மனங்களின் மறுபக்கம் 008 :
பெரிய நிறுவனங்கள் தங்களின் சிறு செயல்களில் அவற்றின் மதிப்பினை இழக்கின்றன. அதே நேரத்தில் சாதாரண மனிதர்கள் தங்களின் சிறு செயல்கள் மூலம் பெரு மதிப்பினை பெறுகிறார்கள்.
அந்த நிறுவனம் தனக்கு வேண்டியது இது என சொல்லி பயிற்சி வகுப்புகள் வேண்டும் என்ற தேவையை கேட்டது. பயிற்சியும் நடந்து தேவையான result ம் கிடைத்தது. அங்கே தான் அந்த நிறுவனத்தின் founders களின் இன்னொரு பக்கம் தெரிய வந்தது. கொடுக்க வேண்டிய பணத்தினை கொடுக்காமல் இருக்க பயனற்ற காரணங்களை சொல்லி பணம் கொடுக்காமல் இழுத்தார்கள். Values பற்றிய உணர்வையும், பயத்தையும் .. அவர்களிடம் strong ஆக கொடுத்த பின், வேறு வழியின்றி பணத்தை கொடுத்தார்கள். ( சில நிறுவனங்கள் அங்கேயும் காரணம் சொல்லி தப்பித்தன. ஆனால் சில வருடங்களிலேயே மன்னிப்பும் கேட்டன ! ).
இன்னொரு நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமாக சில விடயங்களை செய்தது. பயிற்சிக்கு பணம் ஒழுங்காக கொடுத்து விட்டு ஆனால் அதே பணத்தை வேலை செய்பவர்களின் உழைப்பில் கை வைத்து சுரண்டியது. இதன் விளைவுகளை சுட்டிக் காட்டியவுடன், யாருக்கும் தெரியாமல் மீண்டும் பணத்தினை அவர்களுக்கு அளித்தது.
இன்னொரு நிறுவனம் தங்களின் Franchisee க்களின் பணத்திலேயே கை வைத்தது. இது நிறுவனத்தின் எதிர்காலத்தையே கெடுக்கும் என்று அறிவுறுத்த … யோசித்து… பின் வாங்கியது. ஆனாலும் பிறர் பண சுவை கண்ட கை சும்மா இருக்காது என்பதைப்போல … மீண்டும் இந்த தவறினை செய்ய .. இந்த நிறுவனம் திருந்த வாய்ப்பில்லை என்பதை அவர்கள் செய்த தவறினை சுட்டிக்காட்டிவிட்டு bye சொல்லியதும் நடந்தது.
நிறுவனங்களில் values என்பதை நிர்ணயிக்கும் மனிதர்கள் என்ன values வைத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அந்த நிறுவன வளர்ச்சி அமையும். இன்னொருவரின் உழைப்பில் ஒரு ரூபாய் சுரண்டுவது என்பதை எல்லாம் ” புத்திசாலித்தனம் ” என்று காட்டிக்கொள்ளும் முட்டாள்தனம் போல ஒரு மனித தவறு இருக்க முடியாது. ஒருமுறை ஒரு நிறுவன கூட்டத்தில் பேசியதை இங்கு சொல்ல விரும்புகிறேன் ….
” உழைப்பிற்கு பணம் கொடுக்கும்போது ஒரு ரூபாய் சேர்த்து கொடுக்கிறோம் என்ற நிறைவு தான் எப்போதும் அழகு. குறைத்து கொடுக்கிறோம் என்ற புத்திசாலித்தனம் எப்போதுமே அசிங்கமே. கேட்க முடியாத நிலையில் இருப்பதால் இதை செய்தால், பிச்சைகாரரிடம் இருப்பதை வாங்குவதற்கு சமம் ! ”
சரி .. இன்று இவ்வளவும் ஏன் எழுதப்பட வேண்டும் ? காரணம் இருக்கிறது. என் வேலைகளை முடித்துவிட்டு வாகனத்தில் நான் ஏறும்போது வயதான பிச்சைக்கார பெண்மணி வாகன கண்ணாடி கதவை தட்டிய போது .. 10 ரூபாய் கொடுக்க நினைத்து, அவசரத்தில் 500 ரூபாய் கொடுத்து விட்டேன். கொடுத்ததை மீண்டும் கேட்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஆகவே அமைதியாக அமர்ந்து வாகனத்தை இயக்க ஆரம்பித்தேன். அப்போது அந்த வயதான பெண்மணி …
” தம்பி.. இது 500 ரூபாய் நோட்டு. எனக்கு இவ்வளவு வேண்டாம். 5 ரூபாய் போதும் ” என்று திருப்பி கொடுக்க அந்த வயதான பெண்மணியின் நேர்மை கண்டு அசந்து போனேன். வாகன கதவை திறந்து, வெளியே வந்து 500 ரூபாயை பெற்றுக்கொண்டு, பக்கத்தில் இருந்த உணவு விடுதியில் உணவு வாங்கி கொடுக்க … அந்த வயதான பெண்மணி சொன்னாள் ..
” நன்றி தம்பி. வயிறு நிறைந்து இருக்கு. எனக்கு தேவை இல்லை என்று 500 ரூபாயை திருப்பி கொடுத்ததால் மனதும் நிறைவா இருக்கு ” என்று சிரித்தாள். அந்த கண்களில் அப்படி ஒரு ஒளி !
கிளம்பும்போது நான் கொடுக்க நினைத்த 10 ரூபாயை கொடுக்க.. அவள் சொன்ன வரிகள் .. பெரு நிறுவனங்களுக்கு அவள் நடத்திய பாடம்.
” வேண்டாம் தம்பி. உங்களை போல ஒருவர் இரவு வந்துவிடுவார். தேவையை மட்டும் சொன்னால் போதும். யாரோ ஒருவர் தேவையானதை செய்து விடுவார். தேவைக்கு மெல் சேர்க்கும் அதிகப் பணம் எப்போதும் அதிக ஆபத்து ”
சொல்லிவிட்டு என் பதில் எதிர்பார்க்காமல் திரும்பி நடந்த அந்த பெண்மணியின் மறுபக்கம், நான் சந்தித்த அத்தனை நிறுவனங்களை விட உயர்ந்து நின்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை !
அப்படி ஒரு மறுபக்கம் உங்களிடமும் இருந்தால்.. உங்களுக்கும் என் மகிழ் நிறை மன வாழ்த்துக்கள் !