தெரிந்ததும் தெரியாததும் – 001
” பள்ளத்தை
தனக்காக்கி
கொள்ளும்
மவுன நீர்
பசுமையை
உயரமாக்கி
பிரதிபலிக்கும்
அழகாய்
இரு மடங்காய் ! ”
தன்னை பிரதிபலிக்கும் நீரில் முகம் பார்த்து, இங்கும் அங்கும் நகர்ந்து .. முகத்தை சரி செய்துகொண்டிருந்தன கரு மேகங்கள். மேகங்கள் எப்போதும் அப்படித்தான். அவை நகர்வதே நீர் நிலைகளை நோக்கி. முகம் அழகு என்று உணர்ந்ததும் … அங்கேயே பொழியும் கரு மேகங்களின் மனம் போல் வாழ வேண்டும். பிடித்த இடத்தில் பொழிந்து, அங்கே இருந்து ஆவியாகி, மேல் எழும்பி, மீண்டும் பிடித்த இடம் தேடி.. பொழிந்து … ! தெரியும் மேகங்களை பார்க்கும் உலகம், தெரியா ” மேகம் – நீர் – மேகம் ” தொடர்பை மறந்துவிடும். ஒன்று மேகம் அல்லது நீர் என்று தன் பார்வையில் அலையும். தெரியும் மேகம் எப்போதுமே தெரியா நீரின் இன்னொரு பக்கம்.
ஒரு சிறு அதிர்வும் அற்ற நீர்நிலையால்தான் எதிரில் தெரிபவைகளை பிரதிபலிக்க முடியும். மற்றவைகளுக்கு தன்னை கண்டறிவதே சிரமம். இங்கே தெரியும் நீர்நிலை எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறது. அப்படியே. உள்ளது உள்ளபடி. அவ்வளவு தெளிவு. முகம் பார்த்து முகம் அறியலாம். பிறரின் முகத்தை தன்னில் பார்த்து, அவரவர் முகம் அறிய வாழும் வாழ்க்கைக்கு இந்த நீர்நிலை ஒரு முன்மாதிரி. அப்படி வாழும் வாழ்க்கை பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள். நீர்நிலைக்கு பின் இருக்கும் அமைதியை உலகம் கவனிக்காது. ” எவ்வளவு அழகிய நீர்நிலை ” என்று தெரிந்ததை கவிதை எழுதும் உலகம், தெரியாத உள் நீரின் அமைதியை கவனிக்க மறக்கும். தெரியும் நீர்நிலை எப்போதுமே தெரியா அமைதியின் இன்னொரு வடிவம்.
நீர் முடியும் இடத்தில் நிலம் துவங்குகிறது என்று உலகம் நினைக்கும். அப்படித்தான் பார்வையில் தெரியும். ஆனால் அப்படி அல்ல. நீருக்குள்ளும் நிலம் இருக்கிறது. நிறைய மனிதர்களின் சொல்லப்படா, காட்டப்படா வாழ்க்கை போல … வெளியில் தெரியா நிலம் தான் நீர் நிற்கவும் காரணம் என்று உலகத்திற்கு புரியாததால் … நீர் மூன்று பங்கு, நிலம் ஒரு பங்கு என்று கணக்கு சொல்லும். எல்லாம் நிலமே என்று நிலத்திற்கு மட்டுமே தெரியும். அது வெளியே சொல்வதுமில்லை. நன்றியை எதிர்பார்ப்பதும் இல்லை ! தெரியும் நிலம் எப்போதும் ” அனைத்தும் நான் ” என்பதன் சொல்லப்படா எதிரொலி.
நேர் நிற்கும் மரத்தை மட்டுமே உலகம் பார்க்கும். ஆனால் வளைந்து நெளிந்து நீர் நோக்கி மறைந்து நகரும் வேர்கள் அந்த மரத்தின் முதுகெலும்புகள் என்று மரத்திற்கு மட்டும் தெரியும். உலகத்திற்கு தெரியாது. எப்போதாவது மரம் பட்டுப்போனால் மட்டும் .. ” நீர் கிடைக்கலை போல ” என்று விதண்டாவாதம் பேசி அலையும். ஒவ்வொரு மரமும் தெரிந்ததின் நிற்கும் அடையாளம். அனைத்து மரத்திற்கும் தெரியா வேர்கள் உண்டு. அந்த வேர்கள் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் .. தெரியும் மரம் காணும் உலகம், தெரியா வேரை காண மறுக்கிறது.
மொத்தமான காட்சி அது. நீர், நிலம், வானம், மேகம், மரம், காற்று எல்லாமும் உள்ள உலகம் அங்கு அவிழ்ந்து கிடக்கிறது. நெருப்பற்ற உலகம் ஒரு possibility தான். In fact .. நெருப்பு மனிதன் கண்டுபிடித்த முதல் ஆக்க அழிவு ஆயுதம். விலங்குகள் நெருப்பை விரும்புவதில்லை. நெருப்பை கண்டுபிடிக்க மனிதன் எடுத்த முயற்சியை, மீத நான்கு பூதங்களின் தெரியா connectivity யை கண்டறிய பயன்படுத்தி இருக்கலாம். Better version of animals ஆக மாறியிருப்பான் பாள்… அவன், அவள் !
பயணிப்போம். கவனிப்போம். பகிர்வோம்.
( நூறு புகைப்படங்கள் மற்றும் அவற்றை பார்த்தபோது மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு பகிர ஆரம்பிக்கிறேன். நெல்லியம்பதி, கேரளா வில் இந்த காட்சி கண்ணுக்கு கிடைத்தது. இதுவரை நெல்லியம்பதி செல்லாதவர்கள் இனி செல்வதை பற்றி யோசிக்கலாம்.)