நகரும் புல்வெளி : 020
தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து நான் விலகி வந்து நீண்ட நாட்கள் ஆயிற்று. Accelerator ல் கால் வைத்தால் சென்று கொண்டே இருக்கலாம் என்கிற ஒரு வசதியை தவிர தேசிய நெடுஞ்சாலைகள் ( NH ) எனக்கொன்றும் பெரியதாக எதுவும் செய்ததில்லை. மூன்று மணி நேரத்தில் சென்று விடலாம் என்கிற ஒரு தூரம், கிராம / சிறு நகர சாலைகளில் ஐந்து மணி நேரம் எடுக்கலாம். சாலை வசதியற்று இருக்கலாம். ஆனால் அது கொடுக்கும் அனுபவங்கள் ?
இரு புறமும் மரம் அமைத்து கொடுக்கும் பச்சை குடை. அதன் கிளைகளின் இடைவெளி மட்டுமே சூரிய வரவிற்க்கான entry point. ஆக மதிய சுடு வெயிலும் இங்கு மித வெம்மை அழகு. சாலையில் தெரியும் மரத்தின் நிழல், கதிரால் வரையப்படும் ஓவியம். ஒற்றை சாலையில் எதிர்வரும் வண்டிக்காக இடம் வலம் ஒதுங்கி பயணிக்க, எதிர் தரப்பு வாகன சாரதியின் முகம் அளிக்கும் குருஞ்சிரிப்பு. ஒற்றை சாலை virtual ஆக இணையும் தொலை தூர காதல் தொடல். பயணிக்க பயணிக்க, ஒரு ஏரி, ஒரு மலை, ஒரு சமவெளி, ஒரு ஆறு, ஒரு வயல் வெளி, ஒரு காடு … என்று காட்சி மாறும், மாற்றும் அதிசய சாலையோர உலகம். என்ன இல்லை இங்கு ?
மனிதர்கள் இங்கே நடமாகும் Google map கள். ” இந்தா .. இப்படிக்கா போய், இடது கைப்பக்கம் திரும்பி அப்படியே போ.. நீ கேக்கிற ஏரி எதுத்து வரும். அப்படியே சிலு சிலுன்னு காத்தும் வரும். ” – என்று அழகாக பேசும் வயதான, நிஜ google voice. ” இருங்க இருங்க .. ” என்று சொல்லி சாலையோர சைக்கிளை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்து ” போலாம்னே ” என்று சிரிக்கும் மனிதர்கள். ” தம்பிக்கு எந்த ஊரு ” கேட்கும் வயதான ஆனால் கம்பீர பெரியவர்கள். ” அப்படியே பறப்பாங்க. தம்பி இந்த பக்கம் வந்திருக்கீக ” என்று ஆச்சரியப்படும் வெள்ளை மீசைகள். ” என்ன சாப்பிடறீங்க தம்பி. சாம்பார் ஊத்தட்டுமா ? நம்ம தோட்டத்து காய் ” என்று அக்கா பாசம் காட்டும் வீட்டு சாப்பாடுகள். இவை எல்லாவற்றையும் இழந்துதான் நெடும் சாலைகளில் பயணிக்கிறோம் – வெட்கமே இல்லாமல். இதற்கு வரி வேறு !!
வாகனத்தை நிறுத்திவிட்டு அமைதியாக நின்று கொண்டிருந்த போது ஆடுகளை ஒட்டிக்கொண்டு கடந்தவர் கேட்டார் ..
“மணி இரண்டு இருக்குமா ? “.
” சரியா இரண்டு. எப்படி சொல்றீங்க சரியா ? ” என்று ஆச்சர்யப்பட்டேன்.
” தம்பி .. ஆடு இரண்டு மணியை போல சாப்பிடறதை கொஞ்சம் நிறுத்திடும். ஒரு அரை மணி நேரம் கழித்து மீண்டும் சாப்பிடும். அதனால தான் கேட்டேன். இப்பதான் சாப்பிடறதை நிறுத்துச்சு ”
அசந்து போய் நின்றேன். எப்படி வாழ்ந்த சமூகம் இது ? விலங்குகள் பொதுவாக இயற்கை விதிகளை ஒழுங்காக கடைபிடிப்பவை. அவற்றின் செயல் வைத்து நேரம் குறிக்கும் சமூகம் நம்முடையது. தேசிய நெடுஞ்சாலைகளில், சாப்பாட்டு கடைகள் தான் நம் நேரத்தை முடிவு செய்கின்றன. சாப்பாட்டையும்.
