நகரும் புல்வெளி : 011
80 களாகட்டும் .. 90 களாகட்டும்.. ராஜாவும் ரகுமானும்… தொட்ட பக்கங்களை இன்னும் யாரும் தொடவில்லை என்பதே பெரு உண்மை. சில பாடல்கள் இன்னும் என்னுடன் பயணித்து கொண்டே இருக்கின்றன. ‘ சிப்பி இருக்குது முத்தும் இருக்குது ‘ ஏற்படுத்தும் அதிர்வலைகள் அடங்க இந்த ஜென்மம் போதா. கமலும் ஸ்ரீதேவியும்… சில பாடல்களில் அவர்கள் வாழ்ந்தார்களோ இல்லையோ .. பலரை வாழ வைத்திருப்பது உண்மை. ‘ இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது ‘ .. ஏற்படுத்தும் நெஞ்சு நிறை ஞாபகங்களை replace செய்வது முடியாத ஒன்று.
ராஜாவின் சாம்ராஜ்யம் வேறு level. ‘ ஏதோ மோகம் ஏதோ தாகம் ‘ என்று நேற்று வரை நினைக்காத, ஆசை விதை முளைக்காத .. பாடல்களில் அவரின் இசைக்கருவிகள் நம்மை ஒரு இனம் புரிந்த ராக காட்டுக்குள் அழைத்து சென்று பத்திரமாக வெளியே கொண்டு வரும். ‘ கொடியிலே மல்லிகைப்பூ ‘ பாடலில் பாடல் முழுக்க வரும் … ஒரு மெல்லிய ராகம் அந்த பாடல் கேட்க ஆரம்பித்தவுடன் நெஞ்சில் ஓடுவது தான் அவரின் ஆளுமை. ‘ மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலே ‘ வில் இருக்கும் ஒரு இனம் புரியா சோகம், ‘ சங்கீத மேகம் ‘ ஏற்படுத்தும் ஒரு மகிழ் பரபரப்பு… ‘ சங்கீத ஜாதி முல்லை ‘ ஏற்படுத்தும் ஒரு இசை குறிப்பு .. ‘ நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் ‘ … என்று பாலு சார் பாடுபோது நம்மை முடியாமல் ஆடும் தலை, உடல், கைவிரல்கள்.. அங்கே தான் ராஜாவின் ‘ நான் உன்னுள் வந்திருக்கிறேன் ‘ ஆளுமையின் அட்டகாசம் ! ‘ஜனனி ஜனனி .. ஜகம் நீ அகம் நீ ‘ யெல்லாம் வேறு நிலை !! ‘பூவே செம்பூவே ‘ வில் வாகனத்தை நிறுத்திவிட்டு கதவை திறந்து நின்று கேட்கலாம் – காடுகளுக்கு மத்தியில். செந்தாழம்பூ … ஒரு வரம். நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி – என் all time favorite.
ரகுமானின் நாட்கள் என் கல்லூரி நாட்கள். ‘ வீரபாண்டி கோட்டையிலே ‘ வும், ‘ தீ தீ தித்திக்கும் தீ ‘ யிலும் … தலையணைக்கு அருகில் tape recorder வைத்து கேட்டுக்கொண்டே இருந்த நாட்கள். ‘என்னவளே’ ஏற்படுத்தும் ஓர் உணர்வு எனக்குள் இன்னும் பரவசமாய், பளிச் நினைவுகளாய். ‘நீ அணைக்கின்ற வேளையில் .. உயிர்ப்பூ திடுக்கென்று மலரும் ‘ .. இன்னும் ஓர் மலர்தலை உள்ளுக்குள் ஏற்படுத்துவது என்னமோ உண்மை. சில பாடல்கள் வெறும் பாடல்கள் மட்டும் அல்ல. பழம் இனிய நினைவுகளை ஞாபகப்படுத்தும் touch screen புள்ளிகள். ரகுமான் ஒரு ஹைக்கூ என்று நினைக்கும்போது ஒரு காவியம் எழுதி சிரிக்கிறார். ‘ மலர்களே மலர்களே இது என்ன கனவா ? ‘ உள்ளே இன்னும் கனவுகளை ஏற்படுத்துகிறது. மெல்லிசையே பாடல் ஏற்படுத்தும் ஒரு மென் குதூகலம் ஆச்சர்ய மழை. ரகுமான் இந்த தலைமுறையின் குதூகல representative.
ஆங்காங்கே சில பாடல்கள் அத்தி பூத்தாற்போல் வருவதுண்டு. ‘ மூங்கில் காற்றோரம் ‘ பாடல் உள்ளே என்னமோ செய்யும். ‘ஏதோ ஒரு பாட்டு’ ஒரு சோக ஆனால் மகிழ் உலக வருடல். ‘பொய் சொல்ல இந்த மனசுக்கு பிடிக்கவில்லை ‘ .. யுவனின் ஆழ் குரல் … என்று பூப்பவை இவை.
பயணங்களில் பாடல்கள் invisible ஐந்தாவது சக்கரம். ஏதோ ஒன்று குறைகிறதே என்று நான் நினைத்தால் அநேகமாக அது பாடல் இல்லாத இடமாக இருக்க கூடும். இப்போது North American Music என்னை தழுவுவது யதார்த்தம். ஆனால் .. வேர் ராஜாவிடம் இருந்து. ரகுமான் பல கிளைகள். இசை விழுதுகளாய் வித்தியாச உலகம்.
நேற்று கமலின் படங்களில் இருந்து பாடல்களை எடுத்தேன். ‘ காடு திறந்தே கிடக்கின்றது ‘ என்னை வரவேற்கிறது. தழுவிக்கொண்டிருக்கிறது. அநேகமாய் .. ஜெர்மனியின் செந்தேன் மலர் என்னை இன்று வசீகரம் செய்யும். மீண்டும் மீண்டும் பாட வைக்கும். English cap கமலின் expressions நினைவுகளில் வந்து செல்லும். பக்கத்து இருக்கையில் நினைவுகள் அப்பிக்கொள்ளும். கொல்லும். கொள்ளும். ஆக உலகம் பாடல்கள் இன்றி நினைக்க இயலாதது. நினைவுகளும். ஒவ்வொறு நினைவிருக்கும் ஒரு பாடல் associate ஆகிறது. Recent ஆக வந்த .. அனல் மேலே பனித்துளி .. ஏற்படுத்தும் நினைவுகள் சொல்ல இயலாதவை. அந்த பாடலுக்கான என் நாயகி, இன்னும் பிறக்கவில்லை ! பிறக்கப்போவதும் இல்லை.