நகரும் புல்வெளி : 032
மென் தூறலும், பனிப்புகையும், தனி சாலையும், விரும்பும் வாகனமும், புகைப்பட கருவியும், போதுமான தனிமையும் .. வேறென்ன வேண்டும் ?
என்னவோ தெரியவில்லை.. குளிர் சார் தட்ப நிலை என்னை வேறு உயரத்திற்கு அழைத்து செல்கிறது. அங்கு சிந்தனைகளின் வீச்சு வேறு நிலையில். காட்டில் காற்றில் ஆடும் ஒரு பச்சை மரம், எனக்கு சொல்லும் தாலாட்டில், தொட்டில் அற்ற ஒரு குழந்தையாய், அழகை மறந்து சிரித்து, அத்தனைக்கும் ஆசைப்படு என்று பார்ப்பவற்றை ஈர்த்துக்கொண்டே நகர்ந்து, அந்த மரத்தின் கீழ் நிற்கும்போது .. என்னை கடக்கும் ஒரு சில் வண்டு ஏற்படுத்தும் ரீங்காரம்…. அடப் போங்கய்யா .. நீங்களும் உங்களது நகரங்களும் .. என்று மனம் சொல்லி எகத்தாள சிரிப்பு ஒன்றை அவிழ்கிறது.
மலை உச்சிகளில் எனக்கு வேறு யாதும் தேவையில்லை. அந்த காற்றின் வருடலும், செடி கொடிகளின் மணமும், நேர் பார்வையில் சூரியனும், தொடவா என்று கேட்கும் மேகமும், அது கொடுக்கும் ஏகாந்தமும், மழை தொடும் மார்பும், புல் கொடுக்கும் ஒத்தடமும், படுத்துக்கொண்டு வானம் பார்க்கையில் அருகில் செல்லும் பூச்சி ஒன்று நின்று முறைப்பதும் …வேறு யாதும் தேவையில்லை எனக்கு !
சரி .. யார் உடன் வரலாம் ? எனை நோக்கி பாயும் தோட்டாவில், புரிதல் பொதித்துவைத்த மனிதம் உடன் வரலாம். அந்த மனிதம் என்னை என் போக்கிலும், அது அதன் போக்கிலுமாய் உடன் வரும். Possessive உலகின் மகிழ் தொந்தரவுகள் அங்கு இருக்க வாய்ப்பில்லை. அந்த தோட்டா எத்தனை முறை நெஞ்சை துளைத்தாலும் வெளிவருவது அன்பு எனில், இன்னுமோர் முறை துளைக்காதா என்பதே அங்கே உள்ளிருப்பு கேள்வி. மீண்டும் துளைப்பேன் என்பதே சிரிப்பு பூசிய பதில். வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது !
சம்பாதித்து கொண்டே இருக்கிறோம். ஒரு லட்சம், ஒரு பத்து லட்சம், ஒரு கோடி, ஒரு பத்து கோடி, .. இலக்கே இல்லை. என்று தணியும் இந்த இலக்கற்ற சம்பாத்தியம் ?. சரி .. சம்பாதித்து ? இடம், வாகனம், வீடு, ரொக்கம், நகை.. அப்புறம் ? .. செலவு வரின் வருந்தலும், சேமிப்பு கூடின் மகிழ்தலும். ஆண் திடீரென சோர்வதும், சிரிப்பதும் இங்கே தான். ( அவனுக்கு தகுந்த தட்ப நிலையில் பெண்ணும் ). சரி .. அதற்கு பின் ? நோய்வாய்ப்பட்டு .. சேர்த்ததை மருத்துவமனையில் கொடுத்து, உடன் யாருமே இல்லை என்று உணர்ந்து… அதற்கு பின் ? .. நாம் ஏன் இப்படி ஓடினோம் ? வாழ்க்கையை கொஞ்சம் அனுபவித்து இருக்கலாமோ என்ற கேள்வியுடன் வாழ்க்கை முடிந்துபோகிறது.
ஏன் ? இப்போதே அனுபவித்தால் என்ன ?
ஒரு 50 கிலோமீட்டெரில் இருக்கும் உலகம் கூட பார்க்காமல் அப்படி என்ன சொத்து வேண்டி இருக்கிறது ? அப்படி ஏன் அந்த பணத்தை வைத்து இருக்க வேண்டும் ? சரி. இதெல்லாம் பார்த்தால் மட்டும் போதுமா ? இதுதான் வாழ்க்கையா என்று கேட்பவர்களுக்கு .. அதையே தான் நானும் சொல்கிறேன். இதுவே அல்ல வாழ்க்கை. இதை மட்டும் பார்த்தால் போதாது. இன்னும் இருக்கிறது. ஆம். ஒரு ஜென்மம் போதாது இந்தியா முழுவதும் பார்க்க.
ஆக .. போதும் சம்பாதித்தது. வாரும் வெளியே !
( எந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டது அல்ல. விருப்பம் இருப்பின் வரலாம். பயணிக்கலாம். பார்க்கலாம். ஆம். ம். )