நகரும் புல்வெளி : 024
பயிற்சி வகுப்பு முடித்து விட்டு, நேற்று இரவு திரும்பி வந்துகொண்டிருந்த போது, ( ஞாயிறு இரவு 10 மணி அளவில் ), tyre Puncture. சனிக்கிழமை நீண்ட பயணம், ஞாயிறு முழு நாள் பயிற்சி என்று இருந்ததில், உடல் அசதியோடு ‘ போய் படுக்கலாமே ‘ என்று சொல்லிக்கொண்டிருந்தது. எந்தக் கடையும் இல்லை என்பதால், என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு திருமண மண்டபம். அங்கே இருந்த காவலாளியிடம் நடந்ததை சொன்னேன்.
“பயப்படாம விட்டுட்டு போங்க. முக்கியமான பொருல்லாம் எடுத்துக்குங்க. நா பாத்துக்கறேன் ”
முக்கியமான பொருளே கார் தானே என்று மனதில் தோன்றியது. எனக்குள் சிரித்தேன். இருந்தாலும், தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு, காரை அங்கேயே நிறுத்தி விட்டு வந்தேன்.
” கவலையே வேண்டாம் சார். எல்லாம் பத்திரமா இருக்கும். ” சிரித்த அந்த தொழிலாளியின் முகம் நம்பிக்கை அளிக்க அங்கிருந்து வீடு வந்தேன்.
காலையில் tyre பிரச்சினைகளை சரிசெய்து, two wheeler ஐ அங்கு நிறுத்திவிட்டு காரை எடுக்க வேண்டிய நிலை. இரவு இருந்த காவலாளி இப்போது இல்லை. புதிய காவலாளியிடம் நடந்ததை சொல்லும்போது ..
“கவலைப்படாதீங்க சார். இங்கே உள்ளேயே நிறுத்துங்க. பத்திரமா பார்த்துக்கறேன் ” என்று சொன்னார். உச்சரிப்பை கவனித்து .. “மதுரையா, தூத்துகுடியா” என்று கேட்டேன். ” தூத்துக்குடி ” என்று சிரித்தார்.
காரை கொண்டுவந்து water service செய்ய விட்டுவிட்டு, Two Wheeler ல் மீண்டும் வீட்டிற்கு வர முடிவு செய்த போது .. காரை அப்படியே எப்படி விட்டு விட்டு வருவது என்று யோசனையாய் இருந்தது. Water Service ன் தொழிலாளி சொன்னார் ..
” கவலை வேண்டாம் சார். எல்லாம் பத்திரமாக இருக்கும் ”
வீட்டிற்கு வந்து, two wheeler ஐ விட்டுவிட்டு, சாலைக்கு வந்த போது .. ஒரு two wheeler ல் வந்தவர் , வண்டியை நிறுத்தி என்ன என்பது போல் கேட்க, Water service station போகவேண்டியதை சொன்னேன்.
” வாங்க சார். Drop பன்றேன் ” என்று சொல்ல ஏறிக்கொண்டேன். Water service station வந்தேன். கார் தயாராக இருந்தது.
ஒவ்வொரு முறையும் பிரச்சினைகள் வரும்போது .. ” கவலைப்படாதீங்க சார் ” என்று ஏதோ ஒரு சாமான்யன் வந்துவிடுகிறான். ( அவன் என்பது ஒரு உரிமையில் வருவது ! ). அவன் யாரோ, எவனோ, எதற்கோ .. வருகிறான். ஆனால் உதவி என்பது அவனால் மட்டுமே கிடைக்கிறது. உதவி செய்துவிட்டு மறைகிறான். எந்த பிரதிபலனும் அவன் எதிர்பார்ப்பதில்லை. ஒரு டீ கூட அவன் எதிர்பார்ப்பதில்லை. சிரித்த முகமும், ” கவலை படாதீங்க சார் ” .. என்ற சொல்லும் அவன் குணாதிசயம். இந்த சாமான்யன் தான் .. இந்த உலகின் அச்சாணி. அவன் ஏற்படுத்தும் நம்பிக்கையும், அன்பும் .. இந்த உலக இயக்கத்தின் ஆதாரம். அவனுக்கு என் நன்றிகள்.
யோசிப்போம்.