நான் எனப்படும் நான் : 012
காத்திருக்கும் பாதைகள் :
பாதைகளை கவனித்து இருக்கிறீர்களா ? அமைதியாக அவை தன் இருப்பை வைத்துக்கொள்கின்றன. மரங்களை இரு பக்கமும் தள்ளி வைத்துவிட்டு, தன் மௌனத்தை அதன் ஆதரவாக சொல்லி வாழ்கின்றன. சத்தமற்ற அவற்றின் இருப்பில் சில நினைவுகளை நான் கோர்க்கிறேன் – இங்கு.
ஒரு முறை இமயமலை பகுதியில் காலை நேர நடையில் ஒரு பாதை என்னை வசீகரித்தது. அதன் அழகும் மௌனமும் என்னவோ செய்தது. சாலையில் இருந்து பிரிந்து செல்லும் பாதை அது. யாரும் போன தடமும் இல்லை. என்ன செய்யலாம் என்று ஒரே ஒரு நொடி யோசித்துவிட்டு, செல்வது என முடிவெடுத்தேன். பொதுவாக யாருமற்ற பாதைகளில் தெரியும் மௌனம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அந்த பாதைகள் பேசும் மௌன மொழி நமக்குள் என்னவோ செய்யும். அப்படித்தான் அந்த பாதையும் என்னுள் சில கேள்விகளை எழுப்பியது.
பாதைகள் இல்லா உலகம் உண்டா ? மனிதன் நடப்பதால் மட்டுமே தான் பாதைகள் உருவானதா ? இயற்கையாகவே பாதைகள் இல்லையா ? பாதைகள் எங்கு ஆரம்பிக்கின்றன ? எங்கு முடிகின்றன ? ஏன் யாருமற்ற பாதைகளில் நம் இருப்பு சட்டென அழகாகிறது ? யாருமற்ற பாதைகள் எப்படி பழைய சுக நினைவுகளை உடனே கொண்டு வந்து விடுகின்றன ? கேள்விகள் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. பாதைகள் பதில் சொல்லாமல், குளத்தில் விழும் கல்லாய் நின்று கொண்டே இருக்கின்றன.
அந்த பாதை ஒரு நீர்நிலையை நோக்கி என்னை அழைத்து சென்றது. ஒரு ஏரி. யாருமற்ற ஏரி. வானம் அப்படியே தெரியும் நீர்நிலை. பச்சை நிறம் இல்லா, பறவைகள் பறக்கா, வான் நீலம் அப்படியே பிரதிபலிக்கும் .. ஒரு ஏரி. நடக்க நடக்க .. கால் பட்டு தெறிக்கும் பனிக்கட்டிகள். ஆம். சுற்றி படரும் பனிக்கட்டிகளுடன் ஒரு ஏரி தன்னை வைத்திருப்பதை இந்த பாதை காட்டிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் இருக்கிறது. வழியெங்கும் தியான
நிலையில் என்னை அழைத்து வந்து, என்னை நான் உணரும் தருணத்தில், ஏரியின் தொடக்கத்தில் தன்னை தொலைக்கும் இந்த பாதையின் நோக்கம் தான் என்ன ?
ஏரியை சுற்றி நடந்தபோது .. பழைய நினைவுகள் அற்ற மனம் எனக்குள் எழுந்தது. நான் புதியவனானேன் – என்பது போல் ஒரு பளிச் நினைவு. இப்போது பிறந்த காற்றை போல், புத்துணர்வு. மூச்சு உள்ளே வெளியே செல்வது .. உயிர் ஓட்டத்தின் மென் சத்தமாக கேட்டது. ஒவ்வொரு மூச்சிற்கும் உயிர் புதுப்பிக்கப்படுவது போன்ற உணர்வு. நீ மீண்டும் பிறக்கிறாய் என்று சொல்லும் ஏரியும், என்னை அங்கு அழைத்து வந்த மௌன பாதையுமே இதன் சாட்சிகள். பேருலகத்தின் சாட்சியாக வானம். பகலில் தெரியும் நிலா. இன்னும் வரா சூரியன். இயற்கை தன் சொல்லப்படா பக்கங்களில் வைத்திருக்கும் அழகை காணவே இன்னொரு முறை மனிதனாக பிறக்க வேண்டும் என்று தோன்றியது.
ஏரி முழுக்க சுற்றி.. மீண்டும் பாதையை அடைந்தபோது .. தாயை கண்ட உணர்வு. அது என்னை பார்த்துக்கொள்ளும் என்ற ஒரு ஆறுதல். தொலைதலில் நாம் தேடுவது பாதைகளை அல்ல. அது கொடுக்கும் பாதுகாப்பை. சரியான பாதையை கண்டபின் நமக்கு வரும் பெரு மூச்சே அதற்கு சாட்சி. பாதையில் நடக்க ஆரம்பித்த போது .. அது என்னை ஒரு கேள்வி கேட்டது ..
” உன்னை கண்டுபிடிக்க நான் உன்னுடன் வருவேன். உன்னை நீ கண்டுபிடித்ததும் மீண்டும் வருவேன். ஆனால் .. உன்னை நீ கண்டுபிடிக்கும் தருணத்தில் நான் தொலைவேன். ஆம். என் தொலைதலில்
” உன்னை நீ கண்டுபிடிக்கும் உணர்தல் ” வாழ்கிறது. என் இருப்பில் உன் ஆறுதல் வாழ்கிறது. உன்னை நினைத்து, ஆனால், சத்தமில்லாமல் வாழும் எனக்கு ஒரு பெயர் கொடுப்பாயா ? “
நான் யோசித்தேன். மின்னல் வெட்டியது போல் ஒரு பெயர் தோன்றியது. மனதிற்குள் சிரித்தேன். சில பெயர்கள் நமக்குள் வரவழைக்கும் யதார்த்த சிரிப்பை போல் ஒரு அழகான சிரிப்பு இந்த உலகில் உண்டா ?. அந்த பெயர் ..
” மகிழ் தேசத்தின் மௌன ஆறு “





