கவிதையின் கண் 007
” சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது ”
– பிரமிள்
________________
இதோ ஒரு இறகு ! :
வாழ்கிறோம். வாழ்ந்த தடம் ஒன்றை பதிகிறோம். பின்னர் மறைகிறோம். அப்படி நாம் பதிந்த தடமே நம்மை பற்றி சொல்லும் சாட்சியாக மாறும். ஆனால் சில காலங்களில் அந்த தடமும் அழியும். இது இயற்கை.
ஒரு சதுர வடிவ மென் சில் கல்லை ஏரியில் எறிகிறோம். அது அதிர்வலைகளை ஏற்படுத்தி, நீரை கிழித்துக்கொண்டு சென்று, பின் நீருக்குள் அமிழ்கிறது. விரியும் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மறைகின்றன. சில நிமிடங்களுக்கு பின், அந்த ஏரியில் அப்படி ஒரு கல் எறிந்த அடையாளமே இல்லாமல் போகிறது. தெறித்த நீரும், அமிழ்ந்த கல்லும் அதே ஏரியில் தான் இருக்கின்றன. ஆனால் தடயம் இல்லை . ஆம். அப்படி ஒரு நிகழ்விற்கான தடயமே அங்கு இல்லை. வாழ்வும் அப்படியே.
அப்படி எனில் இந்த 60 வருட வாழ்வில் என்ன தடத்தை விட்டு செல்ல முயற்சிக்கிறோம் ? வீடு ? இடம் ? வாகனம் ? பொருள்கள் ? பணம் ? கௌரவம் ? பெருமை ? தலைக்கனம் ? சாதி ? மதம் ? … ஆச்சர்ய பதில் ஒன்றை உணர்வோமா ? ஆம். ஆச்சரியமே. பதில் என்னவெனில் … இதில் எதுவுமே இல்லை. ஆம். இதில் எதுவும் தடமாக மாறுவதில்லை. உதாரணத்திற்கு … இருக்கும் வரை இருக்கும் வீடு, இறந்த பின் … யாரோ ஒருவருக்கு / அல்லது நம் சொந்தங்களுக்கு, முதலீடாக மாறுகிறது. ஒரு சில வருடங்களுக்கு பின் அதுவும் இடிக்கப்பட்டு அல்லது வாங்கப்பட்டு அப்படி ஒரு ‘ நாம் ‘ இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவதை அந்த வீடு பார்த்துக்கொண்டு…. பேச முடியா வலி மிகு மௌன சாட்சியாக மாறுகிறது. அப்போது அது தடமாகவும் இல்லை. சாட்சியாகவும் இல்லை. Just உருமாற்றம் மட்டுமே. மீண்டும் மண் குவியல். மீண்டும் யாரோ ஒருவரின் வீடு. அவ்வளவே.
அப்படி எனில் எது தான் தடமாக மாறுகிறது ?
சில புத்தகங்களை படித்த பின் … கடைசி பக்கத்தில் இருந்து முன் பக்கத்திற்கு சட்டென வந்து .. யார் இந்த எழுத்தாளர் என்று யோசிக்கிறோமே ?
சில மனிதர்களிடம் பேசும்போது … ” எங்க அப்பா சொல்லி கொடுத்தது. அப்படியே கடைபிடிக்கிறேன் ” என்று பேசும் அவர்களின் பார்க்காத அப்பாவை ஒரு வரைந்த உருவமாக நம் மனதிற்குள் வைத்து பார்த்து அதிசயிக்கிறோமே ?
மருத்துவம் படித்து இலவச மருத்துவம் பார்க்கும் .. நடுத்தர வயது பெண் ஒருத்தி ” நான் படித்ததற்கு காரணம் இறந்து போன ஒரு யாரோ மனிதர் ” என்று சொல்லும்போது நம்மையும் அறியாமல் எழுந்து நின்று கைதட்டி மனக்கண்ணில் அந்த மனிதரை வரவழைத்து நன்றி சொல்கிறோமே ?
யாரோ ஒரு மனிதர் பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தில் சிரிக்க … ” அவர் ஏற்படுத்திய அமைப்பு இது. இன்று பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவுகிறது ” என்று சொல்லும்போது நம் கண்கள் ஒரு நொடி அந்த புகைப்படத்தில் நிலைத்து .. அமைதியாய் நிற்கிறோமே ?
இவைதான் தடங்களோ ?
இந்த தடங்கள் தான் காற்றின் தீரா பக்கங்களில் எழுதப்பட்டுக்கொண்டும், வாசிக்கப்பட்டுக்கொண்டும், பின்பற்றப்பட்டுக்கொண்டும் …இருக்கின்றனவோ? ..
ஒரு பறவையின் இறகை இங்கே இறக்கி வைக்கிறேன். அதை எடுத்துக்கொள்ளும் ஏதோ ஒரு காற்று ஒன்று .. அந்த இறகின் பயணத்தை தடமாக மாற்றும் என்று நம்புகிறேன்.
இதோ ஒரு இறகு !