கவிதையின் கண் 008 :
” இந்த ஐவரினும்
வேறென் மகிழ்ச்சி
வேண்டும் எனக்கு? ”
– கொரிய கவிதை
_______________________________
ஐம்புலன்கள் போல் ஒரு பலம் உண்டா நமக்கு ? காண்பதில் நல்லவற்றை எடுத்து வாழும் பக்குவம், கேட்பவற்றில் அனுபவத்தை உடன் உள் பதிக்கும் திறமை, உணர்பவற்றில் எதிர்காலம் நோக்கி உந்தி தள்ளும் உணர்வை வைத்துக்கொள்வது, சுவையில் ஆரோக்கியத்தை மனத்தில் வைப்பது, மணத்தில் temptation ஐ ஓரம் வைப்பது … எவ்வளவு சுலபமாக சொல்லி விடுகிறது இந்த மூன்று வரிக் கவிதை !
ஐம்புலன்கள் தான் நம்மை வழிநடத்துகின்றன என்பது எத்தனை பேரின் மனதில் இருக்கும் self realization என்று தெரியவில்லை. ஊர் உலகம் எல்லாவற்றையும் காரணம் சொல்லும் நாம், நம் பார்வையில், கேட்டலில், உணர்தலில், சுவைத்தலில, நுகர்தலில் தான் பிரச்சினை என்று எப்போது உணர்வோம் ? ” என் வாழ்வை நான் பார்த்த விதம் சரியில்லை ” என்று 60 வயதில் வாழ்க்கையை பற்றி சொல்லும் ஒரு வயோதிகனின் நிலையை போல கொடுமை இருக்க முடியுமா ?
இந்த ஐம்புலன்கள் போல…. பஞ்ச பூதங்கள் தானே நம் இயக்கத்தின் ஆணி வேர். நிலம் கொடுக்கும் பொறுமையில் தான் நம் நகர்தலும், நிற்றலும், ஆட்டமும், ஆனந்தமும் .. இருக்கிறது. வான் கொடுக்கும் இடைவெளியில் தான் நீர் ஆவியாகி மழையாக உருமாற்றம் கொள்கிறது. பூமிக்கும் வானிற்கும், இடைவெளியற்ற வானம் ஒன்றை நம்மால் யோசிக்க முடிகிறதா ? வெளி கொடுத்த வெளியில் சுதந்திரமாய் சுற்றி திரியும் உயிர் பிச்சைக்காரர்களே நாம் ! நீரும் நெருப்பும் இரு கண்கள். நீர் இயக்க ஆணிவேர். நெருப்பு உணவில் படைத்தலையும், தேவையற்றதை அழித்தலிலும் தன் பங்கை அளிக்கின்து. காற்று இல்லை எனில் சுவாசம் அற்ற அழுகும் தோல் குப்பை தானே நாம் !?
ஐம்புலன்கள், பஞ்சபூதங்கள் … தான் நம் தெய்வம். கண்ணை, காதை, மூக்கினை, நாக்கினை, தோலை பத்திரமாக கவனித்து கொள்ளும் ஒருவனுக்கு எந்த மருத்துவமும் தேவை இல்லை. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று .. ஆகியவற்றினை பத்திரமாக கவனித்து கொண்டால் …சொர்க்கம் என்று ஒன்றை தேட வேண்டியதில்லை . இவற்றை அழித்து, கல்லுக்கு முன் நின்று, மந்திரம் சொல்லும் மானிடனை .. அற்பனே என்றே அழைக்க தோன்றுகிறது !
இப்படி யோசிப்போம். நீர் இல்லை. நிலம் இல்லை. வான் இல்லை. காற்று இல்லை. நெருப்பு இல்லை. கண் இல்லை. காது இல்லை. நாக்கு இல்லை. மூக்கு இல்லை. தோல் இல்லை. நினைக்கவே முடியவில்லையா ? ஆம். அப்படி நினைக்கவே முடியாத ஒன்றை பெற்றவர்கள் நாம் என்பது தான் மனித இனத்தின் மந்திர பாத்திரம்.
இதை உணர்பவர்கள் சொல்லும் கவிதை தான் …
” இந்த ஐவரினும்
வேறென் மகிழ்ச்சி
வேண்டும் எனக்கு? ”
– கொரிய கவிதை
என்று அமையுமோ ?