மனங்களின் மறுபக்கம் – 001
இரவு 11 மணி இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு.
” தற்கொலை செய்ய நினைக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் பேசிவிட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன் “.. யாரோ ஒரு பெண்ணின் பட பட பேச்சு. நட்பு ஒன்றின் மூலமாக தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது இந்த பெண்ணுக்கு.
சொல்லிக்கொண்டிருக்கும்போதே படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தேன்.
கொஞ்சம் அமைதி. பின் சொன்னேன் …
” வாழ்த்துக்கள். எப்போ தற்கொலை செய்ய போறீங்க ? ”
” சார் .. ” மறுபக்கம் முழு அமைதி.
” இல்ல மேடம்.. சாகப்போறேன்னு சொன்னீங்க. முன் வாழ்த்துக்கள். எப்போன்னு கேட்டேன் ”
” என்ன சார்.. சாகப்போறேன்னு சொல்றேன். இப்படி சொல்றீங்க ? ”
” நான் என்னம்மா சொன்னேன். வாழ்த்துக்கள் தானே சொன்னேன் ”
கொஞ்ச நேரம் அமைதி.
” இல்ல சார். கொஞ்சம் பிரச்சினை. சமாளிக்க முடியல. அதான் செத்திடலாம்னு ”
நானும் கொஞ்சம் அமைதி.
” சரி. சாகலாம். அப்படி சாகறதுக்கு முன்னாடி என்ன கூப்பிட்டு இருக்கீங்க ன்னா ஏதோ சொல்ல விரும்பறீங்கன்னு நினைக்கறேன் ”
” ஆமாம் சார். ”
” சொல்லுங்க கேட்போம் ”
கேட்க ஆரம்பித்தேன். மணி அப்போது 11.15 இருக்கலாம். அந்த பெண்மணி பேச ஆரம்பித்தார்கள். பேசினார்கள். பேசினார்கள். அதிகாலை 03.45 வரை பேசினார்கள். அதுவரை நான் ” ஆமாம் மேடம். சரி மேடம். சரிதான் மேடம் ” மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தேன்.
பேசி முடித்ததும் ஒரு பெருமூச்சு வந்தது.
( அப்ப்பாடா .. ஒரு non verbal clue கிடைத்தாயிற்று. இதற்கு மேல் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை ! )
” ரொம்ப நன்றி சார். இப்போ free யா உணர்றேன். ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டேனா சார் ? . இப்போ நீங்க சொல்லுங்க சார் நான் கேட்கிறேன் ”
நான் சிரித்தேன். பின் ஒரு கதை சொன்னேன். மூன்று நிமிட கதை. மொத்த பேச்சில் என்னுடைய பேச்சு மூன்று / ஐந்து நிமிடங்கள் மட்டுமே.
அன்று அந்த பெண்மணி தற்கொலை செய்துகொள்ளவில்லை !
சில வருடங்கள் கழித்து அந்த பெண்மணி அதற்கு ஒரு காரணம் சொன்னார்கள்.
” நீங்க மட்டும் அவ்ளோ நேரம் கேக்கலைன்னா செத்து போயிருப்பேன் சார் ”
சிரித்தேன்.
ஆம். கேட்கத்தான் யாரும் இல்லை இவ்வுலகில். சொல்வதற்கு நிறைய பேர் !!
மனங்கள் பொதுவாக கேட்கப்படவே விரும்புகின்றன. மனதில் உள்ளவற்றை சொல்லும்போது .. mirror effect இல் கேட்கும் ஒரு தோள் மட்டுமே எதிர்ப்பக்கம் தேவை. இந்த மறுபக்கம் புரியாமல் ” பஞ்சாயத்து “க்கு தயாராகும் பலரை பார்த்தால் சிரிப்பு வரும் எனக்கு.
ஏன் மனங்களுக்கு கேட்கப்படுவது பிடிக்கிறது ?
ஒரு உலகில் ஒரே ஒரு குரல் மட்டுமே வாழும் ஒலிக்கும் எனில் அது கேட்டல் உலகமாகத்தான் இருக்க முடியும். கேட்டல் உலகில் பலர் கேட்கலாம். ஆனால் ஒருவர் மட்டுமே பேச முடியும். அந்த ” ஒருவர் மட்டுமே ” logic தான் கேட்கப்படுவதை விரும்புகிறது.
இவ்வுலகில் அனைவரும் கேட்க தயாரானால் பேச ஒன்றுமே இல்லை என்பது எவ்வளவு உண்மை !! கேட்டல் ஒரு வித தியானம். சொல்லுதல் என்பது ” கேட்கப்படும்போதே ” மதிப்பு பெறுகிறது. இன்று நிறைய மனிதர்களின் பிரச்சினை .. ” தான் கேட்கப்படவில்லை ” என்பது தான் !
கேட்க யாரும் இல்லை என்பதால் தான் கேட்க வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அங்கே தான் மனிதர்களின் நாடகம் தொடக்கம். அங்கே அவர்கள் அணியும் முகமூடிகள் வாழ்க்கை முழுக்க அவர்களுடன் பயணிக்கும். அந்த முகமூடிகளுக்கு பின் ” தான் கேட்கப்பட்டால் ” இந்த முகமூடி தேவையே இல்லை என்று சொல்ல தயாராக ஒரு முகம் காத்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
இதையெல்லாம் படித்த பின் … கேட்க நீங்கள் தயார் எனில் .. முதலில் நீங்கள் கேட்க தயார் என்று சொல்லப்போகும் மனிதர் யார் ? அந்த மனிதரின், மனதின், மறுபக்கத்தை நீங்கள் பார்க்க தயாரா ?
ஆம் எனில் .. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இல்லை எனில் .. ?
நீங்கள் சொல்வதை யாரோ கேட்டுக்கொண்டே இருக்கிறார்களே .. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !
பயணிப்போம்.