நகரும் புல்வெளி : 026
நிலம் முடிவடையும்போது, நீர் துவங்கும். நீர் முடிவடையும்போது நிலம் துவங்கும். துவங்குதலே இங்கு முக்கியம். முடிவடைதல் அல்ல.
பொதுவாக Negativity என்று ஒரு வார்த்தை முடிவடைதலுடன் மட்டுமே தொடர்பாகிறது. ” எல்லாம் முடிஞ்சு போச்சு ” என்பது எதையோ இழப்பதையும், ” அதெல்லாம் ஒரு காலம் ” என்பது கைவிட்டு போன நிலையையும் குறிப்பதாக இருக்கிறது. ஏக்கப் பெருமூச்சு இதன் வெளி அடையாளம்.
இந்த உலகின் முடிவு என்ற ஒன்று ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரியவில்லை. ” அதான் முடிஞ்சு போச்சே .. அப்புறம் ஏன் ? ” என்று அழகாக ஆற்றை கடப்பவர்களும் உண்டு. பத்து ஆண்டுகள் ஆன பின்பும், அங்கேயே ஆற்றை பார்த்துக்கொண்டு நிற்பவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும், வாழ்க்கை யாருக்காகவும் முடிவதில்லை. வாழ்க்கை மட்டும் எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் தொடங்கும் அடங்கா பசி கொண்ட செல்ல மிருகமாக அலைகிறது. வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் மீண்டும் ஆரம்பிக்கிறது. வாய்ப்பிலா இடங்களில் மீண்டும் ஆரம்பிக்க என்று காத்திருக்கிறது. காத்திருத்தல் – சில நொடிகளுக்கு மட்டுமே.
தொடங்குவது என்பது என்ன ? ஒரு commitment. ஒரு ஒப்பந்த அடையாளம். ஏன் தொடங்குதலில் மனம் லயிப்பதில்லை ? ஏன் தொடங்குதல் பயம் ? ஏன் தொடங்குதல் பல கேள்விகளை வீசுகிறது ? ஏன் எனில்… தொடங்குதல் எப்போதும் எதிர்காலம் சார்ந்து இருப்பதால். ( முடிவது கடந்த காலம் ! ). தெரிந்த ஒன்று ( கடந்த காலம் ), தெரியாத ஒன்று ( எதிர்காலம் ) – இரண்டிலும் ஒரு படபடப்பு மனிதனிடம் வந்துகொண்டே இருக்கிறது. கடந்த காலத்தை மாற்ற முடியாததால். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்று !
தொடங்குதலை நிகழ் காலத்தில் செய்பவர்கள் வாழ்வின் எச்சத்தை ருசிப்பவர்கள். நம்மில் எத்தனை பேருக்கு எச்சத்தின் ருசி தெரியும் ? எச்சத்தை எங்கோ சேர்த்தலில் மட்டுமே நம் கவனம் இருப்பதால், எச்சத்தின் சுகம் தெரிவதில்லை. எச்சம் ஒரு நிகழ்கால சுகம். இதை படிக்கும்போது ஊரும் எச்சிலுடன் ஒரு மெல்லிய நுரை வெடிக்கும் சத்தம் கேட்கும் – எச்சிலை அந்த சத்தத்துடன் சுவைக்கும்போது கிடைக்கும் சுகம் – நிகழ்காலத்தின் ஸ்பரிசம்.
கடந்த பத்து வருட வலி இன்னும் ஈரம் காயாது இருக்கிறது. அடுத்த பத்து வருட இலக்கு மனதில் காட்சி வடிவமாய் இருக்கிறது. இருக்கட்டும். ஆனால் .. இதை தாண்டி .. இப்போது ஒரு நொடி என்னை கடப்பது என்று ஒன்று நிகழ்கிறது. கண் இமை மூடி திறக்கும் அந்த கணத்தில், இமை ஏற்படுத்தும் ஒரு மென் சத்தம், தொடல், மூடுதலுக்கும், திறத்தலுக்கும் இடையில் புது காட்சிப் பகிர்வு தொடங்கும் அந்த கணம் … வாழ்வின் இளமையான இனிமை. இதை ரசிக்காமல் எங்கோ பார்த்துக்கொண்டு, எதையோ நினைத்துக்கொண்டு, யாரிடமோ பேசிக்கொண்டு …வாழ்வதாய் சொல்பவர்கள் வாழ்க்கையை இன்னும் வாழாதவர்கள்.
இக்கணத்தில் வாழ்வது தொடங்குதலை அழகாக்கும். இக்கணம் கொடுக்கும் கை விரல்கள் இணைதலை விட சுகம் உண்டோ கணவன் மனைவி உறவில் ?. இக்கணம் கொடுக்கும் நேர் நோக்கும் கண் பார்வையை விட சொர்க்கம் உண்டோ காதலில் ? இக்கணம் கொடுக்கும் அணைப்பை விட இதம் உண்டோ நட்பில் ? இக்கணம் கொடுக்கும் புரிதலை விட நம்பிக்கை உண்டோ வியாபாரத்தில் ? இக்கணம் கொடுக்கும் தலை வருடலை விட நம்பிக்கை உண்டோ சோகத்தில் ? .. இக்கணம் வாழ்பவர்கள் புதியதாய் தொடங்குபவர்கள். இக்கணம் வாழ்பவர்கள், இவ்வுலகின் ஆச்சர்ய புள்ளிகள்.
இக்கணம், இதை படிக்கும்போது, இங்கே இருக்கிறீரா ? ஆம் எனில் .. இப்போது புதியதாய்
உங்களால் மீண்டும் தொடங்க முடியும். வாழ்த்துக்கள்.
பயணிப்போம்.