80 களின் சங்கீதமும், இந்த சாலைகளின் சிணுங்கல்களும் ஒரு புது உலகத்தை உள்ளே வரவைக்கும். ” அந்த மானை பாருங்கள் அழகு .. இளம் பாவை என்னோடு உறவு ” இங்கு கேட்க வேண்டும். ” கொடியிலே மல்லிகைப்பூ மனக்குதே மானே ” இந்த சாலையில் ஒரு ‘ஒலி’த்தேன். ‘பட்டு பூவே மெட்டுப்பாடு ‘ கேட்கும்போது, belt அணிந்த இருக்கையின் எல்லைக்குள் உடல் ஆடுவது ஓரு மென் அழகு. ” நீ காற்று… நான் மரம்… என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் ” என்பது இங்கே கேட்கும்போது தலை ஆட்டிக்கொண்டே கேட்டல் இயல்பாகிப்போகும். அப்போது சாலையின் ஓரத்தில் செல்லும் இளம்பெண் சிரிக்கும் சிரிப்பிற்கு இந்த உலகின் மொத்த செல்வமும் ஈடாகாது.
இப்படி ஒரு உலகத்தை மறந்துதான் NH – தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறோம். இதுவே ஒருவித ‘ சாலை தள்ளிவைப்பு வன்முறை ‘ தான். 100 120 களில் பயணிக்க, தூர தெரியும் கிராமங்கள் zoo வின் காட்சிப் பொருளாய் தெரிவதுதான் இந்த நாகரிக உலகின் மிகப்பெரிய இட ஒதுக்கீட்டு வன்முறை. நம் குழந்தைகளின் கண்களுக்கு வயல்களும், ஏரிகளும், மலைகளும், நீர்நிலைகளும், ஆறுகளும், ஒற்றை கிராம சாலைகளும், தார் அற்ற மண் சாலைகளும் காட்டப்படுவதே இல்லை. ஒருவித காட்சி விதிமீறல் / மறைப்பு இது. எதிர்கால உலகிற்க்கு, வழு வழு சாலைகளே உலகம் என்று காண்பித்து விட்டு கிராமங்கள் பற்றி, விவசாயம் பற்றி, உழைப்பவர்கள் பற்றி, கிராம வாழ்க்கை பற்றி சொன்னால் எப்படி புரியும் ? ” முதலில் அங்கு செல், அப்போது உனக்கு தானாக புரியும் ” – என்று எங்கோ படித்த ஞாபகம்.
எப்போது காட்டப்போகிறோம் இந்த அழகு, யதார்த்த, கள நிலவர சாலைகளை ? என் தங்கை மகன் ஒருமுறை இப்படி சாலையில் பயணிக்கும்போது ஒரு வயதான விவசாயியை பார்த்து சொன்னான் .. ” அவங்க வேலைக்கு போறாங்க. அவங்க கஷ்டப்படறதால போட்டுக்க சட்டை இல்லை “. அது போதும் அவனுக்கு. யதார்த்தம் புரிந்துவிட்டால் தவறுகள் நிகழ்வது அபூர்வமாகும். இந்த சாலைகள் யதார்த்தங்களை கையில் வைத்து காத்திருக்கின்றன – நம் வரவுக்கு.
ஓசூரில் இருந்து தர்மபுரி செல்ல நான் பயன்படுத்திய கிராம சாலை இது. எவ்வளவு உலகத்தரமான சாலைகளை இருத்தினாலும், அவை என்னை பொறுத்தவரை யதார்த்தத்தை By Pass செய்யும் சாலைகளே. By Pass உலகத்தை பார்த்துவிட்டு அதுவே உலகம் என்று நாம் நினைத்தால்.. யதார்த்தத்தில் வாழ மறுக்கிறோம் என்பதே முழு சோற்று உண்மை.
அடுத்த பயணத்திற்கு ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறேன். யாரும் செல்ல விரும்பா வழி அது. ஏன் எனில் அங்கே மனிதர்கள் வாழ்கிறார்கள் !
யோசிப்போம்.