நகரும் புல்வெளி : 030
திடீர் இரவு விழிப்பை கண்ணில் வைத்துக்கொண்டு, என்ன செய்வது என்று தெரியவில்லை. அதிகாலை விழிப்பு மனதிற்கு இதம். ஆனால் நடு இரவு அல்லது பின்னிரவு விழிப்பு ?
பின்னிரவு விழிப்பு ஏன் வருகிறது ? விரைவாய் உறங்கியதாலா ? அசதியில் உறங்கியதாலா ? பொதுவாக நான் இரவுக் குளியல் ஒன்று எடுத்துவிட்டு மட்டுமே தூக்கம் நோக்கி செல்வதுண்டு. அது கொடுக்கும் புத்துணர்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இது அனைத்து நாட்களிலும் முடிவதில்லை. சமயங்களில் அசதியில் நன்கு, மெத்தையில் விழுந்தவுடன் தூங்கிவிடுவதுண்டு. அப்படி தூங்கும் நாட்களில் அதிகாலை அல்லது பின்னிரவு விழிப்பு என்னை சந்திக்கும். திரும்பி, திரும்பி படுத்தவாறு மீண்டும் தூங்க முயற்சிப்பதை நான் செய்வதில்லை. எழுந்து, என் கவனத்தை திசை திருப்பி மீண்டும் உடல் தூங்க அழைக்கும்போது தூங்கி விடுவேன். ஆம். தூங்க அழைத்தபின், ஒரு நொடி கூட தாமதம் செய்வதில்லை.
விழித்தபின் … என்ன செய்யலாம் என்று யோசித்தபோது… ஒரு சிறு நடை செல்ல முடிவு செய்தேன். யாருமற்ற சாலைகள் வரமா ? சாபமா ? என்று தெரியவில்லை. மனிதர்கள் இல்லாதபோது சாலைகள் என்னவோ சொல்ல முயற்சிக்கின்றன. பேச முடியாது தொண்டைக்குள் வார்த்தைகளை அமிழ்த்துவது போல், எதையோ சொல்ல முயற்சித்து அடங்கிய தெருக்களாய் அவை நிற்கின்றன. என்ன சொல்ல முயற்சித்திருக்கும் ? ” போதுமா மனிதர்களே .. என்னை உபயோகப்படுத்தி ஓய்ந்தது போதுமா ? “… என்று கேட்குமோ ?
பின்னிரவில் எரிந்து கசிந்து கொண்டிருந்த தெரு விளக்குகள், யாரையும் எதிர்பார்க்காமல், நின்று, தலை நிமிர்த்தி, கண்ணீர் விடுவதுபோல் தன் செயற்கை மஞ்சள் கதிர்களை தரை நோக்கி செலுத்தி கொண்டிருந்தன. பின்னிரவில் .. தெரு விளக்குகள், தலை கவிழ்ந்து நிற்கும் மௌனத்தை கவிதையாய் எழுத ஏன் இதுவரை யாரும் வரவில்லை என்று யாரையோ கேட்க தோன்றுகிறது. யாரை கேட்பது என்று தெரியவில்லை.
பறக்கா குப்பை, தன் வீச வாசத்தை எல்லை விரிக்க ஆரம்பித்து இருந்தது. குப்பைத்தொட்டியை தாண்டி வழிந்த குப்பைகள், சாலையை தொட ஆரம்பித்துருந்தன. பக்கத்தில் படுத்திருந்த நாய்க்கு, இது எதுவும் தெரியவைல்லை. அதன் வாலும் ஆடவில்லை. சில நேரங்களில், குதிக்கும் நாய்களும் குரைத்தல் அற்று, குப்புறப்படுத்து, அசைவை தொலைத்து, மௌனம் காக்கும் அழகை ரசிக்க யாருமில்லை என்பதும் சோகமே.
யாரோ ஒரு மனிதன், வானம் பார்த்து படுத்திருந்தான். அநேகமாய் ஆழ்நிலை தூக்கம் அவனை கைப்பிடித்திருக்க கூடும். வாய் திறந்தவாறு, எந்த சலனமும் இன்றி, ஒரு உயிர்ப் பிணம் போல் அவன் தூங்கிக்கொண்டிருந்தது ஆச்சர்யம். தூக்கம் தொலைக்கும் ஒருவனுக்கு, தூங்கும் அனைவரும் ஆச்சரியமே.
இளவயது பெண்ணொருத்தி யாரோ ஒருவனிடம் எதையோ முனகிக்கொண்டு நின்றாள். ” பஸ் வந்துடும். போயிடலாம். தூக்கமா வருதாம்மா ? இன்னும் ஐந்து நிமிடம் வீட்டுக்கு போயிடலாம் ” என்று அவன் சொல்லிக்கொண்டிருந்தது காதில் தானாக வந்து விழுந்தது. இரவுகள் தன் மௌனத்தில், சிறு சத்த வார்த்தைகளையும், மென் இசையாக மாற்றுவதும் அழகே.
அறைக்கு திரும்புவது என்று முடிவு செய்து .. அதே காட்சிகளை மீண்டும் கவனிக்க விரும்பவில்லை. சில காட்சிகள் ஒருமுறை மட்டுமே பார்க்க முடிந்தவை.
நடை முடிந்து அறைக்குள் வந்தபோது .. தூக்கம் ஓரக்கண்ணில் தன்னை சிமிட்டிக்கொண்டு வந்தது. இது தூக்கத்திற்கான நேரம். விடைபெறுகிறேன்.
வாழ்க்கை தான் எவ்வளவு அழகானது.





