நகரும் புல்வெளி : 022
கள்ளக்குறிச்சியில், வீட்டில் இருந்து ஆரம்பித்த பயணம். சேலத்தில் வியாபார நிமித்தம் பேசி முடித்துவிட்டு, சென்னை கிளம்ப எத்தனித்த போது .. இரண்டு options கையில். ஒன்று சேலம் கள்ளக்குறிச்சி சென்னை வழி. இன்னொன்று சேலம் கிருஷ்ணகிரி சென்னை வழி. நேரம் கருதி, இரண்டாவதை தேர்ந்தெடுத்து பயணத்தை ஆரம்பித்தேன். அதிலும் கிருஷ்ணகிரி செல்வதை தவிர்த்து, தொப்பூரில் பிரிந்து பொம்மிடி, மதூர், பர்கூர் வழி பயணித்து, மீண்டும் சென்னை பெங்களூர் NH அடைந்து, சென்னை நோக்கி பயணித்தேன்.
தொப்பூர் பொம்மிடி மதூர் பர்கூர் வழி – முழுவதுமே பசும்போர்வை அழகு. இந்த சாலையை தொட்ட சிறிது நேரத்திலேயே ” தொப்பையாறு அணை ” வரவேற்கிறது. அணையின் பக்கவாட்டில் செல்லும் சாலை, தேங்கிய நீரை பார்த்துக்கொண்டே பயணிக்கும் கண்கள், 360 degreeயில் .. 300 degree அளவிற்கு தலைகீழ் முக்கோண வடிவ, உயர பசு மலைகள், வழவழ ஒற்றை சாலைகள், சிரித்து நகரும் மனிதர்கள், மெதுவாக பயணித்து எதிர்வரும் வண்டிக்கு வழி விடும் இரு சக்கர, நான்கு சக்கர வாகன சாரதிகள், சாலையோர கிராம உணவு விடுதிகள், ( மீன் வறுவல் இங்கு special. ” உயிர் மீன் இல்லைன்னா கடையை மூடிடுவோம். ஐஸ் மீனுக்கு இங்கு வேலை இல்லை. அதைப்போல் நாற்றமடிக்கும் சரக்கு உலகில் இல்லை ! ), தடி கொண்டு நடக்கும் வயதான பாட்டி, நடக்க முடியாமல் நடக்கும் கிழவனை தாங்கி நடக்கும் மூதாட்டி, புல் கட்டு சுமந்து வரிசையாய் நடக்கும் சத்தம் அற்ற பெண்கள், மண்ணை வெட்டிவிட்டு, நிமிர்ந்து பார்க்கும் மண் வெட்டி கையில் வைத்த நடு வயது ஆண்கள், எட்டிப் பார்த்து தலையை உள் இழுக்கும் குழந்தைகள், அவர்களுக்கும் பின் மறையும் இளம் பெண்கள், சாலையின் குறுக்கே செல்வதை கையால் உணர்த்தி வாகனத்தை நிறுத்த சொல்லி கண்ணால் சிரித்து இந்தப்பக்கத்தில் இருந்து அந்தப்பக்கம் செல்லும் பெண், … அழகான இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்பது எவ்வளவு உண்மை. ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் க்கும் ஒரு கிராமம் வரவேற்கிறது. கிராம ஆரம்பத்திலேயோ அல்லது முடிவிலேயோ .. ஒரு தண்ணீர் குழாய் நிற்கிறது. அதை நோக்கி ஏதோ ஒரு பெண் சிகப்பு அல்லது மஞ்சள் குடத்துடன் நடந்து கொண்டே இருக்கிறாள்.
இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு சாலையை மூடி நிற்கும் மௌன புளியமரங்கள் இன்றைய ஆச்சர்யம். இதுபோல் …அன்னூரில் கவனித்து இருக்கிறேன். குஜராத்தில் நிறைய இடங்களில் கவனித்து இருக்கிறேன். பொள்ளாச்சியில் இருந்து செல்லும் சாலைகளில் கவனித்து இருக்கிறேன். ஆனால் இந்த பகுதியில் எதிர்பார்க்கவில்லை. “உங்கள் பார்வை உலகமாகாது ” என்று பயிற்சி வகுப்புகளில் நான் சிரித்து சொல்வது இப்போது என் முன் நின்று சிரித்தது. பெய்ய ஆரம்பித்த மழை வாகன கண்ணாடிக்கு வரவேயில்லை என்பதில் அந்த புளிய மர அடர்த்தி புரியும். மழை பெய்யும்போது இந்த மரங்களின் கீழ் குடையின்றி நடக்கலாம். அவ்வளவு அடர்த்தி. ஆம். த்த்தி.
