நகரும் புல்வெளி : 033
மனிதர்களிடம் எப்போதும் ஏதோ ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கிறது. எதை நோக்கியோ, எதற்காகவோ, சென்று கொண்டே இருக்கிறார்கள். நகர்தல் இயல்பு எனினும், தேடலுடன் கூடிய நகர்தல் எழுப்பும் சில கேள்விகள், இன்னும் பதில் கண்டுபிடிக்க முடியா கேள்விகளே. அப்படி எதை தேடி நகர்கிறோம் ?
நாம் தேட முயற்சிப்பது பணம் என்று ஒரு குரல். இல்லை என்று தோன்றுகிறது எனக்கு. பணத்தேடலுக்கு பின், ஏதோ ஒரு அங்கீகாரம் இருப்பதாய் நான் கவனிக்கிறேன். ” நான் உன்னை விட பெரியவன் ” என்று காட்டிக்கொள்வதில் இருக்கும் ஏதோ ஒரு அங்கீகார பசி தான் மனிதர்களை பணம் நோக்கி செலுத்துகிறது. வீடு சொந்தமாய் வாங்கியவுடன், வாகனம் வாங்கியவுடன், வங்கியில் கொஞ்சம் இருப்பு உயர்ந்தவுடன் .. சிறு வயது முதல் அவன் நடந்து சென்ற அதே சாலை அந்நியமாய் தெரிவது இதனால்தான். ” நல்லா இருக்கீங்களா ? ” என்று கேட்ட பக்கத்து வீட்டம்மாவை இப்போது பார்க்கவே முடியாதபடி மதில் சுவர் எழுப்பி தன்னை அடைத்துக்கொள்வதில் ஆரம்பம் ஆகிறது அவனின் அங்கீகார பசி.
நாம் தேட முயற்சிப்பது இப்போது இருப்பதை விட ஒரு படி மேலான சிறந்த வாழ்க்கை என்று ஒரு பதில். அங்கே இன்னொரு கிளை கேள்வி. சிறந்த வாழ்க்கை என்றால் என்ன ? புறம் வளர்தலா ? அகம் நிறைவைடைதலா ? புறம் வளர்தல் என்பது அசையா சொத்துக்கள் வளர்வது. இது தேடலின் கருவாக இருக்க வாய்ப்பில்லை. ஏன் எனில், அசையா சொத்து வளர்வதால், தேடுதல் நிற்பதில்லை. அகம் நிறைவடைதல் என்பது ஆழ்மனம் நிகழ்காலத்தில் லயித்து வாழ்வது. கடந்த காலமும், எதிர்காலமும் மறந்து .. முழுக்க நிகழ் கால வாழ்க்கையில் வாழ்வது. இது ஓரளவிற்கு உண்மை என்று தோன்றுகிறது. இந்த தேடலில், நிகழ்காலத்தில் வாழ பழகியவுடன், தேடல் நின்று போவதை உணர முடிகிறது. அல்லது வேகம் குறைகிறது.
நாம் தேட முயற்சிப்பது ” ஒன்றுமேயில்லை ” என்ற புரிதல் ஒரு பதில். ஆம். கடைசியில் ஒன்றுமற்ற இந்த வாழ்க்கைக்கு எதற்கு இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் ? என்ற கேள்வி உள்ளே வரும்போது … வரும் நிதானம் தேடலை கொஞ்சம் ஆத்மார்த்தமாய் நிறுத்துகிறது. எப்பேர்ப்பட்ட மனிதனும், ” அட .. கடைசியில் ஒன்றுமில்லை ” என்று உணரும்போது சட்டென நின்று போகிறான். தேடுதலை கை விட்டுவிட்டு, ஒதுங்கி நிற்கிறான். ஓடும் மனிதர்களை பார்த்து யோசிக்க ஆரம்பிக்கிறான். ஆச்சர்யமான கேள்வி ஒன்றை கேட்கிறான். ” ஏன் இப்படி ஒரு ஓட்டம் ? எதை தேடி ஓடுகிறார்கள் ? “. ஆனாலும் உலகம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
வானவில் பொதுவாக அனைத்து நாட்களிலும் தெரிவதில்லை. ஒன்றுமில்லா வாழ்க்கை இது என்று நாம் உணரும் நாள், இனி, வானவில் பார்க்கும் நாள் ஆக மாறக்கூடும். வானவில் பார்க்கும்போது .. ” இந்த ஒன்றுமற்ற வாழ்க்கைக்கு எதற்கு இப்படி ஒரு ஓட்டம் ? ” என்ற ஒரு கேள்வி அநேகமாய் உள்ளே எழக்கூடும். அதற்கான பதில் .. ” ஆம். ஆதலால் .. இக்கணம் நிறைவாக வாழ்வேன் ” என்பதே. அப்படி நினைக்கும்போதே .. வானவில் மறைந்துவிடும். ஆம். அதன் வேலை நிகழ்காலத்தை ஞாபகப்படுத்தி மறைவதே.
நிகழ்கால வாழ்க்கை வாழும் ஒவ்வொருவரும், ஒரு வானவில்லை உடன் பார்க்கும் மனிதர்களே. இப்போது, இங்கே, இந்த நொடி .. நிஜம். உண்மை. சத்தியம். நிதர்சனம். ஆக .. இனி வானவில் கவனித்தால், ஒரு சில நொடிகள் நின்று அதன் குறியீடை கவனிப்போம். ” இந்த நொடி வாழ்வே யதார்த்தம் ” என்று யோசித்து நகர்தல் தொடர்வோம்.
உங்களின் நகர்வில் ஒரு வானவில் தெரிய என் வாழ்த்துக்கள்.
படம் : வைபவ்.