நான் எனப்படும் நான் : 007
வாழ்க்கையின் விதிகள் நிறைய பேருக்கு புரிவதில்லை. வெற்றி பெற்றதாகவும், தோல்வி பெற்றதாகவும் நினைத்துக்கொண்டு, சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு வாழும் பலரை நான் கவனித்துக்கொண்டு இருக்கிறேன்.
அந்த மனிதரின் பேச்சு அப்படி இனிப்பாக இருந்தது. எங்கோ நடிக்கிறார் என தெரிந்தாலும், நோக்கத்தின் நன்மை கருதி அவருடன் பயணிக்க தயாரானேன். சில மாதங்களில் அவர் தன் முகத்திற்கு பூசிக்கொண்ட சாயம் உண்மை மழையில் கரைய ஆரம்பிக்க, முகமூடியை தொலைத்த கள்வனாய் பேச ஆரம்பித்தபோது நான் சொன்னேன் …. ” உங்களின் பலம் உங்களுக்கு தெரியவில்லை. இவ்வளவு சிரமப்பட்டு நடித்து சில விஷயங்களை நீங்கள் பெறுவதை விட, இயல்பாய் இருந்து நிறைய விஷயங்களை நீங்கள் பெற்று விட முடியும். ஏன் நடித்து வெற்றி பெறுவதை விரும்புகிறீர்கள் என எனக்கு தெரியவில்லை. ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டீர்கள் ” என்று சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு அந்த மனித பிம்பத்தை கடந்தேன். அப்போது எனக்கு மனதிற்குள் தோன்றிய வரியினை இங்கு பகிர்கிறேன். ” ஒரு வெற்றிக்காக, ஒரு சுயநலத்திற்காக, கொஞ்சம் பணத்திற்காக, சில சொத்திற்காக, தன்முனைப்பு வீம்பிற்காக, வாழ்க்கையை நாம் பணயம் வைத்துவிட்டு, மனிதர்களை இழக்கிறோம். நல்ல மனிதர்களை நம்மை சுற்றி இழந்த பின், நம்மை சூழ்ந்து வாழ்பவர்கள் சுயநலவாதிகள் என்பது நமக்கு ஏன் புரிவதில்லை ?
நாம் நல்ல மனிதர்களை இழக்கும்போது, ஒருமுறைக்கு இரு முறை நம்மை நாம் உள்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உண்மையில் நம்மிடம் தவறு இருந்தால், மன்னிப்பு கேட்டு நம்மை நல்ல மனிதர்களுடன் இணைத்து கொள்வது மிக நல்லது. இதில் எந்த கௌரவ குறைச்சலும் இல்லை. எப்படிப்பட்ட மனிதர் என்றே தெரியாதவரிடம் சிரித்துகொண்டு இருப்பதை விட, நல்ல மனிதர் என்று நாம் நினைப்பவரிடம் தவறை ஒத்துக்கொண்டு நம் இயல்புடன் வாழ்ந்த விடுவது நல்லது.
நல்ல மனிதர் என்று யாராவது இருக்கிறார்களா ? இந்த கேள்வி இந்நேரம் உங்களின் உள்ளே படர ஆரம்பித்து இருக்கும். எல்லோரும் சூழ்நிலைகளின் கைதியே. வாய்ப்பு இருந்தால் ஒரு தவறு செய்யலாமே என நினைக்க வைக்கும் உலகம்தான் இது. தனக்கென்று கொஞ்சம் சொத்து, பணம், புகழ் .. என்று சேர்க்க விரும்பும் கூட்டமே இங்கிருக்கிறது. அந்த ‘கொஞ்சம் சொத்து’ என்பது அவரவரின் ஆசைக்கேற்ப்ப விரிந்து கொண்டே செல்கிறது. இந்த கூட்டத்தில் ‘நல்ல மனிதர்’ என்று யாராவது இருக்க முடியுமா ?
இருக்க முடியும். இருக்கிறார்கள். சிறு உதவிகளில் ஆரம்பிக்கும் அவர்களின் நட்பு, நிலத்தில் விழுந்த விதை மண்ணை இறுகப்பற்றி வளர்வதுபோல் நல்ல சிந்தனைகளுடன் நம்மை தொடர்கிறது. நமக்கு ஒரு கடினமான சூழ்நிலை என்னும்போது மட்டுமே இவர்களை நாம் நினைப்போம். அதற்காகவெல்லாம் அவர்கள் வருத்தமே படமாட்டார்கள். ஏதோ நமக்காகவே காத்திருந்தது போல் உதவுவார்கள். எப்படி இவர்களை நாம் இவ்வளவு நாள் மறந்தோம் என்று நாம் நினைக்கும் படி இருக்கும் அவர்களின் உதவிகள். வழக்கம்போல உதவிகள் பெற்றவுடன் அவர்களை மறந்துவிடுவோம். மீண்டும் ஒரு கடின சூழ்நிலையில் மட்டுமே அவர்களை நாம் நினைப்போம். அப்போதும் அவர்களிடம் இருந்து எந்த வருத்தமும் இருக்காது. ‘முதலிலேயே ஏன் சொல்லவில்லை’ என்று செல்லமாக கோபிப்பார்கள். மீண்டும் அவர்களின் உதவுதல் தொடரும். இப்படி ஒரு மனிதர் அல்லது மனிதர்கள் இல்லா வாழ்க்கை வாய்ப்பேயில்லை. இவர்களே நான் சொல்லும் நல்ல மனிதர்கள். அவர்களின் வாழ்விலும் நிறைய பிரச்சினைகள் இருக்கும். ஒரு சிலவற்றில் அவர்களின் நிலைப்பாடு சரியென்று நமக்கு தோன்றும். ஒருசிலவற்றில் ‘சரியில்லையே’ என தோன்றும். ஆனால் இது எதுவும் அவர்கள் நமக்கு செய்யும் உதவியை நிறுத்தவே நிறுத்தாது. இந்த மனிதர்களை நாம் இழக்கும்போது வாழ்க்கையின் ஏதோ ஒன்றை நாம் இழக்கிறோம் என்பதே உண்மை. யோசிப்போம்.
