நகரும் புல்வெளி : 002
கனவுகள்.
கண்கள் மூடியதும் விழித்துக்கொள்ளும் கனவுகளின் உலகம் பிரமிப்பானது. அந்த உலகத்தின் இயக்கமும், படைப்பும் நம்மை மட்டுமே சார்ந்தது. நினைத்து பார்க்க முடியா அதிர்ஷ்டங்களும், திருப்பங்களும், சாதனைகளும், சோதனைகளும் நிறைந்த பிரம்மாண்ட உலகம் அது. திடீரென்று விழிக்கும், மறக்கும், முனகும், பயணப்படும், பயப்படும் மற்றும் … மறந்து போகும் ஒரு உலகத்தில் சில மணி நேரம் பயணித்து திரும்புவது கிட்டத்தட்ட பூமியை விட்டு வெளியேறிய நிலை. பறத்தல் உடலுக்குள் நிகழும் வெளியே தெரியா அதிசயம்.
நான் கண்ட ஒரு கனவு இன்னும் என்னுள் மிதக்கிறது. ஆம். மறக்க இயலா கனவு அது. பெருங்கடல். உயர எழும் அலை. நடுக்கடல். இரவு. ஒரு படகு. நான் மட்டும் செலுத்தும் ஒரு படகு. அலைகளுடன் பேசுகிறேன். கேட்க மறுக்கின்றன. கடலுடன் பேசுகிறேன். மறுக்கின்றது. காற்றுடன் பேசுகிறேன். மறுக்கிறது. வானம், மேகம், மழை, புயல் .. எதுவும் கேட்க மறுக்கிறது. கொஞ்சம் அமைதியாகிறேன். பின் என்னுள் பேசுகிறேன். ஆச்சர்யமாக அலைகள் ஒதுங்குகின்றன. மேகம் சிரிக்கிறது. வானம் கை தட்டுகிறது. மழை மெதுவாக அழகாக பெய்கிறது. புயல் வன்மை இழந்து என்னை கடக்கிறது. என்னை கடக்கும்போது மட்டும். என்னுள் பேசுவதில் இவ்வளவு ஆச்சர்யங்களா ? என்று கேட்டுக்குகொள்கிறேன். ” உனக்குள்ளேயே ஏதோ பேசிக்கிட்டு இருந்தேடா ” .. காலையில் அம்மா சொன்னாள். அதுதான் கனவின் அழகு. நீ காணும் உலகத்திற்கு நீயே voice. நீயே சாட்சி. நீ மட்டுமே புரிந்துகொள்ளமுடியும் காட்சி ஓவியம் அது.
ஏன் கனவுகள் தூங்கிய பின் ? என்று கேட்டால் உங்களுக்கு ஆச்சர்ய பதில் காத்திருக்கிறது. கண் திறந்து இருக்கும்போதும் நாம் கனவு காணுகிறோம். நிறைய நேரம் ” பார்ப்பது ஒன்று ஆனால் நினைப்பது ஒன்று “என்று வாழ்கிறோமே … அதற்கு பெயர் என்னவாம் ? ஆம். Visual Screen ஒன்றை ஏற்படுத்தி அதில் கனவு கண்டு கொண்டே வாழ்க்கையை எதிர்கொள்பவர்களே நாம். அதனால் தான் நிறைய உண்மைகள் யதார்த்தங்களை நாம் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். ” கண் தெரியாம எவ்வளவு ஆட்டம் போட்ட ” என்று சொல்வது அதைத்தான். ” உனக்கு இப்போ எதுவோ கண்ணை மறைக்குது ” என்று சொல்வதெல்லாம் இதைத்தான். Illusion Screen ல் வாழ்க்கையை தேடும் அல்லது தொலைக்கும் அற்ப பதர்களாகவும் சமயத்தில் வாழ்ந்து மடிகிறோம்.
ஒரு ஜென் கதை ஞாபகதிற்கு வருகிறது. ஒரு சீடன் கனவு ஒன்று கண்டான். அந்த கனவில் பட்டாம்பூச்சியை காண்கிறான். பட்டாம்பூச்சி இங்கும் அங்கும் பறந்து கொண்டே இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் முயற்சி செய்து பட்டாம்பூச்சியை பிடிக்கிறான். அது பறக்க கூடாது என்று அதன் வயிற்று பகுதியில் சிறு கத்தியால் X என்று கோடு இடுகிறான். பட்டாம்பூச்சிக்கு இரத்தம் வழிகிறது. கொடூரமான சிரிப்புடன் அதை எறிந்து விட்டு சொல்கிறான். “இப்போது பற பார்க்கலாம் “. அது அழுதுகொண்டே தரையில் கிடக்கிறது. அவன் பலமாக வில்லத்தனம் கூடி சிரிக்கிறான். கனவு முடிவடைகிறது. அப்படியே தூங்கிப் போகிறான். காலையில் எழும்போது ஏதோ ஒன்று வித்தியாசமாக படுகிறது அவனுக்கு. உடலில் எங்கோ வலிக்கிறது. எங்கு என்று பார்த்தால் அதிர்ந்து போகிறான். அவன் வயிற்றில் X குறியீட்டு கோடு போடப்பட்டு இரத்தம் வழிகிறது !
இந்த கதை படித்து முடிக்கும்போது உங்களுக்குள் ஏதோ ஒன்று உதைத்தால் .. அதுவே கனவுகள் உங்களுக்கு சொல்லும் செய்தி. அந்த செய்தி உங்களுக்கும் இப்போது கேட்டிருக்கும் என நம்புகிறேன்.
யோசிப்போம்.