நகரும் புல்வெளி : 015
I Miss You என்று ஒரு வார்த்தை / வரி ஏற்படுத்தும் மகிழ்வலிக்கு ( மகிழ்வு plus வலி என்று தானே சொல்ல வேண்டும் ! ) இணை இன்னும் இந்த உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் மகிழ்வு அல்லது வெறும் வலி என்றால், அதுவும் ஒரு சராசரி வார்த்தையாக மாறி இருக்க கூடும். ஆனால் இரண்டும் கலந்த – சுக வலியான – ஒரு இடத்தில் வாழ்கிறது அந்த I Miss You உணர்வு. ஒவ்வொரு I Miss You விற்குள்ளும் ஒரு சுக ஜனனம் நடந்து கொண்டே இருக்கிறது.
மகிழ்வலியின் ஆரம்ப புள்ளி எங்கே இருக்கிறது? முதலில் ஏன் I Miss You என்ற ஒரு உணர்வு வருகிறது ?
அவன் / அவள் நம் அலைவரிசையில் இயங்கும்போது, நாம் சொல்லாத ஆனால் நினைத்த ஒன்றை …….. கேட்காமல் சொல்லும்போது, அவன்/அவள் நமக்குள் பயணிப்பது மிக எளிதாக நடந்து விடுகிறது. அவன் / அவள் நம்முடன் பயணிக்கும்போது, நீராக மாறிய சக்கரையை போல், எனக்கான அவன் / எனக்கான அவள் என்ற உணர்வாக மாறிப்போகும் ஒன்று நமக்குள் நம்மையும் அறியாமல் சுயம்பாக எழும்பும். அப்போது அவனும் / அவளும் வேறு வேறு அல்ல. அவனும் / அவளும் origin ல் இணைந்த ஒரு மகிழ்வலி புள்ளி. பேசும்போது, அருகில் இருக்கும்போது, பயணிக்கும்போது, பேசும்போது, மௌனமாக இருக்கும்போது, இந்த புள்ளி active mode ல் கூடவே இயங்கத்தொடங்கி விடும். I Love You க்கள் பரிமாறப்படுவது இங்கே தான்.
அவன் / அவள் அருகில் இல்லை எனும்போதும் இந்த I Love You க்கள் உயிருடன் இருக்கும். ஆனால் இயக்கம் ஏதுமின்றி Passive Mode ல் இருக்கும். அந்த மகிழ்வலி புள்ளியின் இயக்கம் Passive Mode க்கு வரும்போது .. நம்மையும் அறியாமல், நாம் உணரும் I Miss You தான் அதற்கான கரு. எல்லாவற்றையும் பார்ப்போம். ஆனால் இந்த புள்ளி அதில் ஒன்றாது. எல்லாவற்றையும் கேட்போம். ஆனால் இந்த புள்ளி அதையெல்லாம் கேட்காது. எல்லாவற்றையும் உணர்வோம். ஆனால் இந்த புள்ளி உணர விரும்பாது. நமக்குள் வாழும் இந்த புள்ளி, நம்மில் இருந்து பிரிந்து செயல்படுவது போன்ற உணர்வு அது. அங்கே தான், அந்த உணர்வை தான், I Miss You என்று மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி .. மகிழ்வலியில் வாழ்கிறோம்.
தூங்கி எழுந்தவுடன், குளித்து தலை துவட்டும்போது, வாகனத்தில் அமரும்போது,
பிடித்த பாடல் ஒன்று கேட்கும்போது, சாப்பிட அமரும்போது, தலையணை கட்டிப்பிடித்து தூங்கும்போது, யாரோ யாருடனோ சிரிக்கும்போது, யாரோ யாருக்கோ எழுதிய கவிதையை படிக்கும்போது, தனியான ஒரு நடையில், வானம் பார்த்த பார்வையில், பூத்த பூவினை கிள்ளாமல் அப்படியே விட்டு செல்லும் தருணத்தில் .. I Miss You க்கள் தன் இருப்பை காட்டுகின்றன. I Miss You க்கள் ஒரு தனி உணர்வு. ஒரு மௌன தவத்தின் மென் சத்தம். அவை I Love You க்களின் இன்னொரு முகம். சொல்லப்பட்டதால் I Love You க்கள் வலுவிழந்தும், சொல்லப்படாததால் I Miss You க்கள் வலுவாகவும் வாழ்கின்றன.
ஒருமுறை I Miss You உணர்வை ரசித்தவர்கள், இந்த உலகின் வேறு எப்பேர்ப்பட்ட உணர்வையும், அதற்கு இணையாக நிறுத்த விரும்புவதில்லை. மௌனம் பொதுவாக I Miss You க்களை ஒரு நீண்ட குத்தகைக்கு எடுத்ததுபோல் நடந்து கொள்கிறது. மௌனத்தின் வேர் பெரும்பாலும் அல்லது எப்போதுமே I Miss You தான். ஒவ்வொரு மனிதனின் மௌனத்திற்கு பின்னும் ஒரு I Miss You ஆற்றின் நீர்ச் சுழல் போல் வாழ்கிறது. இந்த அவன்/அவள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்பா/அம்மா/அக்கா/தங்கை/அண்ணா/தம்பி/நண்பன்/நண்பி/காதலன்/காதலி/தாத்தா/பாட்டி .. என்ன உறவை நோக்கி வேண்டுமானாலும் இந்த I Miss You க்கள் தங்களின் தழுவலை வெளிப்படுத்தலாம். அல்லது .. இதெல்லாவற்றையும் ஒருங்கே பெற்ற அவன்/அவளை நோக்கியும் அந்த தழுவல் இருக்கலாம். I Miss You ஒருமுறை கூட சொல்லவில்லை எனில், அந்த மனிதர்கள்… மௌனம் என்கிற ஒரு உணர்வின், இன்னொரு பக்கத்தை பார்க்காமலே, வாழ்ந்து மடிந்த அதிர்ஷ்டமற்ற ஜீவன்கள் என்றே சொல்ல முடியும்.
பிறப்பு, படிப்பு, திருமணம், குழந்தைகள், இறப்பு என்ற வாழ்க்கையில் .. எல்லோருக்கும் I Miss You என்ற ஒரு உலகம் வந்துவிடுகிறது. வெளியே சொல்லாத, சொல்ல விரும்பாத ( சொல்ல முடியாத அல்ல ) அந்த உலகின் சத்தங்கள் மௌனங்களால் அடைக்கப்பட்ட பின் .. mute mode ல் சொல்லப்படும் I Miss You க்கள் இன்னும் படிக்கப்படா கவிதைகள். இந்த கவிதைகள் எப்போதும் போட்டிக்கு வருவதில்லை. வந்தால் .. இந்த கவிதைகளுக்கு இணையான கவிதைகள் இன்னும் எழுதப்படவில்லை என்பது உலகிற்கு புரியும். எங்கோ ஒரு அவன்/அவள் எந்த ஒரு நொடியிலும், I Miss You ஒன்றை, வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதுதான் இந்த உலகத்தின் மூச்சுக்காற்று. இந்த உலகத்தில்… சுவாசிப்பதும், வெளிவிடுவதும் ஒரே மூச்சினைத்தான்.