நகரும் புல்வெளி : 005
நகர்தல் என்ற சொல்லாடல் .. மிக முக்கியமான ஒன்று. கடந்த காலத்தை புறம் தள்ளி, எதிர்காலம் நோக்கி, நிகழ்காலத்தில் பயணிக்கும் … ஒரு இயக்கமாக நகர்தல் என்ற சொல்லாடல் நிற்கிறது. ஒரு காலத்தில் .. ஆற்றுப் படுகையில் இருந்து ‘ஒரே இடத்தில் இருக்க முடியாமல்’ நகர்ந்தவர்கள் தான் நாம். தேடுதல் என்ற தாகம் நகர்தலில் மிக முக்கியமான ஒன்று.
பயணம் என் வாழ்வின் மிக முக்கியமான resource. உடன் பயணிக்கும் குரு. நகரும் பள்ளிக்கூடம். மற்றவர்கள் பயணிக்கும்போது பயணிக்க ஆயிரம் காரணங்கள் சொல்ல ( பயணிக்காமல் இருக்கவும் .. ) எனக்கு ‘பயணிப்பதே’ மிகச் சிறந்த காரணமாக இருக்கிறது. ஒரே ஒரு பயணம் அதுவரை சேர்த்த அனுபவம் எல்லாவற்றையும் settings ல் கொஞ்சம் மாற்றி விடுகிறது. புதுப்பார்வைகள் நிச்சயம். பழைய பதிவுகள் வெளியேறுவதும் நிச்சயம்.
கோயம்பத்தூரில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் பாதை. கேரள எல்லை. ஒரு இருபது கிலோமீட்டரில் ‘ என்ன ஒரு ஆச்சர்யம் ‘ என்று கண்ணெதிரில் தன்னை விரித்துக்கொள்ளும் உலகம் ஒன்று. எல்லோரும் ஊட்டி கொடைக்கானல் என்று பயணிக்க, இப்படி ஒரு உலகம் இருப்பதை உலகம் மறுப்பதும் ஆச்சர்யம் இல்லை. அருகில் இருப்பது எப்போதுமே நமக்கு தெரிவதில்லை என்பது உண்மையே. இங்கும் வெய்யில் அதிகம் என்பது உண்மையே. ஆனாலும் பச்சை ஆதிக்கம் அதிகம் என்பதால் .. காற்றில் நிழலில் கிடைக்கும் ஈரம் இந்த இடத்தை நோக்கி இழுப்பது உண்மை.
ஒற்றை பாலங்கள் சுகமானவை. ஒரு பயணம் நிகழும்போது ..இன்னொரு பயணம் வாய்ப்பில்லை. காத்திருக்க வேண்டும். ஒரு வாகனம் வெளிவரும் வரை இன்னொரு வாகனம் வழிவிட்டு நிற்க வேண்டும். பாலத்தில் பயணிக்கும்போது … பாலம் நமக்கு மட்டுமே சொந்தம் என்ற மனநிலை இயல்பாக வரும். பாலத்தின் அந்த பக்கம் யாரும் காதிருக்கவில்லை எனில் .. இப்போது மிக மெதுவாக பயணம் பாலத்தில். நின்று, புகைப்படம் எடுத்து, நடந்து, கீழே ஆறு, மேலே ஆகாயம், ஒற்றை பாலம், ஒரு வாகனம், ஒரே மனிதன் .. மற்றும் அந்த ஒற்றை யதார்த்த நடை .. மரங்கள் கரை புடை சூழ … ஒரு புதிய உலகம் நம் கண் முன். தரையிலும் இன்றி, ஆகாயத்திலும் இன்றி … ஒரு இடை பாலத்தில் உலகம் ரசிக்கும் நானும் எனது பயணங்களும் எப்படி வேறு வேறாக முடியும் ?
ஆற்றில் குளிக்க ஆரம்பிக்க … தரை தெரியும் நீரின் அமைதி, அடக்கம், சுத்தம், சுற்றி மலை, மறையும் சூரியன், மஞ்சள் வானம், தகதகக்கும் மேகம் .. ஒரு ஆறு எனக்கு நீச்சல் குளமாவது .. எவ்வளவு பெரிய அதிசயம் !. எப்போதும் நீர் என்னை இழுத்துகொண்டே இருக்கிறது. ஆறும் ஆறு சார் உலகமும் வித்தியாசமானது. விலங்குகள் ஆங்காங்கே வரும் வாய்ப்பு இருந்தாலும்… பொதுவாக மனிதர்கள் இருக்கும் பக்கம் விலங்குகள் தலை வைப்பதில்லை. வைப்பதே இல்லை. நீருக்குள் மூழ்கி எழும்போது .. மூலிகை நீரின் தாக்கமோ என்னவோ .. உடல் சட்டென புத்துணர்வுடன், கண்கள் குளிர்ந்து, முடி பஞ்சு போல் இடதும் வலதும் பறக்க ஆரம்பித்து .. கால்களில் பிரளும் மீன்கள் கூட ஒரு வித சிறு மகிழ் நிலை உற்பதிகளாய் .. வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்வுகளில்….. மெதுவாக நகரும் நீர் உடைய ஆற்றில், ஒற்றை ஆளாய் நிற்பது பெருந்தவம். பயணம் என்று ஒன்று இருக்கும்வரை … ஆறுகளும், ஆற்றின் குளியல்களும், புகைப்படங்களும் .. கரையோடு பயணித்துக்கொண்டே இருக்கும். என் பயணங்களும், நானும், உடன் வரும் ஆறும், ஒற்றை குளியல்களும் .. வேறு வேறு அல்ல.





