இதுதான் நான் என்கிற என் அடையாளத்திற்க்குள் தன்னை உணர்வதே இந்த உடலுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் ஆகக்கடவது என எனக்குள் கட்டளை இடுகிறேன். Time to chisel out the actual me from the available me !
என்னுடன் சேர்ந்து கொள்பவர்கள் இந்த அறுபது நாள் பயணத்தில் பயணிக்கலாம். தினசரி உணவு முறையில் இருந்து, உடற்பயிற்சியில் இருந்து, கால அளவுகளை துல்லியமாக பதிவிடுவது நடக்கப்போவதால் … என்னுடன் பயணிப்பவர்களுக்கும் இது மிக உதவியாக இருக்கலாம். விருப்ப மனிதர்கள் தயாராகலாம். கட்டாயமில்லை.
Chubby, Bubbly, Over Weight, Bloating … அத்துணை வார்த்தைகளில் இருந்தும் என்னை நான் விலக்கி கொள்ள முடிவெடுத்து இருக்கிறேன். மீண்டும் எடை ஏற்றி கொள்ளாமல், ஒரே சம நிலையில் உடலை வைத்திருப்பது எனவும் முடிவு செய்திருக்கிறேன். அந்த வியர்வை ததும்பும் workout கண் முன்னே காட்சியாய் நகர்கிறது. நனைந்து போகும் உடல், ஆடை மற்றும் நினைத்த இலக்கினை அடைந்த பின் கிடைக்கும் பெருமூச்சு .. எல்லாவற்றையும் மீண்டும் காண இருப்பதில் மிக்க மகிழ்வாய் உணருகிறேன். வெறும் அறுபது நாட்கள். தற்போதைய எனக்கும், உண்மையான எனக்கும் இடையில் இருக்கும் நாட்கள் அறுபது மட்டுமே. அறுபது நாள் கழித்து என் உண்மையான என்னை இங்கே பகிர்வதில் இருக்கிறது என் செயல் சாமர்த்தியம்.
எனக்கான தர அளவீடை நிர்ணயிக்கும் இன்னொரு புகைப்படம் இதில் இணைகிறது. அருகில் என்னுடன் இருக்கும் Skywalk Fitnes பிரகாஷ் என்னை மீண்டும் உருவாக்கியதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர். அவரின் ஆலோசனைகளும் உடற்பயிற்சி முறைகளும் எனக்கு மிகவும் நம்பகமாக இருந்த இருக்கின்ற ஒன்று. அவருக்கு என் நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன். அதேபோல் ப்ரியா என்கிற nutritionist கொடுத்த உணவு முறைகள் என்னை சிறப்பாக பன்படுத்தின. அவருக்கும் என் நன்றிகள். இப்போதைய என் உடலை மீட்கும் பயணத்தில் புதியவர்கள் சிலர் பங்கு பெறுவதும், அவர்களின் வழிமுறைகளும் என்னுள் பயணிக்க போவது உறுதி. அவர்களுக்கும் என் முன் நன்றிகள்.
இந்த பதிவினை மீண்டும் நவம்பர் ஒன்று அன்று மீள் பதிவில் இடும் அந்த நேரத்தை நோக்கி நான் பயணிக்க தொடங்குகிறேன். இந்த பயணம் என் மனதிற்குள் நெருக்கமாய் நிற்கும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
நான் எனப்படும் நான் …





