தெரிந்ததும் தெரியாததும் 008
ஏதோ Beach :
காலையில் #slogging ECR இல் செய்ய ஆரம்பிக்க, 10000 steps முடித்தவுடன், கண்ணில் பட்ட ஒரு ஏதோ Beach நோக்கி கால்கள் நடக்க ஆரம்பித்தன. பொதுவாக beach என்றாலே ” அந்த beach ” ” இந்த beach ” என்று பெயரிடப்பட்டு, தன் அடையாளம் இழந்த, வியாபார மயமான beach நோக்கி பயணிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ‘அதன்’ அழகை ‘அது’ இழந்த பின் , அதை காணும் வலிமையை உருவாக்கி மனம் வலித்து….. காண்பதைவிட, ஏதோ beach ஐ நோக்கிய யதார்த்த பயணம் என்னுடைய Choice. ( பெண்கள் இதை செய்ய வேண்டாம். எந்த ஏதோ beach இல் எந்த பாம்பு இருக்கும் என்று தெரிய வாய்ப்பில்லை !! )
வழியெங்கும் பச்சை இலை படர்ந்த கொடிகள் காற்றில் அசைந்து என்னை வரவேற்க, மஞ்சள் பூக்கள் வரவேற்ப்பின் தலைகளாய் கண்களில் விழுந்தன. ( வியாபார மயமான beach களில் காணக் கிடைக்குமா இப்படி ஒரு காட்சி ? ). ஒரு ஒத்தையடி பாதை என்னை கடல் நோக்கி வழிநடத்த, தாத்தா விரல் பிடித்த பேரனாய் நடக்க ஆரம்பித்தேன். ஆம். ஒற்றையடி பாதைகள் தானே நம் முன்னோர்கள் !?
யாருமற்ற கடல் தான் எவ்வளவு அழகு ! இடம் வலம் கண்ணுக்கெட்டிய புள்ளி வரை ஆள் அரவம் அற்ற கடற்கறையில் தனி மனிதனாய் நிற்க எப்படி மனிதனுக்கு துணிச்சல் வருகிறது ? கடலை compare செய்தால், மனிதன் ஒரு negligible புள்ளி. ஆனாலும் நிற்க முடிகிறது என்பதில் இருக்கிறது இயற்கையின் பெருங்கொடை !
அகம் எழும் சூரிய புள்ளி அள்ளி தெளிக்கும் மஞ்சள் வெளிச்சம் முகத்தில் படர, தனிமை சொல்லும் உப்புக்காற்று ஆறுதல் தோலை கடக்க, அலை ஒன்று கால் தொட்டு ” நானிருக்கிறேன் ” என்று சொல்லி நிற்க, பாதம் தொட்ட நீரின் குளிர்ச்சி புவி ஈர்ப்பிற்கு எதிராக பாய … உடல் குளிர்ந்து, கை கூப்பி, மொத்த காட்சிக்கும் நன்றி சொல்லி .. அமைதியாய் அமர்ந்த பொழுதுதான் எத்தனை இனிமையானது !
தூரத்து சூரியனுக்கு எதிராக, ஒரு படகில் யாரோ சில மனிதர்கள் ஏதோ இயக்கங்களில் நகர்ந்து கொண்டு இருந்தது தெரிந்தது. மனிதன் இயற்கையை நம்பும் அளவு ஆச்சரியமானது. இவ்வளவு பெரிய கடலில், அறிவை நம்பி, வயிறு நிறைவதற்காக பயணிக்கும் அவன் … இயற்கையை பொறுத்தவரை ஒன்றுமற்ற புள்ளி என்ற போதும், அவனையும் மதித்து, அவனுக்கும் கொஞ்சம் கொடை வழங்கும் இயற்கையை ” தெய்வம் ” என்று வழிபடாமல்…. கல்லையும், உருவத்தையும், மனிதனையும் வணங்கும் மனிதனை என்ன சொல்வது ? மூன்று மடங்கு இருந்தும் அமைதியாய் நிற்கும் இந்த இராட்சத நீர்மத்தை என்று அவன் மதிக்க போகிறான் ?
முழு மனமும் உற்சாகம் கொண்டு ஆற்றல் ததும்பி நிற்க, திரும்ப எத்தனித்த போது …. கண்ணில் விழுந்த காட்சி யோசிப்பை கேள்வியாக மாற்றியது. ” தன்னை பெரியவன் என்று காட்டி கொள்ள மனிதனால் கட்டப்பட்ட … தூரத்தில் தெரிந்த நகர கட்டிடங்கள் அனைத்தும் ” இந்த இராட்சத நீர்ம அசைவிற்கு முன் எம்மாத்திரம் ?
மூன்று மடங்கான போதும் முழு அமைதியுடன் நிற்கும் அந்த கடலை மீண்டும் வணங்கி வெளி நோக்கி நடக்க ஆரம்பித்த போது … பறவை ஒன்று அருகே வந்து அமர்ந்து என்னுடன் நடந்து வந்தது. அநேகமாக அந்த நடை… கடல் என் வருகைக்கு …. கொடுத்த உடனடி கௌரவமாக இருக்க கூடும்.
அந்த ” ஏதோ beach ” கள் உங்களுக்காகவும் காத்திருக்கின்றன. அந்த ” ஏதோ பறவை “உங்களுக்காகவும் காத்திருக்கிறது. எப்போது செல்லப் போகிறீர்கள் ?