தெரிந்ததும் தெரியாததும் – 002
காசியின் படிக்கட்டுகள் பல கதைகள் பார்த்தவை. இருந்த உடல்கள், இறந்த உடல்களை தூக்கிக்கொண்டு நகர்வதை அமைதியாக பார்ப்பவை. மகனை பிரிந்த பெற்றோர், அழும் கண்ணீரை அமைதியாக வாங்குபவை. மகளை பறிகொடுத்த அப்பா, சொல்லமுடியாமல் சொல்வதை கேட்பவை. வயதான தன் தாயை கங்கைக்கு பத்திரமாக அழைத்து வந்து, அவள் சொல்லும் வாழ்த்தை கண் மூடி வாங்கும் மகன் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்பவை. இந்த படிக்கட்டுகளில் படுத்து காதை திறந்து வைத்தால், அவை சொல்லும் கதைகள் இந்த பூவுலகில் மனிதன் சரியாக மற்றும் தவறாக வாழ்ந்ததன் சாட்சிகள் !
காதல் என்பது உடல் சார்ந்தும், உடல் சாராதும் விளக்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை காதல் என்பது ” கேட்காமல் சொல்லாமல் புரிந்து கொள்ளப்படுவது “. காபி வேண்டும் என்று நினைக்கும் கணவனை, ‘ இருங்க காபி கொடுக்கிறேன் ‘ என்று அழைக்கும் மனைவியிடம் இருக்கிறது கொள்ளை காதல். இங்கு காபி ஒரு சங்கேத பாலம். நீ நினைப்பதை நான் செய்கிறேன் என்று அவளும், நான் நினைப்பதை அவள் செய்கிறாள் என்று அவனும் மனம் மகிழ கால் பதிக்கும் பாலம் அது !
முதுகு வலிக்கிறது என்று நினைக்கும் மனைவிக்கு, ” இரு தைலம் தடவறேன் ” என்று நகரும் கணவனே காதலன். வலி என்று வந்தபின், வெளிப்புற உடல் பற்றிய பார்வைகள் மறைந்து, அந்த உடலின் உள் நிற்கும் ஆதார எண்ணங்களே வலிக்கு நிவாரணி. தைலம் தடவும் விரல்களில் தெரியும் மென்மை சொல்லும் காதலின் வெளிதெரியா ஆனால் உள் உணர் இலக்கணம். இங்கு தைலம் ஒரு பாலம் !
” கண் தெரியவில்லை. ” என்று கணவர் சொல்லும் முன், ” நான் படிக்கிறேன் ” என்று சொல்லும் மனைவி, காகிதம் பார்த்துக்கொண்டு ஆனால் மனைவியின் வார்த்தைகள் கேட்கும் கணவன், புரிகிறதா என்று கேட்காமல் .. புரிய வேண்டும் என்று அழகாக மெதுவாக படிக்கும் இங்கிதம், அது கேட்டு தன் தலையை ஆட்டிக்கொள்ளும் கணவனின் பூம் பூம் மாடு அசைவு, வருத்தமான எழுத்துக்கு வான் பார்க்கும் மௌனம், மகிழ்வான எழுத்துக்கு கண் பார்த்து சிரிக்கும் connect .. அந்த கணவனும் மனைவியும் 60 இல் 80 இல் .. இல்லை இல்லை 96 இலும் வாழ்வின் அர்த்தங்களை பிறர்க்கு போதிக்காமல், யாரையும் பாதிக்காமல் வாழ்ந்து காட்டுபவர்கள். காகிதம் அங்கே ஒரு ஆதரவுப் பாலம் !
60 இல் திருமணம் என்று யாரும் யோசித்தது உண்டா என்று தெரியவில்லை. ” காலம் போன வயதில் ” என்று அந்த வயதை கடக்கிறோம். இல்லை காலம் போன வயது அல்ல அது. காலம் கனியும் வயது. 60 வயதில், உண்மையின் இயலாமையில்.. துணை தேவைப்படும் வயதில், உலகம் ” அது கிடக்கு கிழம் ” என்று ஒதுக்கும் வயதில், ஒருத்தியின் கையை ஆதரவாக பிடிக்க ஒருவன் விரும்பினால் .. அதுவும் காதலே. காட்டாற்று வெள்ளத்தில் சட்டென கிடைத்த கீற்றை பிடித்துக்கொள்வது போல, தனி வாழ்க்கையாகிப்போன 60 வயதில் 70 வயதில் 80 வயதில் கிடைக்கும் ஆதரவுக்கை கொடுக்கும் நிறைவு வாழ்க்கையின் உண்மை பக்கங்களில் ஒன்று. 60 வயதில், ஆதரவு தேவைப்படும் ஒருவனை, ஒருத்தியை .. கை பிடிக்கும் வாழ்க்கை ஒன்று கிடைப்பின் அது வரம். அப்படி ஒரு வாழ்க்கையையும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று மனம் யோசிப்பது என்னவோ உண்மை !
காசி ஒன்றும் கங்கை just கடக்கும் இன்னொரு நகரம் அல்ல. காசிக்கு வந்தபின் உங்களின் வாழ்வில் மாற்றம் இல்லை எனில், நீங்கள் காசியை சரியாக கவனிக்கவில்லை என்று பொருள். காசியின் பக்கங்களில் சொல்லப்படா மனித தத்துவங்கள் நிரம்பி வழிகின்றன. அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் மனங்களுக்கு மட்டும் புரிபவை. ஆம். வெளியுலக வேடங்களுக்கு அவை புரிவதில்லை.
60 வயதில், ஆதரவு தேவைப்படும் ஒரு பெண்ணின் கரம் பிடிக்க காத்திருப்பது ஒன்றும் புதியது அல்ல. அந்த ஆதரவு கரம் எதையும் எதிர்பார்த்து கொடுக்கப்படுவது அல்ல. ஆனால் … எல்லாவற்றையும் கொடுக்க எதிர்பார்த்து நிற்பது. இந்த 60 வயது திருமணத்திற்கு தயாராகும் ஒவ்வொருவரும் காதலின் அர்த்தம் உணர்ந்தவர்கள். அந்த ஆதரவு தேவைப்படும் பெண் என்பவள் உங்களின் மனைவியாகவும் இருக்கலாம். 60 வயதில் உங்களின் மனைவியை மீண்டும் மனம், மணம் செய்வது அதனால் தானோ என்னவோ ?
காசிக்கு ஒரு தீரா உலா செய்ய தயாராகவும்.
ஆம்.
மனதிற்குள்ளும்.