தெரிந்ததும் தெரியாததும் 011
தீரா உலா என்றால் வாகனம் எடுத்து வெளியே செல்வது மட்டும் அல்ல … வெளியே செல்லும் அவ்வளவும்தான் !
பொதுவாக 05 மணி #slogging எனக்கு மிக பிடித்த விடயம். 06.45 க்கெல்லாம் உடற்பயிற்சி முடிந்து, 07 மணிக்கு உலகம் அசையத் தொடங்கும்போது … உடற்பயிற்சி முடித்து உலகம் காண்பவனாய் என் உலகம் இருக்கும். Fitness is what matters most than shape – என்பது போல .. 7 kilometer முடிந்த பின் வியர்த்து அடங்கும் நிமிடங்கள் பொக்கிஷமானவை. பெங்களூர் காலை ஓட்டத்திற்கு ஒரு அழகான களம். இன்று காலை தீரா உடற்பயிற்சி உலாவில் கவனித்தவைகளை காட்சி எழுத்துக்களாய் பகிர்கிறேன்.
பொதுவாக தெரு விளக்குகள் பனியில் ஜொலிக்கும் அழகே அழகு ! மஞ்சள் வண்ணம் திரி திரியாய் சாலையை அடையும் காட்சியை எந்த புகைப்பட கருவியாலும் கண் படுத்த முடியாது – கண்ணை தவிர ! பொழியும் மஞ்சள் என்று கவிதை எழுதலாம். யாருமற்ற சாலையில் முழு விளக்கொளியும் நமக்கே என்று கண்ணால் உண்ணுவதற்காகவே காலை வேளைகளில் உடற்பயிற்சி செய்யலாம்.
ஏகப்பட்ட ஏரிகள் பெங்களூரில். ஏதாவது ஒரு ஏரியை select செய்து அதை சுற்றி ஓட்டத்தை ஆரம்பிக்கலாம். நன்றாக கவனித்தால் பனி படர் ஏரி ஒரு வெள்ளை காகிதமாக தெரியும். சட்டென காகிதம் அலை அலையாக நகரும். அப்படி ஒரு காட்சியில் ஒரு தோனியில் ஒற்றை மனிதன் ஒருவனின் பயணம் மனதை என்னவோ செய்தது. எழவே யோசிக்கும் மனங்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் எழுந்து வந்து, தோனியை சரி செய்து, meter களில் மட்டுமே காட்சிகள் தெரியும் மிகப்பெரிய ஏரியில், இயற்கை மேல் நம்பிக்கை வைத்து, ஒற்றை ஆளாய் பயணிக்கிறான். மனிதர்களின் தேவையும், சுகமும், வலியும், பசியும் தான் அவர்கள் எழும் நேரத்தை தீர்மானிக்கிறது ! அதீத சுகம் தாமத எழுகை. அதீத வலி முன்னமே எழுதல்.
காட்சிகள் reflect ஆவது அழகு எனில், அதை காண கொடுத்து வைத்திருப்பது வரம். Reflect ஆகும் காட்சி ஏன் நமக்கு பிடித்துப்போகிறது ? உள்ளதை உள்ளபடி சொல்வதாலா ? அல்லது ஒரே விடயம் இரண்டாக இரண்டு dimension இல் தெரிவதாலா ? அல்லது ஒன்று உண்மை ஒன்று பொய் என்று புரிவதாலா ? அல்லது அனைத்து உண்மைக்கு பின்னும் அதே அளவிற்க்கு பொய்யும் இருக்கும் என்பதாலா ? என்ன காரணமாக இருக்க முடியும் ?
பறவைகள் கூட்டமாக பறப்பதை பார்ப்பவர்கள் தான் நாம். ஆனால் அதை காலை வேளையில், நாம் உடற்பயிற்சிகள் செய்யும்போது பார்த்திருக்கிறோமா ? அப்போது நம் மனம் சொல்லும் வார்த்தைகள் என்ன என்று கேட்டதுண்டா ?
” அவை கிளம்பி விட்டன. யாதும் ஊரே யாதும் கேளிர் என்றெல்லாம் சொல்லாமல் ஆனால் வாழ்ந்து காட்டும் அவை கிளம்பி விட்டன. மொழியில்லை. மதமில்லை. வீடில்லை. உணவு சேமிப்பும் இல்லாத அவை பூரண சுதந்திரத்தின் உரிமையாளர்கள். ”
என்றெல்லாம் உள்ளே மனம் சொல்லும் வார்த்தைகள் உங்களுக்கு கேட்டிருக்கிறதா ? இல்லை எனில் நாளை அதிகாலை ஏதோ ஒரு ஏரியை நோக்கி நீங்கள் பயணிக்கும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம் !
சூரிய உதயம் தான் காலை வெளியின் கிரீட நிகழ்வு. இதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே, வரும் நிகழ்வை வாழ்நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். இமய மலையில் நான் பார்த்த சூரிய உதயம் என் வாழ்நாளின் பெரும் பாக்கியம். வெளி வந்த ஒளி நீரில் ஏற்படுத்தும் மினுமினுப்புகள் போல ஒரு காட்சி அழகு இவ்வுலகில் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இரண்டு மணி நேர இயற்கை இணைவில் மனம் சுதந்திர காற்றை சுவாசிக்க, உடல் உள் வந்த oxygen ஒவ்வொரு cell ஆக புதுப்பிக்கப்பட … மீண்டும் புதியதாய் பிறந்த இந்த நாளின் முதல் குழந்தையாக திரும்ப வரும்போது .. விலக ஆரம்பித்த ஏரியை ஒருமுறை நின்று பார்த்தேன்.
” இன்னும் 22 மணி நேரம் ஆகும் மீண்டும் உன்னை பார்க்க. காத்திரு வந்துவிடுகிறேன். கடமைகளை செய்துவிட்டு ”
என்று என்னுள் கேட்ட குரல் உங்களுக்கும் கேட்கிறதா ?