மழை தான் இன்றைய பயணத்தின் சங்கீதம். வெளியே மழை சங்கீதம் இசைக்க, உள்ளே இளையராஜாவினை இசைத்தேன். இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு மழை பொழிந்தது. ஒன்று .. கண்ணாடிக்கு வெளியே unorganaized. இன்னொன்று கண்ணாடிக்கு உள்ளே …. கருவிகளின் மூலம் organanized. அவ்வளவே. வெளியே கடவுள். உள்ளே மனித ரூபத்தில் ஒரு பெயரிட முடியா இசைக்கடவுள். இரண்டிற்கும் இடையில் நடந்த சங்கமத்தின் சாட்சியாக xylo நகர்ந்துக்கொண்டிருந்தது. சில நேரங்களில் xylo தன் வேகத்தை அதுவாகவே குறைத்து பள்ள மேடுகளில் இசைக்கு தகுந்தாற்போல் ஆட்டம் போட்டது. அங்கே நிற்கிறார் இளைய என்று சொல்லப்படும் இசை ராஜா.
எனக்கு பிடித்த பாடல்கள் என்று ஒரு சேகரிப்பு உண்டு. அவை பாட ஆரம்பித்தால், ஒரே நாளில் ஆயிரம் கிலோமீட்டர் பயணம் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. ( இமயமலையில் ” சுந்தரி கண்ணால் ஒரு சேதி ” கேட்டுக்கொண்டே, அடர் வெண் பனியை சாலை ஓரத்தில் பார்த்துக்கொண்டு, உலர் உதட்டில் ஈரம் சேர்த்து … பயணித்ததெல்லாம் வார்த்தையில் சொன்னால், வார்த்தைக்கும் அனுபவத்திற்கும் இழுக்கு. Best நீங்கள் பயணித்து உணர்வதே ! ). ஒவ்வொரு பாடலாக கேட்க கேட்க, பகிர பகிர, சகாக்களின் ஆனந்தத்தை உணர உணர … நேரம் போனதே தெரியவில்லை. ” கேளடி கண்மணியில் ” முடித்த போது என்னவோ ஒரு இனம்புரியாத உணர்வு.
சந்தோஷமா?, மூச்சுக்காற்றின் ஸ்பரிசமா?, ஆதரவா?, அணைப்பா? .. புரியவில்லை. ஆனால் .. xylo வை நிறுத்திய பின் அமைதியாக நின்றிருந்தேன். வீட்டிற்குள் செல்லும் முன், அந்த பாடலை திருப்பி கேட்க வேண்டும் என தோன்றியது. இரண்டாம் முறை கேட்பதில் xylo வும் சேர்ந்து கொண்டது. ஒரு உயிரினையும், ஒரு அஃறிணை யும்.. அசையாமல் பாடல் கேட்ட கணங்கள் அவை.
” கால் போன பாதைகள் நான் போன போது ….
கை சேர்த்து மெய் சேர்த்த மாது ” …
வரி என்னமோ சொல்லியது. யார் அந்த மாது ? கால் போன பாதைகளில் அவள் எங்கு, எப்படி, எதற்காக, ஏன் வந்தாள் ? ஏன் கை சேர்த்து, பின் மெய் சேர்த்து தன்னை புரிய வைக்க வேண்டும் அவள் ? அந்த ஆணுக்கும் அந்த பெண்ணுக்கும் கை சேர்தலே ஒரு மகிழ் அனுபவம் எனில், மெய் சேர்தல் தேவையற்ற ஒன்றுதானே ?. அல்லது … கை சேர்தல் யதார்த்தமாகும் போது, மெய் சேர்தல் ஒரு follow up ஆகிவிடுமோ?
இசை இந்த வரிகளை கடந்து, முன்னால் வந்து, இதய விலா எலும்புளின் வெளிப்புற சிலிர்க்கும் தோலை வருடிக்கொடுத்தது. யாரோ எங்கோ ஒரு வயலினை இசைக்காமல் வைத்திருப்பதை உணர்ந்தது போல் நெஞ்சு சிரித்தது. சில கேள்விகளை உள்ளுக்குள் கேட்டது. பின் ஏதோ சிலவற்றை வெளியே பேசியது. ராஜா ராஜா தான். அந்த உள் உணர்வு சிரித்தது, கேள்வி கேட்டது, வெளியே பேசியது… அனைத்தும் ராஜாவிற்கு மட்டுமே கேட்கும். ஆம். எல்லா நாட்களிலும்.
வீட்டிற்குள் வந்து மெத்தையில் விழுந்த போது …
மென் தலையணை ஒன்று
நெஞ்சு முழுக்க
ஒட்டிக்கொண்டு
அமைதியாய் ரீங்கரித்தது.. ..
“கை சேர்த்து, மெய் சேர்த்த மாது ”
ஆம்.
ம்.