நகரும் புல்வெளி : 028
ஒரு உலகம் இருக்கிறது. நகர்தல் அங்கு முக்கிய வாழ்க்கை. அந்த நகர்தலில் அங்கு ஜாதி மதம் மேல்நிலை கீழ்நிலை என்றெல்லாம் இல்லை. நகர்தல் என்றால் நகர்தல் மட்டுமே.
இந்த நெடுஞ்சாலை தான் எவ்வளவு முக்கிய சாட்சி – வாழும் வாழ்க்கைக்கு. எவ்வளவு வாகனங்கள். எவ்வளவு மனிதர்கள். எவ்வளவு பயணங்கள். எவ்வளவு விபத்துக்கள். அவ்வளவையும் பார்த்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல், இருக்க நிச்சயம் இதற்கு தியானம் தெரிந்திருக்க வேண்டும். ஒரே நிலையில் வாழும் இதுதான் அநேகமாக யோகி என்ற பட்டத்திற்கு தகுதியானது என்று தோன்றுகிறது. திருமணம் செல்லும் கூட்டம், இறங்கி நின்று பேசும் மகிழ் வார்த்தைகளும், விபத்தின் அழுகுரலும், வெற்றி பெற்ற மனிதன் வாங்கிய புது வாகனத்தில் அமர்ந்து பேசும் பேச்சுகளும், நின்று போன வாகனத்தின் அருகில் தொலைபேசியில் யாருடனோ எரிந்து விழும் வார்த்தைகளும் … … எல்லாம் கேட்டும், மௌனியாக, மீண்டும் உதவக் காத்திருக்கும் இதை யோகி என்று சொல்லாமல் என்ன சொல்வது !
வேகமாக பயணிக்கும் மனிதர்களிடம் இந்த சாலை என்ன கேள்வி கேட்கும் ? இல்லை .. உன் வேகம் ஒரு நாள் குறையும் .. அன்று கேட்கிறேன் என்று காத்திருக்கிறதா ? வேகம் 100 க்கு கீழ் வாகனங்களை காணோம். ” 100 ல் சென்றால் 101 அடுத்து வரும் ” என்று நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்திற்க்கு வருகிறது. நகரும் இரும்பு இரைச்சல் என்று பெயர் வைக்கலாமா இந்த சத்தத்திற்கு ? எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து, ரர்ர்ர்ரெர் என்று .. வாகன இரைச்சல் காதில் .. ” என்னை விட்டுவிடேன் ” என்று நகர்ந்துகொண்டே இறைஞ்சுவது போல் இருக்கிறது. ஒரு முறை வேகமாக என் வாகனத்தை கடந்து சென்ற ஒரு வாகனத்தை, அதில் இருந்த மனிதர்களை, அடுத்து வந்த தேநீர் விடுதியில் சந்தித்தேன்.. ” வேகமா போயிருக்காப்ல. கவனிக்கல. விட்டுட்டார். கஷ்டம்தான் ” என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். விபத்தை சந்தித்த யாரோ ஒருவரை பார்க்க சென்று கொண்டிருப்பார்கள் போல். அது சரி .. நீங்கள் ஏன் இவ்வளவு வேகத்தில் செல்கிறீர்கள் என்று கேட்க தோன்றியது. சூழ்நிலை கருதி கேட்கவில்லை. அவர்கள் அனைவரும் மீண்டும் காரில் ஏறும்போது ” சீக்கிரமா போ ” என்று சொல்வது காதில் கேட்டது. அந்த புத்திசாலித்தனத்தை என்ன சொல்வது என்று தெரியவில்லை.
வாகனத்தில் ஒரு புத்தகம் மொத்த பயணத்தையே, அதன் வேகத்தையே மாற்றும் …. என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? ஒரு புத்தகம் நம்மை நிதானப்படுத்தும். அதே புத்தகம் பயணத்தில் நம்மை இன்னும் அழகாக பதப்படுத்தும். NH ல் பயணிக்கும்போதும், கிராம சாலைகளில் பயணிக்கும்போதும் .. ஒரு Reading Break கட்டாயம் உண்டு என் பயணங்களில். புத்தகம் படித்து மீண்டும் பயணிக்கும்போது ..என்னமோ தெரியவில்லை .. வாகனம் 60 – 80 களில் மட்டுமே வேகம் எடுக்கும்.
ஒரு தேநீர் விடுதியில், கயிற்று கட்டிலில், அமர்ந்து புத்தகம் படிக்கும்போது பக்கத்தில் இருந்த வயதை வென்ற பெரியவர் கேட்டார் ..
“தம்பி .. ரெம்ப நேரமா படிக்கிறீக .. என்ன பொஸ்தகம் அது ? “.
சொன்னேன்.
” பொதுவா .. இப்படி படிக்க மாட்டாக. கார்ல ஏறினா கண்ணு மண்ணு தெரியாதே. பறப்பாக ” .. சிரித்தார்.
சிரித்தேன்.
” தம்பி … நாம் படிச்சதில்ல. வயலு, வாய்க்கா இப்படியே முடிஞ்சு போச்சு. பேரப்பிள்ளைக படிக்கிறத பாக்க சந்தோஷமா இருக்கும். ”
அமைதியாக இருந்தேன்.
படிக்க முடியாத ஏக்கத்துடன் இந்த உலகில் வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? நம்மில் எத்தனை பேர் அவர்களை பற்றி யோசிக்கிறோம் ? அதேபோல் பயணிக்க நினைத்து முடியாதவர்கள் …. இதே உலகில் தான் ஏக்கத்துடன் நகரும் வாகனங்களை பார்த்து வாழ்கிறார்கள். அப்படி எனில் .. பயணிக்கும், படிக்கும் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் !? பயணங்களில் coffee break போல், reading break என்று ஏன் ஒன்று இல்லை ? ஏன் நாம் அதை செய்யக்கூடாது ? பயணங்களில் வாகனத்திற்கு apply செய்ய break இருப்பதுபோல் .. எண்ணத்திற்கான ஒரு break தானே புத்தக வாசிப்பு. இந்த புகைப்படம் எடுத்த இடத்தில், ஒரு மணி நேரம் ‘ எண்ணங்கள் ‘ – MS உதயமூர்த்தியை வாசித்தேன். சுற்றிலும் மலையும், மென் தென்றலும், இதமான சூழலும், பறக்கும் வாகனங்களுக்கு மத்தியில் … அந்த கணம் ஒரு கையளவு நிகழ் சொர்க்கம்.
மீண்டும் வாகனத்தில் அமர்ந்த பின் .. அமைதியாக என்னுடன் அமர்ந்திருக்கும் அந்த புத்தகத்தை கவனிக்கிறேன். பேசவில்லை அது. ஆனால் இருப்பை உறுதியாய் வைத்து இருக்கையின் நடுவில் அமர்ந்து இருந்தது. என் இருக்கைக்கு parallel இருக்கை அது. வெறுமையான இருப்பில் உயிராய் இருக்கும் அந்த புத்தகம், கல்லூரி காலங்களில் காத்திருக்கும் காதலியை நினைவுபடுத்தும் தருணம் அது ! ஆம். மௌனமாக. சாட்சியாக.