தெரிந்ததும் தெரியாததும் 015
Rachenahalli Lake : Bangalore. Sunset.
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மாலை வருகிறது. எதற்கு என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ? அதாவது சூரிய உதயம் அஸ்தமனம் என்பது பொதுவான அறிவியல். ஆனால் வாழ்வியலில் …? சூரிய உதயம் என்பது எழுவது போல, சூரிய அஸ்தமனம் என்பது விழுவது. அதாவது … நாள் முழுக்க செய்ய வேண்டிய கடமைகளை முடித்து ஒரு ஏரிப்பக்கமோ அல்லது கோவிலிலோ அல்லது பூங்காவிலோ அல்லது கடற்கரையிலோ …… அமர்ந்து … ஒரு சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது. கடைசியாக எப்போது அப்படி ரசித்தீர்கள் ?
சூரியன் மறையும்போது வெறும் மறைதல் மட்டுமே நிகழவில்லை. ஒளி மறையும்போது இயல்பாகவே கண்கள் இரவு என்கிற ஒன்றுக்கு தயாராகின்றன. அதாவது 06 மணிக்கு சூரிய அஸ்தமனம் நடக்கிறது எனில் .. 07 அல்லது 08 மணிக்கெல்லாம் கண்கள் தூக்கத்திற்கு தயாராகிவிடும். எடிசன் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு எவ்வளவு நல்லதோ அவ்வளவு கெட்டது. செயற்கை ஒளியை கண்கள் சூரியன் என்று நம்பிக்கொண்டு விழிப்பதில் கவனம் செலுத்துகின்றன. அதாவது இயற்கைக்கு எதிரான முதல் step இங்கே வருகிறது. கிராமங்களில் இப்போதும் 07 08 மணிக்கு அடங்கும் உலகமும் இங்கேதான் இருக்கிறது.
பறவைகளை கவனித்தால் சரியாக சூரியன் மறையும் நேரத்தில், அவைகள் கூடுகளை அடைகின்றன. மரங்கள் அவற்றின் இரவு விடுதிகள். அழகான தூக்கம் ஒன்றை நோக்கி அவை இறக்கைகளை மடித்து பயணிக்க ஆரம்பிக்கின்றன. ஆக .. இயற்கையை அவை மதிக்கின்றன. ஆனாலும் .. மனிதன் அப்போதுதான் தன் வாழ்வை ஆரம்பிக்கிறான். இன்னும் சொல்லப்போனால் night life என்று அதற்கு பெயரிட்டு கேளிக்கைகளுக்கு தயாராகிறான்.
மாலை ஒன்றில் ஒரு ஏரியை நோக்கி நம்மால் பயணிக்க முடிந்தால், நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நம்மை சொல்லி கொள்ளலாம். சூரியன் விழுந்த பொழுதுகளில் ஏரி வாங்கிக்கொள்ளும் செந்நிற வர்ணம் சூரியன் மறைந்த பின்னும் … தொடர்வதை போன்ற அதிசயம் இவ்வுலகில் உண்டா ? ஒளி கொடுத்த ஒன்று மறைந்த பின்னும், அதன் ஒளி reflections நீரில் வாழும் அதிசயம் காணும் மனிதர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
எங்கோ ஒரு மூலையில் சில செயற்கை விளக்குகள் எரிய ஆரம்பிக்கின்றன. ஆம். மனிதன் செயற்கை வாழ்வுக்கு தயாராகிறான். அவனை பொறுத்தவரை .. நாள் முடிந்து போனால், அவன் வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது. அவன் வாழ்க்கை முடியும் late night பொழுதுகளுக்கு பின் அவன் தூங்கி, எழும்போது கிடைக்கும் வாழ்வு அவனுக்கு எரிச்சலாக இருக்கிறது. எழ வேண்டுமா என்று கேட்டுக்கொண்டே எழுகிறான். அன்றைய நாள் அவனை பொறுத்தவரை எரிச்சல் நாள். ஒருவேளை அவன் சூரியன் விழும்போதே தூக்கத்தில் விழுந்து இருந்தால் அடுத்த நாள் அவனின் சொர்க்கமாக மாறக்கூடும்.
சரி .. சீக்கிரமாக தூங்க என்ன செய்ய வேண்டும் ? அலுவலக நேரம் தவிர்த்து, நம் நேரத்தை தொலைக்காட்சிக்கு செலவிடுவதை தவிர்க்கும் பட்சத்தில், புத்தகம் படித்தலில் சில மணித்துளிகள் செலவிடும் பட்சத்தில், நல்ல இசை கேட்கும் பட்சத்தில், குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடும் பட்சத்தில், அருகே இருக்கும் ஏரி நோக்கிய நடை ஒன்றை ஏற்படுத்திகொள்ளும் பட்சத்தில், …. கண்கள் அயர்ந்து தூக்கம் நோக்கி நாம் விரைவாக பயணிக்க கூடும். அநேகமாக அடுத்த நாள் நமது சிறப்பான நாட்களில் ஒன்றாக மாறக்கூடும்.
இயற்கை சொல்லும் ” தூக்கம் நோக்கி பயணி ” என்று சொல்லும் சமிக்ஞையே சூரிய அஸ்தமனம். அதை விலங்குகள் மதிக்கின்றன. பறவைகள் மதிக்கின்றன. வீட்டில் நாயும், பூனையும் மதிக்கிறது. மனிதன் மட்டுமே செயற்கை ஒளியை மகிழ்ச்சியாக பார்க்கிறான். இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி அவன் late night party என்று ஒன்றில், மாலையில் சூரிய அஸ்தமனத்தில் அவன் தொலைத்த மகிழ்ச்சியை தேடுகிறான். கிடைத்ததாக மகிழ்கிறான். ஆனால் மறுநாள் யதார்த்த பகலை வெறுப்புடன் நோக்குகிறான். என்ன ஒரு மனநோய் பார்வை இது ?
யோசிப்போம். ஒரு வாரத்தின் மாலை வேளையில், ஒரு முறையாவது, ஒரு ஏரி நோக்கி பயணிப்போம். அந்த மாலைப்பொழுது நம் கண்களுக்கு பழகட்டும். அந்த மாலைப்பொழுதின் அமைதி மனதை குளிர செய்யட்டும். ஆக .. திரும்ப வீடு செல்லும்போது .. தூக்கம் வசப்பட்டு, அதன் நேரத்திற்காக காத்திருக்கும். அநேகமாக ஒரு நல்ல தூக்கத்திற்கு உடல் தயாராவதை நாம் உணர முடியும்.
ஏதோ ஒரு ஏரி .. நம்மை ஆசுவாசப்படுத்த காத்துகொண்டு இருப்பதை எப்போது நாம் உணரப்போகிறோம் ?
யோசிப்போம். பயணிப்போம். பகிர்வோம்.