நகரும் புல்வெளி : 025
பெரும்பாலான பயணங்கள் ஆரம்பித்தோம் முடித்தோம் என்றுதான். ஆரம்பிக்கும்போதே, முடிக்கும் இடம் எப்போ வரும் என்ற சிந்தனையுடன் ஆரம்பிக்கப்படும் பயணங்கள் பயணங்களே அல்ல. அவை இடமாற்றங்கள்.
கிராமத்து ஆளற்ற இருவழி ஒற்றை சாலை, பசுமை மரங்களால் முழுவதும் மூடப்பட்ட தூரத்து வட்டம், கண்ணாடியில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளி… இரண்டும் என்னை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்தன. வாகனம் சாலை ஓரம் மௌனமாக ஒதுக்கி கொண்டது. ஒரு நடை ஆரம்பித்தது.
தூறல்களின் அழகு தரையில் விழுந்து தெரிப்பதில் மட்டுமல்ல. தலையில் விழுந்து தெரிப்பதிலும் தான். சீவப்பட்ட முடி, பக்கவாட்டில், முன்னே, பின்னே மடிய .. ஆரம்பிக்கிறது மழைத் தூரலின் ஆளுமை. சில துளிகளுக்கு பின் தலை பழகிவிட, நெற்றி வழி வெளிவர முயற்சிக்கும் தூரலின் ஓட்டம் தான் இந்த உலகின் ஓடும் இயலின் அழகு.
சட்டை நனைய, திடீரென்று கிடைத்த ஒரு சிறு குளிரில், உடல் மெது நடுங்க, நடந்த ஒரு நடை மனித வாழ்வின், மகிழ்வின், ஒரு உதாரணத் தேன். எதிரில் பனை ஓலை வைத்து, நனையாமல் நின்ற சிறுவன் தெளித்த ஒரு சிரிப்பு, சட்டென நனைந்ததால் நிறம் மாறிய சாலை .. என்று சுற்றி நடக்கும் மாற்றங்களில் மனம் புது இசையை கண்ணில் மீட்ட, அந்த கண்ணிலும் ஒரு தூறல் தெறித்து ..காட்சியை ஈரமாக்கியது.
” என்ன நனைஞ்சிகிட்டே இருக்கீக ?. இப்டி வாங்க. ” என்று சிரித்தார் மரத்தடியில், வயதான மீசை நனைய நின்ற பெரியவர். சுமாரான உயரம். பூசினாற்போல் தேகம். விரிந்த மார்பு, கூர்மையான கண்கள், பரந்த நெற்றி, வலது கண்ணுக்கு கீழ் ஒரு மரு, தலை தெரிய தன்னை மறைக்க ஆரம்பிக்கும் கேசம், வெள்ளை சட்டை, வேட்டி, ஒரு கைத்தடி. அருகில் நனைந்துகொண்டு நின்ற சைக்கிள் அவருடையது என்று மௌனமாக சொல்லியது.
சிரிப்பை வாங்கிக்கொண்டு அருகே சென்று நின்றேன்..
” இப்டி வாங்க. புது மழ. சளி பிடிக்கும். ” நகர்ந்து இடமளிக்கும் அவரை வியப்பாக பார்த்தேன். யார் இவர் ? ஏன் என்னை பற்றி கவலைப்பட வேண்டும் ?
” கார்ல வந்தீகளா ?. கார நிறுத்திட்டு நடந்து வந்தீகளா ? ” சிரித்து கொண்டே கேட்டார்.
” ஆமா. ”
” பொதுவா நிறுத்த மாட்டாகளே. பறப்பாங்க. ஓரமா தண்ணி மேல அடிக்கிறத கூட கவனிக்காம பறப்பாக. நீங்க ஆச்சர்யம்தே” சிரித்தார்.
மழை வலுத்தது.
” கிராமத்து மக்க மழைய பார்த்தா நின்னுடுவாங்க. மழ தா தெய்வம். மொத மழைய கும்பிடுவாங்க. அப்புறம் எப்ப வந்தாலும், எங்க இருந்தாலும் கைய எடுத்து கும்பிடுவாங்க. மொத துளிய கண்ல வச்சுக்குவாக. நகரத்தில மழய பாத்து ஏன் ஓடராக ன்னு புரியல ” வெள்ளந்தியா சிரிச்சார் அவர்.
” மழ வந்தா நிக்கணும். வணங்கனும். முதல் துளி நமக்கு. அதில நனையனும். நன்றி சொல்லிட்டு கொஞ்சம் நனைஞ்சி, பின் ஓரமா ஒதுங்கனும். மழ இல்லாட்டி ஏது உலகம் ? அத பாத்து ஓடக்கூடாது. நிக்கணும். அதுதா அதுக்கான மரியாத. அடுத்த முறை .. மழ பெஞ்சா, நின்னுடுங்க தம்பி. நின்னு கும்பிடுங்க ”
அமைதியா நின்றேன். இவ்வளவு இருக்கா மழைக்கு பின்? ஏதோ பெய்கிறது என்பதை தவிர யோசித்ததில்லையே? கொஞ்சம் சூடு தணியும் என்பதால் மழையை வரவேற்கும் சுயநல பார்வை தவிர மழையை நன்றியோடு பார்த்ததுண்டா ? நன்றி சொன்னதுண்டா ? முதல் முறையாக கை கூப்பி நன்றி சொன்னேன்.
” அவ்ளோதா தம்பி. இத செஞ்சா போதும். இயற்கை நம்மை கைவிடாது ” சிரிச்சார்.
வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது. ஒரு மழையில் நடக்க முயற்சித்த எனக்கு, ஒரு பெரிசின் மழைப்பார்வையை யதார்த்த தொனியில் காட்டிவிட்டு செல்கிறது. இயற்கையின் அதிசய பக்கங்களில் இதுவும் ஒன்று. இன்னொரு மழையும் என்னை நிறுத்தும். கை கூப்ப வைக்கும். நனைதல் இயல்பாகும். ஓடுதல் இருக்காது. ஓடி ஒளிய .. அது எதிரி அல்ல. நல்ல நட்பு அது. அதனுடன் பயணிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். நனைதலும், குளிர்வித்தலும் அதன் இயல்பு. அந்த மழை எல்லோருக்கும் பொது. எல்லோருக்கும் கடவுள்.
உங்களுக்கும்.