மனங்களின் மறுபக்கம் 007
ஒரு சில வார்த்தைகளை கேட்கும்போது, அவற்றிற்கான பதில் .. சில நொடிகளில் மனதில் வந்து விடுகிறது. ஆனால் … அவற்றை சொல்வதற்குள் ….
1. வார்த்தைகளை இன்னும் அழகுபடுத்துகிறோம்
2. வார்த்தைகளால் இன்னும் அசிங்கப்படுத்துகிறோம்.
3. பதில் பேசுவதில்லை.
4. பதிலை வேறு ஒருவருடன் பேசுகிறோம்.
01 :
நினைத்ததை பேசும் முன்பு, வார்த்தைகளை யோசித்து, தேடிப்பிடித்து, அழகுபடுத்தி பேசுகிறோம். இந்த அழகுணர்ச்சியில் உண்மையும் சேர, வார்த்தையின் பலம் உணர்வுகளை கட்டும் பாலங்களை பலப்படுத்தும் வித்தையை செய்ய ஆரம்பிக்கிறது. சிலரின் சந்திப்பு, சில வரிகளில், வார்த்தைகளில், நிறைவான இறுக்கம் பெற்று, என்றும் நிலைக்கும் உறவாக மாறிவிடுகிறது. நினைத்ததை அழகாக பேசும் மனம் இன்னொரு பக்கத்தையும் அழகாக்குகிறது. நினைத்ததை உண்மை plus அழகான வார்த்தைகளில் சொல்ல முடியும் ஒருவரால் வாழ்க்கையின் ரசனையை புரிந்துகொள்ள முடியும். மற்றவர்களுக்கு இவரின் வார்த்தைகள் புரிய வாய்ப்பில்லை.
” எனக்கு உங்களை பிடிக்கும். அது வேறு. ஆனாலும் … சில இடங்களில் நீங்கள் உங்களை சரி செய்து கொள்ள முடியும் எனில் …உங்களை இன்னும் பிடிக்கும். அதுவும் வேறு. அப்படி மாறவில்லை எனினும் பிடிக்கும். ஆனால் .. உங்களுடன் வர இயலாது ”
போன்ற வரிகள் மிகவும் பலமானவை.
02.
நினைப்பதை சரியாக சொல்ல முடியாமல் அல்லது தெரியாமல் … தேவையற்ற வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, சொல்ல வந்ததை அசிங்கமாக சொல்வது கொடுமையிலும் கொடுமை. இந்த மனங்கள் கடைசியில் ” நான் அப்படி சொல்லவில்லை ” என்று பின்னோக்கி பயணிப்பது வார்த்தைகளை சரியாக தேர்வு செய்யாததால் மட்டுமே.
” என்னை விட முக்கியமா ? என் பிணத்தை தாண்டி செல். நான் இதுவரை செலவழித்த பணத்தை கொடுத்துவிட்டு செல். இதெல்லாம் இவ்வளவு நாள் நான் சம்பாதித்து கொடுத்ததில் சாப்பிட்டு சேர்த்த கொழுப்பு .. அந்த திமிரில் ஆடுகிறாய். உன்னை அழித்து நடுத்தெருவில் நிறுத்துகிறேன் பார் ”
இந்த வார்த்தைகளால்….. இருக்கும் உறவையும் அழித்து, புது எதிரியையும் உருவாக்கி … சொல்ல வந்ததையும் வேறு வார்த்தைகளில் சொல்லி … இது ஏன் ?
மனங்களின் மறுபக்கம் அப்படித்தான். முன்பக்கமும், மறுபக்கமும் ஒரே அலைவரிசையில் பயணிக்காதவரை ….இந்த வார்த்தைகள் உறவை அழிப்பதில் ஆச்சர்யம் இல்லை.
03 :
பதில் பேசாது இருப்பது ஒருவித “இரு நிலை”. பேசாமலேயே கடக்கலாம் அல்லது மனம் மாறினால் பேசிக்கொள்ளலாம் என்கிற இரு நிலை இது. இதில் … மீண்டும் பேசும் வாய்ப்பு இருக்கும்போதும், தேவைப்படும் நேரத்தில் பேசாமல் இருப்பது… ஒருவித நம்பகத்தன்மை இழப்பை ஏற்படுத்துவது உண்மை. எதிர்தரப்பு திருந்தி வரட்டும் என்று அமைதியாக இருப்பது சிறப்பானது எனினும், அதை சொல்லிவிட்டு செல்லும் பாங்கு இன்னும் சிறப்பானது.
” உன் பார்வை தவறானது. இதற்காக நீ வருந்துவாய். அதுவரை நான் மௌனமாக இருக்க முடிவு செய்கிறேன் ” என்ற மௌனம் அல்லது பதில் பேசாது இருப்பது … மிகவும் பலமான ஒன்று.
04 :
பதிலை வேறு ஒருவருடன் பேசுவது தான் மிகப்பெரும் கொடுமை. சம்பந்தப்பட்டவருடன் பேச இயலாத,முடியாத, பயப்படும்… மனம், சம்பந்தம் இல்லாதவருடன் பேச முடிவு செய்வது விந்தையிலும் விந்தை. அப்படி பேசுவதும் மற்றவரை அடையும் என்று நன்கு தெரிந்தும் பேசுவது … என்ன புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை !
” அவன் அவள் ..இப்படி அப்படி .. அதுவாம் இதுவாம் … அங்கேயாம் இங்கேயாம் … ” என்று நீளும் இந்த பட்டியல் நமக்கான எதிரிகளை அதிகமாக்கும் ஒன்று.
யோசிப்போம்…..எங்கே நாம் இருக்கிறோம் என்பதையும், எங்கே நாம் இருக்க வேண்டும் என்பதையும் !
கற்போம், பகிர்வோம், பயணிப்போம்.