கவிதையின் கண் – 001
வாழ்க்கை :
” கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும் ..
பார்க்காமலே அறிந்துகொள்கிறார். ”
_______________________________________
நா.முத்துக்குமார் எழுதிய இந்த கவிதை ஏற்படுத்தும் அதிர்வுகள், எறியப்பட்ட கல் நீருக்குள் அடங்கிய பின்னும் எழும் அலையாக நகர்கிறது – உள்ளிருந்து வெளிப்புறமாக ! நம்மை தாண்டி இருக்கும் ஏதோ ஒன்றை கடவுள்/இயற்கை என்று வழிபடுவது உலகம் எங்கும் நடந்து கொண்டே இருக்கிறது. ஏன் நாம் கடவுளை வணங்குகிறோம் ?
கடவுள் நல்லவர், நமக்கு நல்லது செய்வார் .. என்ற ஒரே நம்பிக்கையில் தான் கடவுளை நாம் கும்பிடுகிறோம். நல்லது நடந்தால் கடவுள் என்றும், நடக்கவில்லை எனில் அவருக்கு மனசாட்சியே இல்லையா என்றும் கேட்டுக்கொள்கிறோம். ஆனாலும் மீண்டும் அதே கடவுளை கும்பிடுகிறோம். கடவுள் எப்போதும் பேசுவதே இல்லை. பேசும் கடவுள் என்று ஒருவர் உலகில் இல்லை. ஆனாலும் அவருக்கு உலகில் நடக்கும் எல்லாம் தெரிகிறது. அல்லது தெரியும் என்று நாம் நம்புகிறோம். நமக்கு சரியென்று ஒன்று நடக்காதவரை கடவுளை நாம் நம்புவதில்லை. நமக்கு தவறென்று ஒன்று நடக்கும்போது … அதே கடவுளை இல்லை என்கிறோம். இப்படி யோசிப்போம் .. பேசவே பேசாத ஒருவர், அவரின் பெயர் கடவுள், அவர் சரியா தவறா என்று அவர் சொல்வதில்லை, அதை முடிவு செய்வது நாம் !! – அப்படி எனில் .. கடவுளுக்கும் Certification கொடுக்கும் power நம்மிடம் இருக்கிறது ! இவ்வளவு சிக்கலான concept ஆ கடவுள் என்பவர் ?!!
ஒரு பழமொழி உண்டு.
” கடவுளை சிரிக்க வைக்க வேண்டுமா ? உன் திட்டங்களை அவரிடம் சொல். ”
முதிர்ச்சியின் அடையாளம் எப்போதுமே “நம் கையில் ஒன்றும் இல்லை – நாம் செய்ய வேண்டியதை தவிர ” என்ற புரிதல் மட்டுமே. ஒரு வருடத்திற்கு முன் வைத்திருந்த திட்டங்கள் எதுவும் “அப்படியே” நடந்திருக்க வாய்ப்பில்லை. மாற்றங்கள் மட்டுமே நிஜம் என்ற போதும் .. கடவுள் என்று ஒருவர் நாம் சொல்வதை கேட்பார் என்றும், அல்லது, நாம் சொல்வதை அவர் கேட்கவில்லை என்பதும் … எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை. நம்பிக்கை என்று நம் மேல் நாம் வைத்துக்கொள்ளும் தலைமை பண்பைத்தான் கடவுள் என்று குழம்பிக்கொள்கிறோமோ ?
என்னை பொறுத்தவரை “கட உள்” என்பதே .. கடவுளாக தெரிகிறது. அப்படி ” கட உள் “ளில் நான் ஆடும் சீட்டுகட்டில் இன்னொருவர் பார்ப்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆதலால் என் சீட்டுக்கட்டை கவனமாக வைக்கவும் நான் விரும்புவதில்லை. வெளிப்புறமாக சீட்டுக்கட்டை கையில் வைப்பதால், யாருடனும் விளையாட வேண்டிய அவசியமும் எனக்கு வருவதில்லை.
பயணிப்போம்.