நகரும் புல்வெளி : 004
கோபம் :
” நல்லாருக்கீங்களா ? ”
கேட்டபடி என்னிடம் வந்தார் அவர்.
சுருக்கங்கள் நிறைந்த முகம். அமைதியான, தேடல் அற்ற கண்கள்.
” நல்லாருக்கேன். நீங்க ? “.
சொன்னார்.
” சிறு வயதில் பார்த்தது. நீண்ட காலத்திற்கு பின் இப்போதுதான் பார்க்கிறேன். ரொம்ப சந்தோஷம் ”
அமைதியாக நின்றிருந்தேன்.
“அப்போவெல்லாம் சொன்னபடி செய்யவில்லை என்றால் அப்படி கோபம் வரும் உனக்கு ”
நான் சிரித்தேன்.
” இப்போ என்ன செய்றீங்க ? ” என்று கேட்டேன்.
” இப்போதெல்லாம் கூலி வேலை பார்ப்பதில்லை. உங்க தொழில் எப்படி இருக்கு ? ” கேட்டார்.
சொன்னேன்.
” அப்படியா ? .. தொழிலை அப்பா பார்க்கிறாங்களா ?. நீங்க எங்க இருக்கீங்க ? ”
சொன்னேன்.
” இப்பவும் அப்படியேதானா ? கோபம் வருகிறதா ? ”
” நிறைய வரும். ” என்று சிரித்தேன்.
கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு சிரித்து நகர்ந்தார்.
அவர் ஒரு கூலி வேலை செய்யும் மனிதர். வருடங்களுக்கு முன் எங்கள் நிறுவனத்திற்கு வரும்போது நான் கோபமடையும் சந்தர்ப்பங்களில் என்னை கவனித்திருக்கிறார். அதைத்தான் ஞாபகப்படுத்த முயற்சித்தார். சொன்னபடி செய்யவில்லை என்றால் அப்படி ஒரு கோபம் வரும் எனக்கு. Commitment தவறும் மனிதர்களிடம் என்ன பேச்சு வேண்டி இருக்கிறது ? என்று தோன்றிய கணங்கள் அவை.
ஆம். கோபம் வந்தது அப்போது. ஆனால் இப்போது சிரிப்பு வருகிறது. சிரிப்பும் ஒரு சில நொடிகள் இருந்துவிட்டு ‘ What Next ? ‘ ஐ கொடுத்து செல்கிறது. இடையே ஒரு மென் மௌனம் வேறு. முன்னொரு காலத்தில் கோபம் வந்த செயல்கள் எல்லாம் இப்போது சிரிப்பாக மாறிப்போவதன் மாயம் என்ன ? முதிர்ச்சியா ? இதுவும் கடந்துபோகும் மனநிலையா ? உலகம் இப்படித்தான் என்ற நினைவா ? அல்லது…. இதெல்லாம் இல்லாத … ” ஹஹஹ . தயாராயிரு ” என்ற நேர்மை துணிவா ? அல்லது இது எல்லாம் கலந்த ஒன்றா ? எதுவாகினும் ஒன்று நிச்சயம் … மனிதர்கள் அப்படித்தான். கோபம் என்று ஒன்று வந்தால் வாய் வார்த்தைகளில் நான் என்னை அதிகம் ஈடுபடுத்துவது இல்லை. செயல்கள் பேசும் என்பதால், தேவையான விளக்கம் மட்டும் சொல்லிவிட்டு … பயணம் தொடர்தல் என் style. ஆனால் ஒன்று நிச்சயம்…. செயல்கள் பேசும். கண்டிப்பாக. வலிமையாக.
கோபம் வந்த மனிதர்கள் என்று ஒரு பட்டியல் இட்டு, இருபது வருடங்களுக்கு பின் என்று ஒரு பட்டியல் இட்டால் … அநேகமாய் அவர்கள் கோபம் அற்று இருப்பதன் வாய்ப்புகளே அதிகம். ஆனால் .. கோபம் அநேகமாய் வேறு ஒரு நிலையை அவர்களுக்குள் எடுத்திருக்கும். சரியாக வார்க்கப்பட்ட கோபம், ஒரு ரயிலை தள்ளிவிடும் சக்தி பெற்றது என்று எங்கோ படித்த ஞாபகம். அவ்வளவு ஆன்ம பலம் கோபத்தில் உண்டு. நான் கோபத்தை வன்மமாக வைப்பதில்லை. ஆன்ம ஆற்றலாகவே பயன்படுத்துகிறேன். ஏதோ ஒரு கோபம் ஒரு புத்தகம் எழுதி முடிக்க உதவியது. இப்போதைய கோபம் அநேகமாய் இன்னொரு புது திறமையை வெளிக்கொணர உதவும். ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும் அதை constructive inner dialogue ஆக மாற்றும்போது … கிடைக்கும் அபரிமிதமான ஆற்றல் வெளியில் எங்கும் கிடைக்காதது. அதை கொண்டு செய்யப்படும் சாதனைகள் கோபம் கொண்டிருக்கும் நமக்கு சாதாரணமான ஒன்று. அந்த கோப வலிமை புரியாத பலருக்கு அது பிரமிப்பான ஒன்று.
கோபம் வந்தால் 1 ல் இருந்து 100 வரை எண்ணுவது எல்லாம் old strategies. கோபம் வந்தால் இதுவரை செய்யாத ஒன்றை செய்து உணர வேண்டிய தருணம் வந்திருக்கிறது என்பது புரிதல் தான் இப்போதைய trend. எப்போதயதும் கூட. கோபம் உள்ளே திரும்பட்டும். எரிபொருளாக மாறட்டும். ஒரு திறமை சார்ந்த நீண்ட பயணம் ஆரம்பம் ஆகட்டும். பார்க்காத வாழ்க்கை காத்துகொண்டு இருக்கிறது அங்கே.
யோசிப்போம். கோபம் கொள்வோம். புது உயரம் தொடுவோம்





