தெரிந்ததும் தெரியாததும் 009
தெரிந்ததும், தெரியாததும் :
ஒரு உணவு விடுதிக்கு செல்கிறோம். உணவு இன்ன இன்னது வேண்டும் என்று சொல்கிறோம். உண்கிறோம். மகிழ்கிறோம். திரும்பி விடுகிறோம். அதையும் கடந்து …
அந்த உணவு விடுதியின் சுவற்றில், ஓவியங்கள் அழகாய் வரையப்பட்டு இருந்தால், ஒவ்வொரு ஓவியமும் உயிர் பெற்று உங்களுடன் பேச ஆரம்பித்தால், ஒரு ஓவியத்தை புகைப்படம் எடுக்கும்போது … எதையோ உண்ட நிறைவு தோன்ற ஆரம்பித்தால், யார் அந்த ஓவியன் என்ற கேள்வி முதல் ஓவியத்திலேயே வர ஆரம்பித்தால் … பசியை தாண்டி சிறிது கண்களுக்கும் ஈயப்படும் என்று அர்த்தம். What a Visual Treat to Eyes !
ஓவியங்கள் என்பவை என்ன ? ஒரு ஓவியன் சமுதாயத்தோடு பேச முற்படுவது. அல்லது ஒரு சமுதாயத்தையே தனக்குள்ளே பேச வைப்பது. ஒரு மரம். அந்த மரம் முழுக்க இதய வடிவில் இலை. அதை பறிக்க முயலும் மனிதர்கள். என்ன சொல்ல வருகிறார் இந்த ஓவியர் ? மரம் தான் இதயம் – அதை இலை இலையாய் பறித்து ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோம் என்கிறாரா ? அல்லது .. எவ்வளவு கேட்டாலும் கொடுக்கிறது என்கிறாரரா ? அல்லது .. அது அமைதியாக இருக்கிறது, மனிதன் தான் அதை பிய்த்து கொல்கிறான் என்கிறாரா ? என்னமோ செய்கிறது உள்ளே .. அங்கே பேசுகிறான் அந்த ஓவியன். ஆள் இல்லை. ஆனால் பேசுகிறான். ஓவியம் மூலமாக ! What a Non Verbal Behavior !!
அதே மரத்தின் கீழ் புல்லாங்குழல் வாசித்து அமர்ந்து இருக்கும் மனிதன் … ஆம். மரம் என்று ஓன்று இருக்கும் வரை, மனித மனதில் இசை என்று ஒன்று இருக்கும். மூங்கில் ஒன்று தன்னை இயைந்து கொடுத்ததில், காற்று ஒன்று கூப்பிட்டபடி வந்ததில், வெளியேறியதில் … ஒரு மனதின் எண்ணம் இசையாக வர, அது ஒரு மரத்தின் கீழ் கேட்கப்படும் எனில் … வாசித்தவன், கேட்டவன், இதை பார்த்தவன் .. எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் என்று அர்த்தம் ! ஆம். அந்த ஓவியனின் வளைந்து நெகிழ்ந்த கோடுகளின் மூலமான சத்தமற்ற பேச்சு .. மனதிற்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இல்லை. பாடிக்கொண்டே இருக்கிறது. What a Music that was !