கவிதையின் கண் – 004
” அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல் ? ”
– அமுதபாரதி
_______________________________________
மிகவும் யோசிக்க வைத்த கவிதை. ஒரே வரி. மூன்று பகுதி. மூன்றாவது பகுதி கொண்டுவருவது ஒரு கேள்வி. சிந்தனை கூட்டில் கல் எரிந்த கேள்வி அது. இனி தேனீக்கள் வசம் எண்ண உலகம் !
ஒருமுறை அஸ்ஸாம் மாநில பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நான் அருகில் இருந்த யோகியிடம் சொன்னேன்
” அந்த மூன்றாவது வரிசையில் நான்காம் குழந்தை … எவ்வளவு அழகும் சுட்டித்தனமும் … ! இல்லையா ? ”
அவர் என்னை பார்த்து ஒரு வரி சொன்னார் – அவரின் மௌன சிரிப்போடு.
” அனைத்து குழந்தைகளும் அழகே …சுட்டிகளே ”
ஆயிரம் பேர் ஒருபக்க கன்னத்தில் அறைந்தது போல இருந்தது எனக்கு. எப்படி இதை கவனிக்க தவறினேன் என்று உள்ளுக்குள் என்னை நானும் அறைந்தேன். குழந்தைகள் என்றால் அனைத்து குழந்தைகளும் அழகே. பெரியவர்கள் என்றால் அனைவரும் பெரியவர்களே – அனுபவத்தால்.
அவரிடம் என் பேச்சு தொடர்ந்தது. அவரின் சிரிப்புடன் கூடிய பேச்சினை நான் கவனிக்க ஆரம்பித்தேன் ..
” ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். எந்த குழந்தையும் சரி தவறு என்று எல்லாம் இல்லை. குழந்தைகள் சிரிக்கும்போதும் அழும்போதும் உலகம் முழுக்க ஒன்றே. நிறம், இனம், மொழி எல்லாம் இதற்குள் வரவே வராது. இதெல்லாம் மனிதன் ஏற்படுத்தியது. இதற்கு அவன் பெருமைப்படுவதை விட வருத்தப்பட வேண்டும். யதார்த்தமான ஒன்றை பெயரிட்டு பிரிக்கும் அவன் தான் மோசமான மிருகம். எந்த மிருகத்திற்காவது நிறம், இனம், மொழி என்று பிரிவு உண்டா ? நம் வசதிக்கு நாம் தான் அவைகளை பிரிக்கிறோம். அனைத்து குழந்தைகளும் அழகே என்று நாம் பார்க்க ஆரம்பித்தால் … ஒவ்வொரு குழந்தையின் மகத்துவமும் நமக்கு புரியும் “. ஒரு அழகான அடிப்படை பாடம் புரிந்தது எனக்கு. கிட்டதட்ட 15 வருடங்களுக்கு முன் நடந்த இந்த நிகழ்வுக்கு பின் .. குழந்தைகளில் எனக்கு ” தனியாக ” குழந்தைகள் தெரிவதில்லை. அனைத்து குழந்தைகளும் ஒன்றே. அனைத்து குழந்தைகளின் சிரிப்பில் அழுகையில் இருக்கும் ஒரு புள்ளி ஒன்றே.
காடு வைத்திருக்கும் மூங்கிலில் ” இந்த மூங்கில் ” நன்றாக வாசிக்கும் புல்லாங்குழல் என்று சொல்வது இல்லை. அதை நாம் தான் முடிவு செய்கிறோம். ஒவ்வொரு மூங்கிலிலும் ஒரு புல்லாங்குழல் ஒளிந்து இருக்கிறது என்ற புரிதல் வந்துவிட்டால், மொத்த மூங்கில் கூட்டமும் நமக்கு அழகான நேரே நிற்கும் இசையாக தெரியும் ! தனித்து தெரிவது அழகல்ல. இருப்பே தனியானது தான் என்று உணர்வதே அழகு.
இன்னொரு ” நீங்கள் ” இந்த உலகில் இல்லை எனும்போது, ” நீங்கள் ” போல் ஒரு தனித்துவ அழகு இந்த உலகில் உண்டா ?
யோசிப்போம்.