நகரும் புல்வெளி : 001
தூக்கம்
இந்த உலகின் அதிசயம் என்று தூக்கத்தை சொல்ல முடியும். இயக்கம் என்று ஒன்று இருப்பின், அது முடிவடையும் நிலை என்று ஒன்று எப்போதும் வரும். ஆனால் தூக்கம் அப்படி அல்ல. தூக்கம் மட்டுமே … முடிவும், தொடக்கமாக மாறி மாறி வரும். ஏதோ ஒரு நாளில் அதுவும் முடிவடையும்.
தூங்குவதில் இருக்கும் சுகம் பலருக்கு மிகவும் பிடித்த ஒன்று. தூக்கத்திற்காகவே ஏங்குவதும், தூங்கி எழுந்த பின் நிறைவாக உணர்வதும் ஒரு நிகழ் இயல்பு. படுத்ததும் தூங்குவது ஒரு வகை. படுத்ததும் தூங்க முடியாமல் தவித்து பின் அசதியில் தூங்குவது ஒரு வகை. புத்தகம் படித்துக்கொண்டே தூங்குவது, தொலைக்காட்சி பார்த்த படியே தூங்கி போவது, பிரயாணத்தில் தூங்குவது, இருக்கையில் அமர்ந்தபடியே தூங்குவது … என்று தூக்கம் ஏதோ ஒரு இடத்தில் நம்மை தழுவிக்கொண்டே இருக்கிறது. தூக்கம் சந்திக்கா மனிதன் வாய்ப்பில்லை. முழுமையாக தூங்கியவனும் இருக்க வாய்ப்பில்லை.
உடல் வான் பார்த்து தூங்குவது, உடல் ஒருக்களித்து படுத்து தூங்குவது, குப்புற படுத்து தூங்குவது, L போல குறுக்கி படுத்து தூங்குவது…. என்று தூங்கும் வகைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். இதற்கு மருத்துவ ரீதியாக நிறைய விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அசதியாக வந்து, படுத்தவுடன் தூங்கி விடும்போது .. இதெல்லாம் எதுவும் கண்களில் நிற்பதில்லை. தலையை அப்படியே வைத்து தூங்கி விட்டேன் – கழுத்து சுளுக்கி கொண்டது என்று சொல்வதெல்லாம் அப்போது நடப்பதே.
தலையணைகள் தூக்கத்தின் அழகான பங்குதாரர்கள். பொதுவாக மெத்தை தலையணையுடன் இருக்கும்போது ” வா வா ” என்று மௌனமாய் அழைப்பது எல்லோரின் வாழ்விலும் நாம் உணர்ந்திருப்பதே. பொதுவாக தலையணையை கட்டிப்பிடித்து தூங்குவது ஏதோ ஒரு ஏக்கத்தின் குறியீடு. அன்பும் அரவணைப்பும் நிறைய கிடைக்கும்போது, அல்லது கிடைக்காத போது .. இந்த தலையணையை கட்டிபிடித்தவாறு தூங்குதல் இயல்பாக நடைபெறுகிறது. காலையில் தலையணையை விடுவித்து எழுபவர்களும் உண்டு. இன்னும் இறுக்கமாக கட்டிப்பிடித்து தூக்கத்தை தொடர்பவர்களும் உண்டு.
தூங்கும் முன் பொதுவாக அந்த நாளுக்கு நன்றி சொல்பவர்கள் நிறைவாக தூங்குவதாக ஒரு செய்தி இருக்கிறது. பொதுவாகவே நன்றி நம்மை balanced ஆக வைத்திருக்கும். அந்த balanced நிலையே தூக்கத்தின் அடிப்படை. ” இறந்து கிடந்த உடல் போல் தூங்கி, இப்போதுதான் பிறந்த உடல் என்று எழுவதை போல் எழுந்தேன் ” என்று எழுதிய ஞாபகம் இருக்கிறது எனக்கு. ஒரு இயக்கத்தின் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்குமான .. கமா.. என்னும் .. , தான் தூக்கம் என்று சொல்வது சரியாகவே பொருந்தும். இரு நாட்களை பிரிக்கும் ஒரு மௌனப் பாதை என்று தூக்கத்தை சொன்னால் அதில் வரும் கனவுகள் அந்த பாதையின் ஓரத்தில் பூத்துக்கொண்டே இருக்கும் மஞ்சள் மலர்கள். அவை நிறம் நாளுக்கு நாள் மாறும் மலர்களும் கூட.
அந்த கனவுகள் பற்றி அடுத்த பதிவில் …





