தெரிந்ததும் தெரியாததும் – 003
பத்மநாதபுரம் அரண்மனை கொஞ்சம் வித்தியாசமானது. வேறு வேறு கோணங்களில் ஒரே காட்சி அழகாக மாறிவிடும். மேற்கூரை அமைப்பும், ஜன்னல் வழி வரும் வெளிச்சமும், நான்கு பக்க ஒடு வரிசைகளுக்கு மத்தியில் தெரியும் செவ்வக இடைவெளியும், மரத்தால் செதுக்கப்பட்ட சிற்பங்களும்… என்று அந்த அரண்மனை வித்தியாச உலகம். புகைப்படம் எடுக்க வேண்டும் எனில், ஒரு நாள் தேவைப்படும். Details உடன் புகைப்படம் எடுக்க வேண்டும் எனில் அநேகமாய் இரண்டு நாட்கள்.
யாரோ இருவர் அவர்கள். மேலிருந்து கவனித்த போது கண் பார்த்து சிரித்தார்கள். என் Camera அவர்களை படம் எடுப்பதை அழகாக அனுமதித்தார்கள். சிரித்த முகம் தூரத்தில் இருந்தும் தெளிவாக தெரிந்தது. அவர்களின் மகிழ்வில் இந்த புகைப்படமும் தன்னை இணைத்துக்கொண்டது.
பொதுவாக நல் நினைவுகள் நம்முடன் எப்போதும் பயணிப்பவை. சம்பந்தப்பட்ட விடயங்கள் கண்ணில் பட்டவுடன் நல் நினைவுகள் நம்மை சட்டென அடையும். இந்த புகைப்படம் அப்படி சில நினைவுகளை கொண்டு வருகிறது.
என்னுடன் அப்போது பயணித்த பெண் Fashion Designer ஒருவரை, அங்கு வந்திருந்த குழந்தைக்கு மிகவும் பிடித்துப்போக .. அந்த குழந்தையும், பெண்ணும் ஒரு புகைப்படம் எடுத்து சிரித்தனர். அந்த குழந்தை சீனாவில் இருந்து வந்த குழந்தை. பெண் Fashion Designer மும்பையில் இருந்து வந்து என்னுடன் இரு வாரங்கள் பயணித்தவர்.
அந்த குழந்தையின் அம்மா பேசத்தொடங்கினார்
” அவள் யாரிடமும் செல்ல மாட்டாள். உங்களிடம் வந்து புகைப்படம் வேறு எடுத்துக்கொண்டு சிரிக்கிறாள். ஆச்சர்யம். ”
பெண் Fashion Designer ம் சிரித்தார். இருவரும் பேச ஆரம்பித்து சட்டென நெருங்கிவிட்டது இன்னொரு ஆச்சர்யம்.
” இந்தியா சுற்றி பார்க்கவா ? “என்று நான் அவர்களை கேட்டேன்.
” இல்லை. நானும் என் கணவரும் பிரிகிறோம். குழந்தைக்கு அந்த வலி தெரிய வேண்டாம் என்று ஒரு பயணம். நானும் குழந்தையும் இந்தியா முழுவதும். இரு மாதங்களுக்கு. அவள் சிரித்து மகிழ வேண்டும். அதான் ”
நான் அமைதியானேன்.
குழந்தை சிரித்து கொண்டிருந்தது.
அந்தப்பெண்மணி தன் முகத்தில் இருந்த சோகத்தை கொஞ்சம் மறைக்க முயன்று, முடியாது சோகமாக சிரித்தார்.
” இந்தியா எப்படி இருக்கிறது உங்களுக்கு ? ” நான் கேட்டேன்.
” அழகு. மிக அழகு. தாஜ்மஹால் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றியது. ஜெய்ப்பூர் மிக அழகு. இமயமலை கேட்கவே வேண்டாம். BreathTaking. இந்த palace உம் அழகு. ஆனால் இந்தியாவில் மக்களே அழகு. ஒவ்வொரு 500 கிலோமீட்டர் பரப்பிலும், மக்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ”
வியந்து பேசிக்கொண்டு இருந்த பெண்மணிக்கு 35 வயது இருக்கலாம். குழந்தை பெண் Fashion Designer உடன் விளையாட ஆரம்பித்து இருந்தது.
” குஜராத் டீயை சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது. காஷ்மீர் தனி அழகு. புகைப்படத்திற்காகவே படைக்கப்பட்டது போல ”
நான் சிரித்தேன்.
” இந்திய கடவுள்களின் உருவம் ஆச்சர்யம் எனக்கு. ஆண் பெண் கடவுள்கள் பிரம்மாண்டமாய் இருக்கிறார்கள். சிவன் இந்தியா முழுக்க இருக்கிறார். காளி யின் உருவம் பயம் கொள்ள வைக்கிறது. சிவ பார்வதி பாதி பாதி சிலை சொல்லும் செய்தி அட்டகாசம். நீ பாதி நான் பாதி என்ற வாழ்க்கை. இல்லையா ? ”
அந்த பெண்ணை பார்த்தேன். கணவனை பிரியும் பெண். ஆனால் சிவ பார்வதி logic அவளை ஈர்க்கிறது.
” ஆம். வெற்றியோ தோல்வியோ சரி பாதி – என்கிற logic அது. இன்பத்தில் துன்பத்தில் இருவரும் ” இரு உயிர் ஓருடல் ” என்று வாழ்தலை போதிக்கும் சிலை அது ” என்று பெண் Fashion designer சொன்னார். குழந்தை இப்போது அவரின் முதுகில்.
இதை கேட்டவுடன் அந்த சீனப்பெண் அமைதியாக இருந்தார். வான் பார்த்தார்.
பின் கை கொடுத்து கிளம்பினார்.
சிவ பார்வதி பாதி சிலை logic அவருக்குள் ஏதோ கேள்விகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். சட்டென வரும் மௌனம் எப்பொதும் அகம் சார்ந்தது.
இன்று அந்த பெண் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. தனியாகவா ? கணவருடனா ? இல்லை இன்னொரு மணமா ? எதுவும் தெரியாது. ஆனாலும் .. சிவ பார்வதி அவளை யோசிக்க வைத்தது மட்டும் நிஜம். இந்திய வானம் அப்படித்தான். எந்த பறவையயும் நிறம் மாற்றி அனுப்பும்.
அகத்திலும் !