மனங்களின் மறுபக்கம் 009 :
மனிதர்கள் ஆச்சர்யமானவர்கள். எதை
தவறு என்று பேசுகிறார்களோ, அதையே சரி என்று சொல்லிக்கொள்கிறார்கள். எதை சரி என்று இப்போது பேசுகிறார்களோ, அதையே தவறு என்று எதிர்காலத்தில் ஒத்துக்கொள்கிறார்கள். இது காலத்தால் மாறுவது தான். நான் அதை சொல்லவில்லை. நான் சொல்வது வேறு. இப்போது சொல்லும் தவறு, இப்போது சொல்லும் சரி என்ற கருத்துக்களால் அவர்கள் இழக்கும் உறவுகளை அவர்கள் உணர்கிறார்களா என்பதே எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும் கேள்வி !
ஒருமுறை என்னுடன் ” சரி தவறு ” என்று வாதம் செய்ய முயற்சித்து தோற்றவர் .. மெதுவாக விலகினார். சில நாட்களுக்கு முன் என்னை சந்தித்த அவர் ” சரி தவறு ” பற்றி மீண்டும் பேசி, அப்போது முதிர்ச்சி இல்லாமல் பேசிவிட்டதாகவும், பொறுத்து கடக்கும்படியும் request செய்து கேட்டுக்கொண்டார். நானும் சிரித்து கடந்தேன். அப்போது அவர் சொன்ன வரி இங்கு முக்கியமானது …
” தொலைவில் இருப்பதை உயரத்தில் இருந்து பார்ப்பவர்களால் சொல்ல முடிகிறது. ஆனால் உயரம் குறைந்து நிற்பவர்களால் பார்க்க முடிவதில்லை. ஆகையால் உயரத்தில் உள்ளவர்கள் சொல்வது உயரம் குறைந்து நிற்பவர்களால் புரிந்து கொள்ள இயலாது போகிறது ”
என்ன செய்ய வேண்டும் ?
இந்த உலகில் சரி தவறு என்று எதுவும் இல்லை. உங்களின் பார்வையில் சரி என்பது எனக்கு தவறாக படக்கூடும். அதே சமயம் .. என் சரி உங்களுக்கு தவறாக பார்க்கபடக் கூடும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வளர்ந்து வாழ்ந்து ரசித்து மகிழ்ந்து தோற்று சோர்ந்து வென்று வந்தவர்கள். ஒரே பிரச்சினையை ஒவ்வொருவரும் வேறு வேறு கோணங்களில் பார்ப்பது இயல்பே என்று நமக்கு புரிந்துபோனால் … நீங்களும் நானும் கருத்து வித்தியாசம் வந்தாலும் .. சிரித்து பேசிக்கொண்டு இருப்போம் !
காலம் தன் பங்கை செய்ய ஆரம்பிக்கும்போது, சரி தவறுகள் வேறு வடிவம் எடுக்கின்றன. காலத்தை விட ” நான் ” பெரியவன் என்கிற எண்ணமே … நம்மை சரி என்றும் தவறு என்றும் யோசிக்க வைக்கிறதோ?
கடந்த கால நிகழ்வுகளை எதிர்காலங்கள் மட்டுமே சரி அல்லது தவறு நிர்ணயிக்கின்றன. நிகழ்காலங்கள் கூட .. நிர்ணயிக்கும் சக்தி அல்ல. அப்படி இருக்கும்போது … நடப்பதை எதிர் ‘ கால ‘ம் மட்டுமே முடிவு செய்யும் எனில் … நீங்கள் நிகழ் காலத்தில் முழுமையாக சுவாசித்து வாழ்ந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம் !!