துரோகங்கள் பலவகை. இதில் சில துரோகங்கள் வெளியே சொல்ல முடியாதவை. நம்ப வைத்து பின் கழுத்தை அறுப்பது போன்ற துரோகங்கள் நடக்கும்போது மனிதன் விலங்காக மாறும் வாய்ப்புகள் அதிகம். ஒருவனிடம் நம்பிக்கையை கொண்டு வந்து அவனை கொள்வது மனசாட்சியை அழிக்கும் நிகழ்வின் உச்சக்கட்டம். எனக்கு இப்படி ஒன்று நிகழ்ந்த போது, சம்பந்தப்பட்ட மனிதரிடம் பேசினேன். ஆம். நேரிடையாக. ‘நீங்கள் இப்படி செய்தது சரியல்ல. இது என்னை இப்போது பாதித்தாலும் என் மனநிலையின் முதிர்ச்சியால் நான் இதில் இருந்து வெளிவந்து விடுவேன். சில காலங்களுக்கு பின் நீங்கள் இதை நினைத்து வருந்துவீர்கள் ” என்று சொல்லிவிட்டு சிரித்த முகத்துடன் விடை பெற்றேன். ” அப்படி எல்லாம் நான் வருத்தப்பட வாய்ப்பில்லை ” என்று சொல்லிவிட்டு கதவை எனக்கு பின்னே வேகமாய் அறைந்தார் அவர். மனது வலித்தாலும் என் இயல்புடன் பயணிக்க ஆரம்பித்தேன். பல வருடங்களுக்கு பின், என்னை அவர் மீண்டும் சந்தித்தார். நடந்த விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்டார். மகளின் திருமணத்திற்கு அழைத்தார். வருகிறேன் என்று சொல்லிவிட்டு கேட்டேன் .. ” எது உங்களை மன்னிப்பு கேட்கவைத்தது ? “. அவர் சொன்னார்.. ” தோல்விகள் வந்தன. நானும் நம்பவைத்து ஏமாற்றப்பட்டேன். அப்போது நீங்கள் சொன்னவை ஞாபகத்திற்கு வந்தது. நீங்கள் என்னிடம் கம்பீரமாக வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டு சென்ற அளவிற்கு என்னால் சொல்ல இயலவில்லை. ஏன் எனில் நான் மனசாட்சிப்படி நடக்கவில்லை. நீங்கள் என் வீட்டில் பேசியபோது ஒருவித அமைதியுடன் பேசினீர்கள். அது நீங்கள் மனசாட்சிப்படி நடந்ததன் அடையாளம் என்று நினைக்கிறேன். அப்படி என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஏன் எனில் என்னை ஏமாற்றிய அவனை ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். இருந்தாலும் இது இப்படியே தொடரக்கூடும் என்ற பயம் வந்தது. என்னை மாற்றிக்கொள்ள முடிவு செய்தேன். என்னை விட சிறிய வயது நீங்கள். இருந்தாலும் மன்னிப்பு கேட்டு விடுவது என்று வந்தேன். இப்போது மனநிலை இயல்பாக இருக்கிறது. மிகவும் நன்றி ” என்றார். பல வருடங்களுக்கு முன் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது எப்படி சிரித்த முகத்துடன் இருந்தேனோ அதேபோல் … அப்படியே நான் இருந்தேன். அவர் உணர்தலில் எனக்கு மகிழ்ச்சி.
இப்படியான தருணங்கள் வாழ்வில் நடந்துகொண்டே இருக்கின்றன. இவை நமக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இது நடந்திருக்கும். ஒன்று மன்னிப்பு கேட்டிருப்போம். அல்லது வழங்கி இருப்போம். மனித உறவின் மகத்தான தருணம் அது.
மன்னிப்பு கேட்க வெட்கப்பட்டு இன்னும் நீங்கள் வீம்பாக திரிகிறீர்கள் என்றால், மனிதத்தை உணரவில்லை என்று அர்த்தம். உங்கள் மேல் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுவிடுங்கள். உங்கள் மேல் தவறு இல்லை எனில், தவறு இல்லை என சொல்லிவிட்டு உங்களின் இயல்பில் வாழ்க்கையை தொடருங்கள்.
யோசிப்போம். யோசிப்போமா ?





