நகரும் புல்வெளி : 003
மே தின வாழ்த்துக்கள் :
மே தின வாழ்த்துக்கள் என்று சொல்லும் அளவிற்கு, நாம் சௌகரியமாக வாழ்கிறோம் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
சாயம்மா – சிரித்துக்கொண்டே இயல்பாக பேசும் ஒரு excellence. ‘ அறுபதோ எழுபதோ ‘ இருக்கும் என்று வயதை கணிக்கும் அவருக்கு வயது அநேகமாய் 70 plus இருக்கலாம். வாழ்க்கையின் பிரச்சினைகள் கணவர், மகன்கள், மருமகள் என்று அனைத்து குடும்பத்திலும் இருப்பது போல் இருக்க .. சாயம்மா இன்றும் கூலி வேலைக்கு போகிறார். புற்கள் பிடுங்கி நிலம் சுத்தப்படுத்தும் வேலை. நிலத்தின் களை எடுக்கும் அவர்களுக்கு, தன் களைகளை பற்றி கவலை இல்லை. தன்னுடைய கடின பக்கங்களை சிரித்த முகத்துடன் சொல்வதே அவர்களின் excellence ன் வேர்.
உழைப்பு, உழைப்பாளிகள் என்று ஒரு பார்வை நம்மிடம் இருக்கிறது. மே தினம் அன்று வாழ்த்துக்கள் சொல்கிறோம். மீதி 364 நாட்களும் அவர்களை ‘ கடந்து ‘ செல்கிறோம். கடைசியாக எப்போது ஒரு தொழிலாளரை நம் வீட்டுக்கு அழைத்து சாப்பிட சொன்னோம் ? (விழாக்களில் அல்ல. அவர்களுக்காகவே சமைத்து … ! ). தீபாவளி, பொங்கல் என்று வரும்போது … அவர்களுக்கும் சேர்த்து துணி எடுக்கும் அளவிற்கு நாம் சம்பாதிக்கிறோமா ? ( நம் வீட்டிற்கு வரும் ‘ வீடு கூட்டும் பெண்ணிற்கு ‘ இதை செய்திருக்கிறோமா ? ). ஒரு ஆயுள் காப்பீடு – அதிகபட்சம் 200 / 300 ரூபாயில் நல்லபடியாக அவர்களின் பேரில் செய்ய முடியும் ?செய்திருக்கிறோமா ? மருத்துவக் காப்பீடு ?
வீட்டில் மிச்சம் இருக்கும் கொஞ்சத்தை கொடுப்பதை விட .. அவர்களுக்காகவே கொஞ்சம் செய்வதும் கொடுப்பதும் அவர்களின் மன நிறைவுக்கு அருகில் அவர்களை கொண்டு செலுத்தலாம். மிச்சம் இருந்தால் நமக்கு என்பதை விட கொடிய நிலை இருக்க வாய்ப்பில்லை. என்னுடைய அப்பத்தா ஒருமுறை சொன்னாள் .. ” நீ பிறக்கும்போது ஆச்சி வீட்டில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு வந்தவள் நான். அதோடு சரி. மீண்டும் வேலைக்கு செல்லவே இல்லை. “. ஆனாலும் அந்த ஆச்சி அப்பத்தாவை விடாது. வேலைக்கு வராத போதும் .. எப்போதும் எதையாவது கொடுக்கும். அங்கே இருக்கிறது உண்மையான …. மே தின வாழ்த்துக்கள்.
யோசிப்போம்.