நகரும் புல்வெளி : 008
உலகம் அப்படித்தான் இயங்குகிறது. நீ எதை select செய்கிறாயோ அதுவாக ஆகிறாய். வீடு உன் select எனில் வீட்டின் தருணங்கள், அலுவலகம் உன் select எனில் அலுவலக தருணங்கள் .. Wandering உன் select என்றால் .. ஆங்காங்கே தன்னை பச்சை ஜன்னல் வழி எட்டிப்பார்க்கும் இயற்கையின் தருணங்கள் … அப்படித்தான் உலகம் இயங்குகிறது.
சரி.. வேலைக்கு சென்றோம், சம்பாதித்தோம், இடம் வாங்கினோம், வீடு வாங்கினோம், கார் வாங்கினோம், நிரந்தர வருமானத்திற்கு இன்னொரு கார் வாங்கினோம் … அப்புறம் ? அப்புறம் அப்படியே ஒரு ஓய்வுக்கட்டில் ஒன்று வாங்கி …பரண் கவனித்து, பழைய நினைவுகள், காதலிகள், காலங்கள், செய்ய நினைத்தவை, செய்ய முடியாது போனவை, பெருமூச்சொன்று .. சூழ் உலகில் வாழ்ந்து ஏதோ ஒரு நாள் இருந்த அடையாளம் தெரியாது அழிந்து போக ……. வாழ்வதில் ஏதோ இருக்கிறது என்றே வைத்து கொள்வோம்.
இவை எதுவும் இன்றி wandering ல் அலையும் ஒரு வாழ்கையின் பக்கங்களில் … திடீரென்று தெரியும் புல்வெளி, பனி மூட்டத்தில் மறைந்து போகும் பள்ளத்தாக்கு, பச்சை வெளிகள், சொட்டு சொட்டாய் மழை, விழும் மழையில் விளையாடும் குழந்தை, அங்கே சிரிக்கும் வயதான கிழவி, அவளுக்கு வாங்கி கொடுக்கும் தேநீர், கை கூப்பி அவள் சொல்லும் நன்றி … சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடல், யாருமற்ற வெளியில் குதிக்கும் ஒரு சிலிர்ப்பு, push back seat ல் இருந்து வானம் பார்த்து, வெண் மேகம் பார்த்து, எல்லை வைத்து எழுதும் …
” அங்கே சென்றது
தொலைதூர
தொடாத
காதலுக்காகவா ? ”
என்ற கவிதையிலும் ஏதோ இல்லையா என்ன ?
இதோ ஜன்னல் வழியே வீசும் தென்றல் கேட்கும் கேள்விகள் ..
” உலகம் இயந்திரத்தனமாய் ஓடும்போது உனக்கு இங்கே என்ன வேலை ? ”
“உலகம் காசு பார்க்கும்போது நீ ஏன் என்னுடன் உணர்வு யாழ் பிடித்து நகர்கிறாய் ? ”
” ஏக்கர் இடம் வாங்குபவர்களுக்கு மத்தியில் மொத்த மலையை சூழ்ந்து வாழ உனக்கு கடினமாக இல்லையா ? ”
” செயற்கை தோட்டங்களில் தொலையாமல் இங்கே இயற்கை காடுகளில் ஏன் தொலைய விரும்புகிறாய் ? ”
” முகமூடி அணிந்து கொள். நடி. பணம் சேர். சில ஏக்கர் வாங்கி பூமி வாங்கியதாய் தலைக்கணம் பேசு. அடுத்த தலைமுறை settle ஆகி விட்டது என்று பெருமை பேசு. TV யில் வாழ்க்கையை தொலைத்து, நான்கு சுவர்களில் அமைதியாகு. அதுவே வாழ்க்கை எனப்படும் ” என்று தனியாக செல்லும் மேகம் ஒன்று கேலியாக சிரித்து சொல்லி நகர்கிறது.
இன்னொரு மேகம் ..
” வா. வந்துவிடு. எல்லையற்ற உலகில் நகர்தலை கையகம் கொள். வானம் பார். மேகம் கவனி. கவிதை எழுது. மௌனம் பேசு. தென்றல் சுவாசி. மரம் தழுவு. செடி சூழ நடை பேசு. முழுமையாக வாழ். பிடித்தவளை நினை. பிடித்த வார்த்தை சொல். ”
யார் யாருக்கு எது எதுவெல்லாம் சரியாகப் படுகிறதோ .. அதை எடுத்துக்கொண்டு ..
பயணிப்போம் !